மதுரை, ஏப். 23- மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் 05-04-2025 சனிக்கிழமை மாலை 6-30மணிக்கு பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தினை ப.க. மாவட்ட அமைப்பாளர் பா.சடகோபன் ஒருங்கிணைத்தார்.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று மாவட்ட. ப க தலைவரும் பணி நிறைவு பெற்ற கல்வி அதிகாரியுமான ச.பால்ராஜ் உரை யாற்றினார். தலைமை ஏற்றுப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, தி இந்து குழுமம் வெளியிட்டு இருக்கக்கூடிய , அறிஞர் அண்ணாவின் மாபெரும் தமிழ்க்கனவு என்னும் நூலைக் குறிப்பிட்டு, அறிஞர் அண்ணாவின், திராவிட இயக்கத்தின் வெற்றி இது எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் உரையாற்றினார்.
முன்னிலை ஏற்று உரையாற்றிய தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், முதல்வர் முனைவர் பெரி.கபிலன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
முனைவர் வா.நேரு, சுப.முருகானந்தம், அழகுப் பாண்டி ஆகியோர் பெரி.கபிலனுக்குப் புத்தகம் வழங்கி மகிழ்ந்தனர்.
நிறைவாக காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி துணை முதல்வரும் கணினித் துறை பேராசிரியருமான பெரி.கபிலன் , ’அண்ணாவின் பட்டமளிப்பு உரைகள்’ என்னும் நூலினை மிக நுட்பமான தனது பார்வையில் அறிமுகப்படுத்தினார்.
அறிஞர் அண்ணா , இந்தத் தமிழ்நாடு என்ற நிலப்பரப்பை உலக அரங்கில் எப்படிக் கட்டமைத்தார்? இன்றைக்கு இருக்கின்ற கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், சாலைப்போக்குவரத்து போன்ற அனைத்து துறைகளிலும் இருக்கின்ற கட்டமைப்பு அறிஞர் அண்ணாவின் திட்டமிடலால்தான் நமக்குக் கிடைத்தன என்பதை மிக அருமையாக பல எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார். தந்தை பெரியார் என்னவெல்லாம் நினைத்தாரோ எப்படி திராவிட சமுதாயம் உயர்ந்து உலகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப் போல் மேன்மையடைய வேண்டும் என்று நினைத்தாரோ, அதை செயலில் கொண்டு வந்தவர் அறிஞர் அண்ணா என்பதை எடுத்துச் சொல்லி, அதற்கு அடிப்படையாகத்தான் தமிழ்நாட்டில், அவரது ஆட்சி காலத்தில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. அந்த பல்கலைக்கழகங்களில் சென்று அங்குள்ள மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், இந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் அவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு என்பது அரசினால் கொடுக்கப்படுகிறது என்றா லும், அந்த அரசுக்கு வரி – வருவாய் தரக்கூடியவர்கள், சாதாரண, பாமர, உழைப்பாளித் தோழர்கள் தான் என்பதை மனதில் கொண்டு நலத்திற்காகத் தான் பட்டதாரிகள் செயல்பட வேண்டும் என்ற அறிஞர் அண்ணாவின் அறிவுரையை எடுத்துச் சொன்னார்.
நிறைவாக பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் வீர.பழனி வேல் ராஜன் நன்றி கூறினார்.
தொடக்கத்தில் கடும் மழை பெய்த நிலையிலும் கூட்டம் சிறப்பாக நடை பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் இராலீ.சுரேஷ், மாவட்டக் காப்பாளர் சே.முனியசாமி, மாவட்ட துணைத் தலைவர் இரா.திருப்பதி, மாணவர் கழக அமைப்பாளர் சீ.தேவராஜ பாண்டியன், இராக்கு, மு.மாரிமுத்து, ச.வேல்துரை, மாணவிகள் மகாமதி, திவ்யதர்ஷினி, முரளி, நா.மணி கண்டன், செல்லத்துரை, இரமேஷ், வழக்குரைஞர் ஆசைத்தம்பி, அய்ஓசி மேலாளர் பழனிவேல், பெரி.காளியப்பன், ஆட்டோ செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இராமலிங்கம் மற்றும் தோழர்கள் சிறப்புரையாற்றிய பேராசிரியருக்கு சிறப்பு செய்தனர்.