எதிர்காலத்தில் நிலவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், அங்கு குடியேறவும் நமக்கு வசிப்பிடங்கள் தேவை. அவற்றைக் கட்டுவதற்குக் கற்கள் அவசியம். தற்போது விஞ்ஞானிகள் சந்திரனின் மண்ணைக் கொண்டு கட்டுமான கற்களை உருவாக்கி வருகின்றனர்.
இதில் உள்ள ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால் நிலவில் தட்பவெப்ப நிலை கடுமையாக மாறுவதே. பகலில் 121 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். அதே நேரத்தில் இரவு நேரத்தில் மைனஸ் 131 டிகிரி செல்சியஸ்க்குச் சென்று விடும். கடும் வெப்பத்தையும் கடும் குளிரையும் கற்கள் தாங்கி நிற்பது கடினம். இதற்கான தீர்வை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் முயன்று வந்தார்கள்.
தற்போது பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் ஒரு தீர்வு கண்டுள்ளது.
மண்ணில் சாதாரணமாக வாழக்கூடிய ஸ்போரோசார்சினா பாஸ்ட்யூரை என்கின்ற ஒரு விதமான பாக்டீரியாவைக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளது. ஆய்வாளர்கள் நிலவின் மண், யூரியா ஆகியவற்றுடன் இந்த பாக்டீரியாவைச் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கினர்.
ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, குறைபாடுகளுடன் இருந்த கற்களுக்கு உள்ளே இந்தக் கலவையை ஊற்றிய போது, அங்கே இருந்த விரிசல்கள் வழியாக இந்தக் கலவை ஊடுருவியது.
பாக்டீரியா கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்து விரிசல்களை மூடியது. ஆகவே நிலவில் கட்டுமானங்களை உருவாக்க இந்தக் கலவை உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலவில் வீடுகட்ட உதவும் கலவை

Leave a Comment