பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக் கொள்வது 24 மணி நேரம். அதாவது பூமியின் ஒரு நாள் என்பது 24 மணி நேரம். பூமியைப் போன்ற பாறை கோள்களின் சுழலும் வேகத்தை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.
வியாழனின் சுழற்சியைக் கணிக்க அந்தக் கோளில் வேகமாக நகர்கின்ற புயல் காற்று நமக்கு உதவி செய்யும். ஆனால் யுரேனஸ் வித்தியாசமானது. இதன் சுழலும் வேகத்தைக் கண்டறிவது எளிதல்ல.
இது பூமியை விட 63 மடங்கு பெரியது, என்றாலும் கூட இதனுடைய அடர்த்தி, தண்ணீரை விட சற்றே கூடுதலானது. ஹைட்ரஜன், அமோனியா, மீத்தேன், ஹீலியம் ஆகிய வாயுக்களின் கலவை தான் யுரேனஸ். இந்தக் கோளில் கெட்டியான பகுதி என்று பெரிதாக எதுவுமே இல்லை. இதன் மய்யம் மட்டும் பாறைகளால் ஆனது.
இதனால் யுரேனஸின் ஒரு நாள் என்பது அவ்வளவு சுலபமாக கணித்து விட முடியாது. ஹப்பிள் தொலைநோக்கி இந்தக் கோளை 2015 முதல் 2022 வரை தொடர்ந்து கண்காணித்து நமக்கு நிழற்படங்களை அனுப்பியது. இதில் இந்தக் கோளில் பூமியில் இருப்பது போல துருவ ஒளிகள் தோன்றுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். இவற்றைப் பயன்படுத்தித் தான் தற்போது யுரேனஸின் சுழல் வேகத்தைக் கண்டறிந்து இருக்கிறார்கள்.
யுரேனஸ் தன்னைத்தானே சுற்றிவர 17 மணிநேரம் 14 நிமிடங்கள் 52 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. நாசா அனுப்பிய வாயேஜர் 2 இந்தக் கோளுக்கு மிக அருகில் 1986ஆம் ஆண்டு சென்றது.
அப்போது கணிக்கப்பட்ட நாளை விட தற்போது கணிக்கப்பட்டது 28 நொடிகள் கூடுதல். யுரேனஸ் கோளின் ஒரு நாள் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இப்போதுதான்.