இந்த 90 அந்த 80 தால்தான் கிடைத்தது; அந்த 80 இல்லாவிட்டால், இந்த 90 இல்லை!
களத்தில் நிற்கின்ற போராளிகள் அத்துணை பேரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை இது!
நீங்கள் ஒதுங்கிப் போனால், உங்கள் வாழ்க்கை சுருங்கிப் போகும்; நீங்கள் உழைத்தால், உயர்வீர்கள்!
சென்னை, ஜூலை 3 இந்த 90 அந்த 80 தால்தான் கிடைத்தது. அதுதான் ஒப்புக்கொண்டதற்குக் காரணம். அந்த 80 இல்லாவிட்டால், 90 இல்லை. அதுதான் ரகசி யம். இது எனக்கு மட்டும் அல்ல நண்பர்களே, களத்தில் நிற்கின்ற போராளிகளாக இருக்கக்கூடிய அத்துணை பேரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை. நீங்கள் ஒதுங்கிப் போனால், உங்கள் வாழ்க்கை சுருங்கிப் போகும்; நீங்கள் உழைத்தால், உயர்வீர்கள் – நீங்கள் என்று சொல்லும்பொழுது, நாம் உயர்வோம் என்று சொல்லும்பொழுது – நாடு, இனம், மொழி, மக்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 27.6.2023 மாலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் ‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.
அவரது ஏற்புரை வருமாறு:
வாழ்நாளில் மறக்க முடியாத, இந்த இயக்கத்தின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சி!
மிகுந்த உணர்ச்சிபூர்வமான, மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக, வாழ்நாளில் மறக்க முடியாத, இந்த இயக்கத்தின் வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியினுடைய தலைவர், நாளைய குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விடைபெற்று சென்றிருக்கக் கூடிய கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
‘‘தலைசிறந்த நாடாளுமன்றவாதி’’
திருச்சி சிவா எம்.பி.,
வரவேற்புரையாற்றிய கழகப் பொருளாளர் மானமிகு குமரேசன் அவர்களே, இந்நிகழ்ச்சியில் எனக்கு முன் மிகப்பெரிய அளவில், ஆழ்ந்த உணர்ச்சியை நமக்கெல் லாம் உருவாக்கி, கருத்தாழமிக்க ஒரு பொழிவை, ஒரு பாராட்டுரையை, ஓர் ஊக்க உரையை இங்கே தந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்பது ஒருபக்கத்தில் இருந்தாலும், இந்தி யாவே பாராட்டக்கூடிய அளவில் இருக்கக்கூடிய ‘‘தலை சிறந்த நாடாளுமன்றவாதி” (‘‘தி பெஸ்ட் பார்லிமெண் டேரியன்”) என்ற பெருமையை மாநிலங்களவையில் பெற்றிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அருமைச் சகோதரர் மானமிகு திருச்சி என்.சிவா எம்.பி., அவர்களே,
நாங்கள் பிரிக்கப்பட முடியாதவர்கள் – பிரிக்கப்படக் கூடாதவர்கள்!
