ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று, குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் ஓதவ் என்ற பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையின் போது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈஸ்டர் நாளான ஞாயிறு அன்று விஷ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மற்றும் சில பாஜகவினர் சேர்ந்து தேவாலயத்திற்குள் கத்திகள் மற்றும் கம்புகள் போன்ற ஆயுதங்களுடன் நுழைந்தனர். அவர்கள் “ஜெய் சிறீ ராம்” என்று கத்திக் கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை மிரட்டினர்; பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்கியுள்ளனர்
பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய போதும் அகமதாபாத் காவல் துறை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மேலும் எந்த முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை.
கிறிஸ்தவர்களின் மத சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதலாகவும், இந்திய அரசமைப்பு மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான செயலாகவும் நடந்த இந்த தாக்குதல் குறித்து இதுவரை குஜராத் அரசு எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும், குறிப்பாக பாஜக ஆட்சியில், அதிகரித்து வருகின்றன. 2014 முதல், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூடங்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு மதநல்லிணக்க அமைப்பு தொடர்ந்து 8 ஆண்டுகளாக அறிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து மேலதிகாரிகளின் விசாரணைகள் தேவை என்று கிறிஸ்தவ சமூகத்தினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், உள்ளூர் காவல் துறையோ வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளது
ஈஸ்டர் தினத்தன்று காலையில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஈஸ்டர் விழாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டு இருக்கும் போது, அவரது சங்பரிவார் படையினரோ கட்சியினரோ ஹிந்து அமைப்பினருடன் சேர்ந்து தேவாலயத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இது ஓர் அப்பட்டமான இரட்டை வேடம்!
முஸ்லீம்கள்மீது தொடர்ந்து தாக்குதல்கள், சட்டம் இயற்றி உரிமை மறுப்புகள் – ஒரு பக்கத்தில் பிஜேபி அரசு தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் நிலையில், கிறிஸ்தவர்கள் மீதான பிஜேபி சங்பரிவார்களின் பார்வைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடு இந்தியா என்ற ஒரே காரணத்தால் எந்த எல்லை மீறலையும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி செய்யலாம் என்றால், உலகில் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழுகிறார்களே – அதை மறந்து விடலாமா?
அவர்களின் எண்ணிக்கை 2.4 பில்லியன் ஆகும்; முசுலிம் மக்களின் எண்ணிக்கை 2 பில்லியன் ஆகும். இந்துக்களின் எண்ணிக்கை 1.2 பில்லியன் ஆகும். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).
ஒரு நிலையில் பெரும்பான்மை என்ற திமிரான கண்ணோட்டத்தில் மதவாத சக்திகள் ஆட்டம் போடுமானால், மற்ற மற்ற நாடுகளில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எண்ணிக்கை இந்துக்களைவிட அதிகம் என்பதை ஹிந்துத்துவா சக்திகள் உணர வேண்டும்.
பெட்ரோல் முதல் ஆயுதங்கள்வரை அந் நாடுகளிலிருந்துதான் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய நிலை!
மதவாத வன்முறை நடவடிக்கையை ஹிந்துத்துவா சக்திகள் மேற்கொள்ளுமானால், அது மறைமுகமாக ஹிந்துக்களுக்கு எதிரானதாக அமையும் நிலையை உலகளவில் உருவாக்கக் கூடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
மனிதனை மனிதனாகப் பாருங்கள் – மதம் பிடித்துப் பார்ப்பது – விபரீதத்தில் கொண்டு போய் விடும்!