மாவுச்சத்தை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக புரதத்தையும் கொழுப்பையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் உணவு முறைகளுள் ஒன்று கீடோ டயட். இதனால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. இந்த உணவு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரித்து, இதய நோயை உருவாக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறிவந்தனர். ஆனால் சமீபத்திய ஆய்வில், அமெரிக்காவைச் சேர்ந்த யூ.சி.எல்.ஏ., மருத்துவ ஆய்வு மய்யம் இந்த உணவு முறையால் இதயம் பாதிக்கப்படாது என்று கண்டறிந்துள்ளது.
வட அமெரிக்க கண்டத்தில் 50 லட்சம் ஆண்டு களுக்கு முன்பாக டெலியோசரஸ் மேஜர் என்ற ஒரு வகை காண்டாமிருகங்கள் வாழ்ந்து வந்தன. இவை தற்போது முற்றிலும் அழிந்து விட்டன. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் நெப்ராஸ்கா என்ற இடத்தில் இந்த வகை காண்டாமிருகங்களின் 100 தொல்லெச்சங்கள் கிடைத்துள்ளன. இவை கூட்டமாக வாழும் இயல்பு உடையவை என்பதை இந்தத் தொல்லெச்சங்கள் காட்டுகின்றன.
கோஹோயூட்டெக் 4-45 என்பது நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கக்கூடிய ஒரு நெபுலா. அதாவது அழிந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம். இது பூமியில் இருந்து 4,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. ஹப்பிள் தொலைநோக்கி மிக அழகாக சமீபத்தில் இதைப் படம் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்தக் கண்டத்தில் வாழ்கின்ற மராடஸ் ஸ்ப்ளவுண்டென்ஸ் எனும் குதிக்கும் சிலந்திகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வந்தனர். அவை குறிப்பிட்ட விதத்தில் தங்கள் உடலைப் பயன்படுத்தி மிக நீண்ட தூரம் தாவுகின்றன. இதை ஆராய்ந்து ரோபோடிக் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.