அதேபோன்று, இந்நிகழ்வில் நம்மோடு என்றைக்கும் பிரிக்கப்பட முடியாதவராக – இணைக்கப்பட்ட குழலாக இருக்கக்கூடிய, பெரியார் திடலில் உருவானவராக இருப்பவர் என்பதை பெருமகிழ்ச்சியோடு சொல்லி, திராவிடர் கழகத்தின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அதில் எழுச்சித் தமிழர் இல்லாமல் அந்த நிகழ்ச்சி நடை பெறாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நாங்கள் பிரிக்கப்பட முடியாதவர்கள் – பிரிக்கப்படக் கூடாத வர்கள் என்பதை இன்றைக்குப் பதிவு செய்து கொண்டு, அருமையான கருத்துகளை இங்கே எடுத்து வைத்துள்ள எனது அன்புச் சகோதரர் மானமிகு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களே,
போராளியாக இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
இங்கே உரையாற்றி விடைபெற்றுச் சென்ற, நம்மோடு இணைந்து எல்லா இடங்களிலும் பயணித்துக் கொண்டி ருக்கக்கூடிய போராளியாக இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அன்பிற்குரிய தோழர் இரா.முத்தரசன் அவர்களே,
பாரம்பரியமிக்க சுயமரியாதைக் குடும்பத்தினுடைய சொக்கத் தங்கம்
மிகச் சிறப்பான வகையில், என்றைக்கும் கருப்புச் சட்டையோடு இணைந்து, அதற்காக மிகப்பெரிய அளவில் எல்லா இடங்களிலும் பல பேரை மிரட்டிக் கொண்டிருக்கக் கூடிய உருவமாக இருக்கக்கூடிய என்னுடைய பாராட்டுதலுக்குரிய, அன்பிற்குரிய அருமைச் சகோதரர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் – பாரம்பரியமிக்க சுயமரியாதைக் குடும்பத்தினுடைய சொக்கத் தங்கமாக -வாரிசாக இருக்கக்கூடிய அன்பிற்குரிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
அதேபோல, கழகத்தின் சொத்துகளில் ஒன்றான பிரச்சார செயலாளர் அன்பிற்குரிய அருள்மொழி அவர்களே,
இளைஞர்களுடைய நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டு வரக்கூடிய ஆற்றலாளர்!
இணைப்புரை வழங்கி விடைபெற்று சென்றிருக்கக் கூடிய கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் – இளை ஞர்களுடைய நம்பிக்கையை நன்றாகப் பெற்றுக் கொண்டு வரக்கூடிய ஆற்றலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைசிறந்த கொள்கை யாளர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் இருக்கக் கூடிய, நம்மீது ஈடுபாடுகொண்ட கொள்கை உள்ளம் படைத்த அய்யா பலராமன் அவர்களே,
தமிழ்நாட்டின் சிறந்த ஆய்வாளர் எழுத்தாளர் புலவர் பா.வீரமணி அவர்களே, என்னுடைய பாசத் திற்கும், அன்பிற்கும் உரிய முதுபெரும் தமிழ்ப் போராளி பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களே,
தமிழிசைக் கலைஞர் அன்பிற்குரிய சகோதரர்
டி.கே.எஸ்.கலைவாணன் அவர்களே,
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் தமிழ்ச் செல்வன் அவர்களே, தமிழக மூதறிஞர் குழுவின் தலைவர் டாக்டர் தேவதாஸ் அவர்களே, மற்றும் பல் வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக் கூடிய அருமைப் பெரியோர்களே, உலகம் முழுவதுமிருந்து காணொலி மூலமாக இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைத் தட்டிக் கொடுக்கின்ற நிகழ்ச்சி!
முதலாவதாக என்னுடைய வாழ்நாளில் கிடைத்த அரும்பேறு இந்தப் பேறு. மேலும் உழை – மேலும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்; உங்களுடைய உழைப்பு என்பது நிறுத்தப்படக் கூடாத ஒன்று என்று ஊக்கப்படுத்துவதற்கு, தட்டிக் கொடுப்பதற்கு – ஓடுகின்ற வண்டியில் கட்டப்பட்டு இருக்கின்ற குதிரையை எப்படி தட்டிக் கொடுப்பீர்களோ – அதுபோல என்னைத் தட்டிக் கொடுக்கின்ற நிகழ்ச்சியாகத்தான் இதைப் பார்க்கின்றேனே தவிர, இது பெரிய அங்கீகார நிகழ்ச்சி என்று நான் நினைக்கவில்லை. அப்படிப் பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி – நான் எதிர்பாராத ஒன்று எனக்குக் கிடைத்தது.
எளிதில் உணர்ச்சிவயப்படாத நான்,
மிகுந்த உணர்ச்சிவயப்பட்டேன்!
