சென்னை, ஏப்.24 ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு மயோனைசுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற வகையில் தொடு உணவான மயோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மயோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் பிரிவு 30 (2) (a) படி பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும், மயோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.