(23.4.2025 நாளிட்ட ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த பதில்களுக்கான பதிலடி இங்கே!)
கேள்வி: ஏழையும், பணக்காரனும் இறைவனை தரிசிக்கும் போது இறைவனிடம் என்ன கேட்பார்கள்?
பதில்: எனக்குப் பணம் வேண்டும் என்று கேட்பான் ஏழை. எனக்கு நிம்மதி வேண்டும் என்று கேட்பான் பணக்காரன்.
பதிலடி: அவனன்றி ஓர் அணுவும் அசையாது; எல்லாம் அவனவன் தலையெழுத்து என்று சொன்ன பிறகு ஏழை எங்கே வந்தான்? பணக்காரன் எங்கே வந்தான்?
– – – – –
கேள்வி: கடவுளை எப்போது உணரலாம்?
பதில்: தன்னை மறக்கும்போது.
பதிலடி: தன்னை மறந்தால் ரோட்டில் அம்மணமாகப் பைத்தியம் பிடித்துத் திரிய வேண்டியதுதான்.
– – – – –
கேள்வி: அறிவு, ஞானம் என்ன வித்தியாசம்?
பதில்: புலன்களால் பெறுவது அறிவு, புலன்களைப் அடக்கிப் பெறுவது ஞானம்.
பதிலடி: எழுத்தாளர் அனுராதா ரமணன் காஞ்சி சங்கரமடம் வந்தபோது ஜெகத் குரு ஜெயேந்திர சரஸ்வதி கையைப் பிடித்ததும் கூட புலன்களை அடக்கிப் பெற்ற ஞானம்தானோ! அந்த ஜெகத்குருவுக்கு வக்காலத்து வாங்கி திருவாளர் குருமூர்த்தி முஷ்டியைத் தூக்கிக் கொண்டு வந்தாரே அதுவும் அந்தப் புலன்களை அடக்கியாளும் பட்டியலில் வருமோ!
கேள்வி: தமிழக அரசியலில் அண்ணாமலை போன்ற நேர்மையானவர்களை, தி.மு.க. – அ.தி.மு.க. போன்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?
பதில்: தமிழக அரசியலில் நேர்மை அவசியமில்லை என்று முடிவு செய்துவிட்ட மக்களின் மனதை, அண்ணாமலை போன்ற நேர்மையானவர்கள் கெடுத்து விடுவார்களோ என்ற அச்சம்தான்.
பதிலடி: அண்ணனைக் காட்டிக் கொடுத்த விபீஷணனுக்குத் தானே ஆரியம் ஆழ்வார் பட்டம் கொடுத்தது. நேர்மையானவர் கையில் கட்டிய கடிகாரம் ரொம்பவும் மலிவு – அதாவது ரூபாய் 5 லட்சம்தான்!
– – – – –
கேள்வி: கரை வேட்டி அணிந்த தி.மு.க.வினர் நெற்றியில் பொட்டு வைக்க வேண்டாம், கயிறு கட்ட வேண்டாம் என ஆ.ராசா சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகப் பேசியுள்ளாரே?
பதில்: ஆ.ராசா கூறுவது நடந்தால், தமிழகத்துக்கு அதைவிட நல்லது நடக்க முடியாது. யானை தேய்ந்து எறும்பானது போல, தி.மு.க. தேய்ந்து தி.க. போல ஆகிவிடும்.
பதிலடி: நெற்றியில் டிராயிங் வரைந்து தன் மதத்தை அடையாளம் காட்டுவதும், காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று லண்டன் பிரிவு கவுன்சில் வரை செல்வதுதான். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமா? தி.க. கட்டெறும்பா? அது யானை காதுக்குள் புகுந்தால் என்னாகும் தெரியுமா?
– – – – –
கேள்வி: திறமையுள்ள பல இளம் வீரர்கள் வாய்ப்பிற்காக தவமிருக்கும்போது, தோனி போன்ற வீரர்களை அய்.பி.எல்.லில் சேர்த்துக் கொள்ள தேவை என்ன?
பதில்: திறமைக்காகவா அய்.பி.எல். நடக்கிறது. திறமையுள்ளவர்களை உள்ளே விட்டால், இப்போது இருப்பவர்களின் விளம்பர மார்க்கெட் என்ன ஆகும்?
பதிலடி: கிரிக்கெட் விளையாட்டு என்றாலே அது பார்ப்பனர்களுக்கே உரிய தனி உரிமையாகிவிட்டது. அது ஒரு பணம் காய்ச்சிமரம்! முதுகைத் தடவிப் பார்த்து பூணூல் தென்பட்டால்தான் கிரிக்கெட்டில் இடம் கிடைக்கும்.
ஒரு செய்தி தெரியுமா? இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பைகளை இந்தியா பெற்றது என்றால் கபில்தேவ், எம்.எஸ்.தோனி என்ற இரண்டு பார்ப்பனரல்லாதவர்கள் இந்திய அணியின் தலைவர்களாக இருந்தபோதுதான்.
கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் பணமோ, கொள்ளையோ கொள்ளை!
– – – – –
கேள்வி: முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தி.மு.க. அரசு மட்டும்தான் பாதுகாவலனாக இருப்பது போன்ற பிம்பத்தை, உருவாக்கக் கடும் போராட்டம் நடத்துவது ஏன்?
பதில்: தமிழகத்தில் முஸ்லிம்கள் 6 விழுக்காடு இருப்பதால்தான். தி.மு.க. இவ்வளவு தடபுடல் செய்கிறது. அவர்கள் சிறுபான்மை ஜெயின் சமூகம் போல 0.2 விழுக்காடு இருந்தால், அவர்களைத் திரும்பிக்கூட பார்க்காது தி.மு.க.
பதிலடி: முஸ்லிம்களாவது 6 விழுக்காடு, 3 விழுக்காடுள்ள பார்ப்பனர்கள்தானே அனைத்துத் துறைகளையும் ஆட்டிப் படைக்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
– – – – –
கேள்வி: கட்சியின் கரை வேஷ்டியைக் கட்டும் முன்பு, தி.மு.க. மாணவர் அணியினராவது தங்களது நெற்றியில் உள்ள விபூதியை அழித்துவிடும்படி ஆ.ராசா கேட்டுக் கொண்டிருக்கிறாரே?
பதில்: ”தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்க நாதனையும் பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் எந்நாளோ” என்று ஏங்கிய தி.மு.க.வின் ஆ.ராசாவுக்கு, தெய்வத்தை வழி படாதே,நெற்றியில் பொட்டு இடாதே என்று கூறும் துணிவு இல்லை. இட்டுக்கொள், ஆனால் கருப்பு-சிவப்பு கரை வேஷ்டி கட்டும்போது அழித்துவிட்டு, நாஸ்திகன் போல நடி என்று கூறத்தான் அவருக்குத் துணிவு இருக்கிறது.
பதிலடி: நெற்றியில் குங்குமம் அணிகிறார்களே – அதன் தாத்பரியம் என்னவென்று தெரியுமா?
‘குங்குமம்’ பிறந்த கதை
‘‘மலட்டு நிலத்தை மாதவிலக்கான பெண்களைக் கொண்டு உழச்செய்யின் விளைச்சல் ஏற்டும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாத விலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்துவது என்பது உண்மையே. இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளை ஏற்படும் இரத்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்றும் இவ் வழக்கம் குங்குமப் பொட்டாக, மங்கலச் சின்னமாக நாள்தோறும் – பெண்களின் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.”
திரு. செ. கணேசலிங்கன் எழுதிய ‘பெண்ணடிமை தீர” என்ற நூலிலிருந்து
எதை எடுத்து எதில் பூசிக்கொள்வது? சிந்திக்க வேண்டாமா?
– – – – –
கேள்வி: ஈவெ.ராமசாமி நாயக்கர், சோ.ராமசாமி அய்யர் இருவருக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன?
பதில்: குடிஅரசு பத்திரிகை ஆசிரியர் ஈ.வெ.ரா. தன்னை “ஈ.வெ.ராமசாமி நாயக்கர்” என்று போட்டுக் கொண்டார். துக்ளக் இதழில் சோ தன்னை “ராமசாமி அய்யர்” என்று போட்டுக் கொள்ளவில்லை. அவர்களுடைய வேற்றுமைகளில் இது ஒன்று. அவர்களுக்குள் ஒற்றுமை, இருவர் பெயரும் ராமசாமி.
பதிலடி: 1927ஆம் ஆண்டோடு தம் பெயரில் இருந்த நாயக்கர் பட்டத்தைத் தந்தை பெரியார் தூக்கி எறிந்தார். சோ.ராமசாமி வகையறாக்கள் தன் முதுகில் தொங்கும் பூணூலைத் தூக்கி எறிந்ததுண்டா?
பெயருக்குப் பின்னால் அய்யர், அய்யங்கார் வால் தொங்கியதே! – அப்படி எல்லாம் இப்பொழுது போட்டுக் கொள்வதை வெட்கப்படும்படிச் செய்த தலைவருக்குப் பெயர்தான் தந்தை பெரியார்.
பஞ்சமா பாதகத்திற்கும் பரிகாரம் திருநீறா?
விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு.-
“நீறுபுனைவார் வினையை நீறு செய்தலாலே
வீறுதனி காமமது நீறென விளம்பும்
சிறுநரகத்துயிர் செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தார்.”
இதன் பொருள்:- “திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒரு மருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு” என்பதாம்.
கதை:- ஒரு காலத்தில், மகாபாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயிசு முடிவிலே, யமதரும ராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடு கிறதற்கு தூதர்களைஅனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு, அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை மேட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும தலையிலும் ஏறி மிதித்துக்கொண்டு போய்விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம் பல் அவனுடைய மார்ப்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக்கண்டு, யமதூதர்கள் கிட்டப்போகப் பயந்து, விலகி விட்டார்கள். உடனே சில கணங்கள் வந்து அவ னைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள்” என்று சில புராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
தெளிதல்:- இதை வாசிக்கிற என் ஜென்மதேச வாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும் கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சத்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே, இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால், தாங்கள் அன்றாடஞ் செய்கிற பாவ கருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ?
அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டு விட்டா லும், தாங்கள் சாகும்பொழுது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும், தங்கள் உறவின் முறையார் தங்களைத் தகனிக்கக் கொண்டு போகிற பொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்க மாட்டார்களா?
இதெல்லாம் வீணென்று நமது முன்னோர்களில் அனேகர் சொல்லி எச்சரித்துமிருக்கிறார்கள். அவைகளில் சிலவற்றை யிதனடியில் குறிப்பிடுகிறோம்.
சிவவாக்கியர்:-
இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் என்கிறார்.
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!
பட்டணத்தார்:-
“நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே! என்கிறார்.
நெஞ்சறி விளக்கம்
“வேடத்தைத் தரித்தாலென்ன வெண்பொடி யணிந்தாலென்ன,
நாடொத்து வாழ்ந்தா லென்ன கதிகலங் கண்டாலென்ன …” என்கிறது.
கவனிப்பு: “நீறு பூசிக் கொண்டால் எல்லாப் பாவமும் போய் முக்தியடைவாய்” என்கிற உபதேசம் கடவுளை பைத்தியக்காரனாக்குகிறது போலாகிறதல்லவா? எப்படியெனில், ஒரு நியாயாதிகாரி ஒரு கொலை பாதகனை நோக்கி “அடா! அங்கே கொஞ்சம் சாணியுண்டு; அதைச் சுட்டுப் பொடியாக்கிப் பூசிவா, உன்னை மன்னித்து விடுதலையாக்குவேன்” என்று தீர்ப்புப் பண்ணினால், அதைக் கேட்டவர்கள், அவரைப் பயித்தியம் பிடித்தவன் என்று நிந்திப்பார்களல்லவா? அப்படியே ‘விபூதி பூசுதல் பாவத்தைச் சாம்பலாக்குமென்று சிவன் சொன்னார்’ என்று சொல்லுகிறவர்கள் சிவனை பயித்தியக்காரனாக்குகிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் சிவனுக்கு எப்படி அஞ்சி பயப்படுவார்கள்? பக்தியாய் இருப்பார்கள்? ஆன்றோர்கள் “பரிசுத்தம் (ஒழுக்கம்) இல்லாதவன் கடவுளை தரிசிக்க மாட்டான்” என்கிறபடியால், விபூதி பூசுதலுக்கும் பரிசுத்தத்திற்கும் சம்பந்தம் என்னயிருக்கிறது? ஒன்றுமில்லை. விபூதி பூசுதல் பரிசுத்தத்திற்கு காரணம் என்று எவ்வளவேனும் நினைக்கலாகாது, அப்படியே காரணமாயிருந்தால், திருடன் ஒரு கையினாலே திருடி மறு கையினாலே விபூதி பூசி, புண் ணியசாலியாயிருப்பான் அல்லவோ?ஆகையால் இப்படிப்பட்ட பொய்யுபதேசத்தை விட்டு விட்டு, பரிசுத்தமாகிறது எப்படி என் று கவனியுங்கள்.
பிரபு லிங்கலீலை:-
“எண்ணரும்அன்புளத் தில்லையேயெனில் பண்ணிய பூசனை பயன் தராதரோ;” என்றெச்சரிக்கிறது.
வாயுசங்கிதை:-
“கருமம் தவம் செபம் சொல்காச சமாதி ஈனம் புரிபவர் வசமதாகிப் பொருந்திடேம் புரையொன்றின்றி திரிகூறும் அன்புசெய்வோர் வசமதாய்ச் சேர்ந்து நிற்போம்” என்று பகிரங்கமாகப் போதிக்கிறது.
ஆதலால் “அன்புள்ளவன் இடத்தில் பரிசுத்தம் இருக் கும், பரிசுத்தமுள்ளவனிடத்தில் கடவுளும் இருப்பார். மோட்சமுண்டு” என்பது நிச்சயமாகிறது.
– ‘குடிஅரசு’ – 24.7.1928 – கட்டுரை
இதுதான் திருநீற்றின் மகிமை! ஒழுக்கக் கேட்டை வளர்க்கும் தன்மை! ஆதாரத்துடன் பேசுகிறோம் – பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!