தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர்ப் பலகை தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் பலகை உடனடியாக அகற்றம்

viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.23- ரயில்வே அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர் வைத்திருப்பதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் 21.4.2025 அன்று, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட
எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார். இதில்
எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி சோமு, சசிகாந்த் செந்தில், கதிர் ஆனந்த், கிரிராஜன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்.பி.க்கள், தங்கள் பகுதிகளில் ரயில்வே சார்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள், புதிய திட்டப் பணிகள், பயணிகள் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பி பேசினார்கள். மேலும், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலகங்களுக்கு தமிழில் பெயர் வைக்காமல் ஹிந்தியில் பெயர் வைத்திருப்பது ஏன்? என்று கேட்டு அதற்கு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

கண்டனம்

பின்னர், டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தாம்பரம் ரயில் நிலையம் ஒரு முனையமாக இருக்கிறது. ஆனாலும் அங்கு 7 விரைவு ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுத்து தாம்பரத்தில் ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும். அம்பத்தூர் ரயில் நிலையத்திலும் விரைவு ரயில்களை நிறுத்தி செல்ல வேண்டும். ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின் பகுதியிலேயே கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

வந்தே பாரத் ரயிலில் உள்ள சில குறைபாடுகளை தீர்ப்பதாக ஏற்கனவே ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஹிந்தியில் எழுதியிருக்கிறார்கள். இது கண்டனத்துக்குறியது.

இதை நேரடியாக கண்டித் துள்ளோம். ஆளுநருக்கு உச்சநீதி மன்றமே தீர்ப்பு கொடுத்தும் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துகிறார். நியாயமாக இருப்பவர்கள் இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கட்டாயம்

தொடர்ந்து, தயாநிதி மாறன் எம்.பி. கூறுகையில், ‘தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர் இருப்பது தொடர் பிரச்சினையாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எங்களின் கோரிக்கை மீது கண்டிப்பாக பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்’ என்றார்.

பெயர்ப் பலகை பார்த்து கொந்தளிப்பு

ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. எம். பி. கிரிராஜன் வந்தார். அப்போது, நுழைவு வாயில் பகுதி யில் ‘சுலையா, சுபாஷ், சுபோஜ்’ என்று வார்த்தைகள் இடம்பெற்றபலகை இருந்தது.

தமிழில் பெயர் வைக்காமல் ஹிந்தியில் இருப்பதை கண்டு கிரிராஜன் கொந்தளித்தார். அதை அகற்றும்படி அறிவுறுத்தினார்.இதனால், அந்தபெயர் பலகை உடனடியாக அகற்றப்பட்டது. பின்னர், அந்தப் பெயர் பலகையை கிரிராஜன் தன்னுடன் எடுத்துச் சென்று ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கிடம் காண்பித்து கண்டனத்தை பதிவு செய்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *