சென்னை, ஜூலை 3 – அறிவியலின் மீது ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை. பழைமைவாதம் மீதே அவர் நம்பிக்கை கொண்டுள்ளார் என்று தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் நிறுவன தலைவர்மறைந்த நஞ்சப்பன் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சங்கத்தின் 96ஆவது மாநில செயற்குழு கூட்டம், அமைப்புசாரா தொழிலாளர் வாழ்வுரிமை கருத்தரங்கம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 1.7.2023 அன்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமை தாங்கினார். சங்கத்தின் இணையதளத்தை சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த 44 தொழிற் சங்கங்கள் தற்போது வெறும் 4 சங்கங்களாக மாறியிருக் கின்றன. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பழையபடி சங்கங்கள் செழுமைப்படுத்தப்படும். மேகே தாட்டு அணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற அனுமதி இல்லாமலும், தமிழ்நாடு அரசுடன் கலந்துபேசாமலும் கருநாடக அரசு அணை கட்ட முடியாது. அதை மீறி கருநாடக அரசு செயல்பட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்த்து குரல் கொடுக்கும்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி தேசிய நல்லிணக்க பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் நடைப் பயணத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் தனது நடைபயணத்தில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். நடைப் பயணத்தை அவர் வெற்றிகரமாக முடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சனாதனத்தில் தீண்டாமை இல்லை என்கிறார் ஆளுநர். ஆனால், அதில் இருந்துதான் தீண்டாமையே நுழைந்துள்ளது என்பது அவருக்கு தெரியவில்லை. அறிவியலின் மீது ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை. பழைமைவாதம் மீதே நம்பிக்கை கொண்டுள்ளார். இதற்கு எல்லாம் வரும் தேர்தலில் இளைஞர்கள் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கோதண்டம், துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, அய்என்டியுசி மூத்த பொதுச்செயலாளர் டி.வி.சேவியர், எச்எம்எஸ் நிர்வாகி டி.எஸ்.ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.