பிற இதழிலிருந்து…அரசமைப்புச் சட்டப் படி அலங்காரப் பதவியில் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் உச்சநீதிமன்றம் பற்றி கருத்து சொல்வதற்கு முன்பு சிந்திக்க வேண்டாமா?

Viduthalai
2 Min Read

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தலையங்கம் கேள்வி!

அரசியலமைப்புப் பதவிக்கான எல்லைகளையும் கண்ணியத்தையும் மீறி குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து வெளியிடுவது இது முதல்முறையல்ல. ஆனால் கடந்த வாரம் வியாழன் அன்று அவர் தெரிவித்த கருத்து கவலைப்படத்தக்கது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் ஏப்ரல் 18ஆம் நாளின் தலையங்கம் தெரிவித்துள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- இந்தப் பிரச்சினை, உச்ச நீதிமன்றத்தின் ஆளுநர்கள் தொடர்பான தீர்ப்பின் காரணமாக குடியரசுத் துணைத் தலைவரின் கோபமாக வெளிப்பட்டுள்ளது. தனது உரையில் அவர் உச்ச நீதிமன்றத்தைச் “சூப்பர் நாடாளுமன்றம்” என்று விமர்சித்தார். இன்னும் மோசமானது என்னவென்றால், “நாட்டின் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது என்றும், நீதிபதிகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை” என்றும் அவர் விமர்சித்தது தான்..

“நீதிபதிகளுக்குத் தங்களுடைய பதவியின் மாண்பில் அக்கறையில்லை. குடியரசுத் தலைவரையும் ஆளுநர்களையும் ஒரே கோட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்று அவர் கூறினார். ஆனால் அரசமைப்பின் 142ஆவது சரத்து உச்ச நீதிமன்றத்திற்குச் சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது, இதை ஆளுநர் ரவி மற்றும் தமிழ்நாடு அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியது. இதனை “ஜனநாயகத்திற்கு எதிரான நீதித்துறை எடுத்த அணு ஆயுத ஏவுகணை” என்று அவர் குறிப்பிட்டபோது, அலங்காரமான அரசமைப்புப் பதவிகளுக்கான மாண்பிலிருந்து அவர்தான் விலகியிருக்கிறார். மாநிலங்களவையை நடத்துவது தவிர, அன்றாடச் செயல்பாடுகளில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. கொள்கை முடிவுகள், அரசியல் மற்றும் நீதித்துறை தீர்ப்புகள் தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அதாவது, குடியரசுதுணைத் தலைவர் என்ன கூறினாலும், அவரது பதவி காரணமாக அவரது கருத்துக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா, தன் வாசகர்களுக்குத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிப்பவர்களுக்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் பொருந்தும்.
இதுவரை இருந்த குடியரசுத் தலைவர்கள், பெரும்பாலும் தங்கள் பணியில் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளனர். ஆனால் அண்மைக் காலத்தில் பல ஆளுநர்கள் தங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகார உறவுகளை மதிப்பிழக்க வைக்கும் அளவுக்கு வரம்புகளை மீறியுள்ளனர். ஜெக்தீப் தன்கர் ஆளுநராக இருந்த போது அவர் மாநில அரசின் அதிகார வரம்பை மதிப்பிழக்கச் செய்துள்ளார்.
தன்கர் கடந்த 17 அன்று ஆற்றிய உரையில் அரசமைப்பின் 145(3) சரத்தை திருத்துவதற்கும் வலியுறுத்தினார், இது அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புகளின் (சரத்துகள்) மீதான கேள்விகளுக்கு சட்ட விளக்கம் அளிக்கும் வகையிலான வழக்குகளை விசாரிக்க உரிமை படைத்த உச்ச நீதிமன்ற அமர்வுகளின் அமைப்பைப் பற்றியது.

நாட்டின் தலைமை நீதிமன்றம் அதன் முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கும் அரசமைப்பு விதியை ஓர் அரசமைப்புப் பதவி வகிப்பவர் விமர்சிப்பது ஆபத்தானது. தற்போதுள்ள அரசியல் சூழலில் அரசமைப்பினை மீறி பல செயல்கள் நடந்துவருகிறது என்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரை தெரிவிக்கிறது.
அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கு கிறார்கள் என்று பலர் அரசை விமர்சித்துக்கொண்டு இருக்கும் நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் நீதித்துறையின் செயல் பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்தைக் கொண்டிருப்பது தவறான முண்ணுதாரனமாகும். எனவே, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உச்சநீதிமன்றம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து மிகவும் கவலைக்குரியதாகும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *