நீட்’டைப் பற்றிப் பேச அதிமுகவுக்கு தார்மிக உரிமை உண்டா?

4 Min Read

சட்டப் பேரவையில் ‘நீட்’ தொடர்பாக விவாதங்கள் அனல் பறந்தன.

பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துள்ள அ.தி.மு.க. தங்களின் குறைந்தபட்சத் திட்டத்தில் ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரும் அம்சம் இடம் பெறுமா என்று முதலமைச்சர் எழுப்பிய வினாவிற்கு எடப்பாடி பழனிசாமி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதில் சொல்ல முடியாமல் திணறி  – காங்கிரசோடு திமுக கூட்டணி வைத்திருந்த போதுதான் ‘நீட்’ கொண்டு வரப்பட்டது என்று எதிர் குற்றச்சாட்டை வைத்தார்.

உண்மையில் நடந்தது என்ன? தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் ‘நீட்’ கொண்டு வரப்பட்டது என்பது உண்மைதான்.

21.12.2010 அன்று மருத்துவப் படிப்புக்கும், மருத்துவ மேற்படிப்புக்கும், பல் மருத்துவப் படிப்புக்கும், பல் மருத்துவ மேற்படிப்புக்கும் ‘நீட்’ என்னும் தேர்வு முறை அறிவிக்கப்பட்டது.

அந்த நிலையிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு ‘நீட்’டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்தது.

நீதிபதி திரு. ஜோதிமணி ‘நீட்’ தேர்வுக்கு இடைக்காலத் தடையை விதித்தார்.

‘நீட்’டை எதிர்த்து வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளும், தி.மு.க. அரசும் வழக்குத் தொடுத்தன. நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரமஜித் சென், அனில் தவே ஆகியோர் மூவர் அடங்கிய அமர்வு விசாரணையை நடத்தியது.

203 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில் (18.7.2013) ‘நீட்’ செல்லாது என்று கூறப்பட்டது. மூவரில் அனில் தவே என்ற நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

பெரும்பான்மை நீதிபதிகள் இருவரும் இந்திய அரசியல் சாசனம் 19,25,26,29,30 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வை நடத்திட இந்திய மருத்துவக் கழகம் மற்றும் இந்திய பல் மருத்துவக் கழகம் ஆகியவை வெளியிட்ட நான்கு அறிக்கைகளையும் ரத்து செய்து, ‘நீட்’ தேர்வு நடத்த அவர்களுக்கு அதிகாரமில்லை என்று திட்டவட்டமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. (18.7.2013)

இந்தத் தீர்ப்பின் மறுஆய்வு மனுவின் மீது அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கு விசாரணையும், தீர்ப்பும் பிஜேபி தலைமையிலான ஆட்சிக் கால கட்டத்தில்தான் நடந்தது என்பதை மறக்கவே கூடாது – மறுக்கவும் முடியாது.

எந்த நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினாரோ; அதே நீதிபதி அனில் தவே தலைமையில் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மறு சீராய்வு மனுவின் மீதான வழக்கை விசாரித்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

‘நீட்’ தேர்வு செல்லும் என்று இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது (11.4.2016).

இதனைச் செயல்படுத்தியது நரேந்திர மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான். அந்தக் கூட்டணி ஆட்சியில்தான் அதிமுக அங்கம் வகித்தது என்பதை ‘வசதியாக’ மறந்து விடக் கூடாது.

அதிமுக அரசின் இன்னொரு மோசடியை இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டியது கட்டாயமாகும்.

2017 பிப்ரவரி முதல் தேதி அ.தி.மு.க. ஆட்சியில் நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் தலைவரால்  அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பப்பட்டது (22.5.2017)

அதே போல இன்னொரு மசோதாவும் சில திருத்தங் களுடன் ்அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு (14.9.2017) அனுப்பிய வைக்கப்பட்டது. அதுவும் நிராகரிக்கப்பட்டு குடியரசுத் தலைவரால் அதிமுக அரசுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது (31.1.2018).

ஆனால் என்ன நடந்தது? குடியரசுத் தலைவரால் இரண்டு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்ட தகவலை அதிமுக அரசு தெரிவிக்கவே இல்லை என்பதுதான் – திடுக்கிடக் கூடிய அதிர்ச்சி அளிக்கக் கூடிய – ஜனநாயக மாண்புக்கும், வெளிப் படைத் தன்மைக்கும் விரோதமான நடத்தையாகும்.

இந்த உண்மை எப்பொழுது தெரிந்தது என்றால், தமிழ்நாட்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு  தொடுக்கப்பட்ட வழக்குமீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்பிரமணிய  பிரசாத் ஆகியோர் விசாரணை நடத்தியபோதுதான் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் ராஜுஸ், எஸ். வைத்யா  எந்தத் தேதியில் குடியரசுத் தலைவரால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு மாநில அரசுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன என்பதை ஓர் அறிக்கையாகவே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டாரே!

எத்தகைய மோசடியை அதிமுக அரசு செய்திருக்கிறது பார்த்தீர்களா? பூனை கண்மூடினால் பூலோகம் இருண்டு விடுமா? குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட, மசோதாக்களை மறைத்ததன் மூலம் அதிமுக அரசு அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

இவர்கள்தான் நீட்டைக் கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் என்று நீட்டி முழங்குகிறார்கள் – அதுவும் சட்டமன்றத்தில்.

மாநிலங்கள் அவையில் பிஜேபிக்குப் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிமுக நினைத்திருந்தால் பிஜேபி அரசால் கொண்டு வரப்பட்ட சில மசோதாக்களை ஆதரித்திட – ‘நீட்’ விலக்கை நிபந்தனையாக வைத்திருக்க லாமே! ஏன் செய்யவில்லை?

‘நீட்’டின் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி நீலாக் கண்ணீர் வடிப்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை – அதிமுகவின் கபடத் தன்மையைத் தான் இது வெளிச்சம் போட்டுக் காட்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *