நேற்று (23.4.2025) உலகப் புத்தக நாள்!
அன்றைக்கே அதுபற்றி எழுத வேண்டும் என்பதல்ல.
ஆரம்பத்திலிருந்து – சிறு வயது பள்ளிப் பருவம் முதலே – புத்தகங்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண் டியவர்கள் எனது ஆசிரியர்களும், அறிவார்ந்த நட்புக்குரியவர்களும், தோழர்களும், திராவிட இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் ஆகும்.
ஜாதி, சமூக அமைப்பு காரணமாக அக்காலத்தில் அதிகம் படிப்பறிவு பரவாது தடுக்கப்பட்டதை எதிர்த்தே தந்தை பெரியார் அவர்கள் தாம் கலந்து கொண்டு பேசிய அரசியல், சமூக பொருளாதார பண்பாட்டுப் பரப்புரைக் கூட்டங்களில், மிக மிக மலிவு விலையில் (சில நூல்கள் அடக்க விலைக்கும் குறைவான விலையில்) புத்தகங்கள் கிடைக்கும் என்பதை அறிவிப்பார். அதுபற்றி மேடையில் விளக்கிச் சொல்லி புத்தகத்தை சாமானிய மக்க ளிடம் கொண்டு சென்று, பகுத்தறிவைப் பரப்பிய தலைவரை உலகத்தில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.
இன்றைய பல வாசிப்பு இயக்கங்கள் இதனை, விருப்பு, வெறுப்பு இன்றி பரப்புரை செய்ய வேண்டும் – நன்றி உணர்வு குன்றாமலிருந்தால்! (ஆனால் செய்வதில்லை)
வேறு எந்த இயக்கம், எந்தத் தலைவர் மலிவுப் பதிப்பாக, தமது இயக்க வெளியீடுகளை ஊர்தோறும் கூட்டத்தில் கடை போட்டு, மக்கள் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கினர் என்று கூற முடியுமா? ‘விசாலப் பார்வையால் உலகத்தை விழுங்க’ வைத்த தலைவர், இவர் தவிர வேறு எவர்?
வரலாற்றின் தனிப் பெரும் சிறப்புப் பதிவு அல்லவா இது?
அதுமட்டுமா? அப் புத்தகங்களை ‘சுய கவுரவம், தகுதி அந்தஸ்து’ பாராமல் அவரது செயலாளர் – பாதுகாவலர் – சட்டக் கண்ணோட்டத்தைப் பூர்த்தி செய்த – ‘வாழ்விணையர்’ ஆகிய ஒருவர் தரையில் கடை விரித்து மக்களை வாங்கி கொள்ளச் சொல்லி, அய்யாவின் பேச்சு முடியும் வரை பல மணி நேரம் புத்தகம் விற்றுப் பரப்பி – மூட்டையைச் சுமந்ததை வேறு எந்த வாழ்க்கை வரலாற்றிலாவது படித்ததுண்டா?
அக்காட்சியினை தனது அழகுக் கவிதை நடையில் எழுத்தில் இலக்கியமாய் செதுக்கிய மகத்தான ‘உலக மக்கள் கவிஞர்’ ஒருவர் பற்றியும் – அவரது எழுத்தோவியத்தைப் படித்து கண்ணீர் சிந்தும் உணர்ச்சிக்கு நம்மைப் போன்ற பலரும் ஆளான உருக்கமிகு வசன காவியத்தைப் படித்ததுண்டா?
பார்வையில் அவை எளிய நிகழ்வுகள்; ஆனால் வரலாற்றில் அரிதினும் அரிது – பெரிதினும் பெரிது அல்லவா? 95 வயதிலும் தொண்டு செய்து பழுத்த பழமான அவர், 3 மணி நேரம் 3½ மணி நேரம் மக்கள் கூட்டத்தைத் தனது சொற்பொழிவால் ஈர்த்து கட்டிப் போட்டு விட்டு, வர்ணிக்க முடியாத களைப்புடன் பெரு மூச்சு வாங்க, தனது கார், எஞ்சின் பூட்டிய நவீன கட்டை வண்டியில் (வேனில்) ஏறி அமர்ந்தவுடன் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா?
‘‘கூட்டத்தில் எவ்வளவு புத்தகம் விற்றது?’’ என்ற ஆவலாதி உள்ள அவசரக் கேள்விதான்!
அதற்கு அன்னை மணியம்மையார் என்ற அவரது புத்தக விற்பனையாளர் பதில் அளிக்குமுன் வேனைச் சுற்றி மக்கள் முண்டியடித்து, ‘அய்யா சொன்ன 3 அணா, 4 அணா புத்தகம், கொடுங்கள்’ என்று வேனின் கண்ணாடியில் கைகளில் தட்ட, அவசரமாக வண்டியை எடுக்கும் ஓட்டுநரிடம், ‘அப்பா சற்று நிறுத்து, நிறுத்து, மக்கள் கேட்கும் புத்தகங்களைக் கொடுத்த பிறகு புறப்படலாம்’ என்று ஆணையிட – வாங்கும் மக்கள் குறிப்பறிந்து, கையில் அந்த முக்கிய புத்தகங்களை அம்மாவும், மற்ற தோழர்களும் வைத்திருக்க, இரண்டாவது விற்பனைக் கட்டம் சில மணித் துளிகளுக்கே தொடரும் காட்சி கண்டு வியந்தவர்கள் பலர்!
மூச்சிரைக்கும் நிலையில், ‘இந்தக் கூட்டத்தில் எவ்வளவு விற்றது?’ என்று அறிந்து கொள்ளும் அய்யாவின் ஆர்வம் கரையுடைத்துப் பீறிடும்!
அம்மாவோ, அருகில் உள்ள புலவரோ (புலவர் கோ. இமயவரம்பன் என்ற அவரது ஒப்பற்ற செயலாளர்) 250 ரூபாய் என்றோ 300 ரூபாய் என்றோ சொன்னால், ‘பலே பலே இவ்வளவா? நானே எதிர்பார்க்கவில்லையே’ என்ற மகிழ்ச்சியில் தனது 3½ மணி நேரப் பேச்சின் களைப்பை, சோர்வினை விரட்டி மகிழ்வார்.
முதல் முறை அருகில் இருப்பவர்களுக்கோ, அல்லது இதைக் கேட்பவர்களுக்கோ, ‘‘பெரியாருக்குத்தான் எவ்வளவு பணத்தாசை பார்’’ என்றுதான் எண்ணத் தோன்றும்!
அடுத்து, அந்த எண்ணத்தினை மாற்றிடும் அய்யா அவர்களின் வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த சொல் கூற்று!
இரு கைகளையும் தட்டி, ‘2 அணா, 4 அணா விலைக்கு வாங்கிய புத்தகங்களை எவ்வளவு பேர் படிப்பார்கள்.!
பல பேர் – சில பேராவது நமது கொள்கைப் பற்றி யோசித்து மாறுவார்கள்’ என்பார்.
ஓர் அறிவுப் பரப்புரைக் கூட்டத்தின் வெற்றிக்கு ‘அளவீடு’ இது தான் . இலக்கணம் வகுப்பார் – எதிர் நீச்சல் வீரர் அவர்!
புத்தக வாசிப்புக்கும், நேசிப்புக்கும் சமூக மாறுதலுக்கான வித்தாகி, அவை வளர அல்லவா விதைத்து வந்துள்ளார் அப்பரப்புரை மூலம்!
இதற்கு ஒப்பான ஒரு ‘புத்தகப் புரட்சிக்கு’ இணை ஏது?
உலகப் புத்தக நாளில் புத்தகசாலையின் விற்பனை கொள்முதலும் – லாபமும் மற்றவர்கள் கணக்கில், தனி மனிதர்களுடைய தன்னலம். தந்தை பெரியார் கணக்கிலோ பொது நலம் – மானுட நலம் – இதை மறக்கலாமா?
‘மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு’ என்ற புரட்சிக் கவிஞர் வர்ணனையின் பொருள் இப்போது புரிகிறதா?
கி.வீரமணி
(தொடரும்)