பல நேரங்களில் எதிர்பாராமல்தான் பல கிடைத்திருக் கின்றன. நான் எதிர்பார்க்கவேயில்லை – நம்முடைய அருமைச் சகோதரர் திருச்சி சிவா அவர்கள், இங்கே பேசுவதற்கு முன், நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சரான – இந்தியாவே போற்றக் கூடிய – இந்தியாவிலேயே முதலமைச்சர்களின் முதல் முதலமைச்சர் என்ற நிலையில், எதிர்நீச்சல் அடித்தாலும், என்றைக்கும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என் பதை இந்திய நாட்டிற்கே உணர்த்திக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள், வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கிறார்.
அந்த உயிரோட்டமுள்ள வாழ்த்துச் செய்தியை – ஒவ்வொரு சொல்லிலும் ஆழமான பொருள் உள்ள கருத்துரையாக இருக்கக் கூடிய அந்த வாழ்த்துச் செய்தியை நம்முடைய சிவா அவர்கள் படித்தபொழுது, எளிதில் உணர்ச்சிவயப்படாத நான், மிகுந்த உணர்ச்சி வயப்பட்டேன்.
காரணம், அய்யா அவர்கள், ‘‘பகுத்தறிவுவாதி எந்தக் காலத்திலும் உணர்ச்சிவயப்படக் கூடாது” என்று சொல்வார்.
இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய
ஒரு தலைவராக இன்றைக்கு வளர்ந்திருக்கிறார்!
அதுபோலவே, அவர்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன் என்று சொன்னால், தனிப்பட்ட முறையில் அல்ல. இன்றைக்கு அவர் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு தலைவராக இன்றைக்கு வளர்ந்திருக்கிறார் என்பது இருக்கிறதே, திராவிட இயக்கத்தை – திராவிட மாடலை – திராவிடக் கொள்கையை தமிழ்நாடு மட்டும்தான் ஏற்றுக்கொண்டது என்று அல்ல – ஆர்.எஸ்.எஸை – அதனுடைய அரசியல் வடிவமான பா.ஜ.க.வை – அதனு டைய காவிக் கொள்கைகளை – அதனுடைய மக்கள் விரோத கொள்கைகளை – மிகப்பெரிய அளவிற்கு மீண்டும் சனாதனத்தை உருவாக்கி, அதை சரியாசனத்தில் அமர வைக்கவேண்டும் என்று நினைக் கின்ற இந்தக் காலகட்டத்தில் – அதற்குக் கடுமையான எதிர்ப்பு எங்கே இருந்து கிளம்பியது என்றால், இந்தப் பெரியார் மண்ணில் இருந்துதான் உருவாகும் என்பதை நிலைநாட்டி அழகாகச் சொன்னார்.
கருநாடகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் நம்முடைய முதல மைச்சர் சொன்னார், ‘‘தென்னாட்டிலேயே கதவு சாத்தப்பட்டுவிட்டது” என்று.
இதற்கடுத்தபடியாக வடநாட்டிலும் மற்ற இடங்களிலும் நடைபெறும்.
இந்தியாவிற்கே கற்றிடமாக
இருக்கப் போகிறது தமிழ்நாடு!
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஒரு தோழர், சகோதரர் கலைஞர் மறைந்துவிட்டார்; பெரிய தலைவர்கள் இல்லை – தமிழ்நாட்டில் வெற்றிடம் என்று சில வெத்துவேட்டுகள் சொன்னார்கள். ஆனால், நாங்கள் சொன்னோம் – தமிழ்நாடு வெற்றிடமல்ல – இனி வரப் போகின்ற தலைமை யிடமிருந்து கற்றிடமாக இந்தத் தமிழ்நாட்டை மாற்றுவதோடு, இந்தியாவிற்கே கற்றிடமாக இருக்கப் போகிறது என்று சொன்னோம்.
ஒரு பெரிய திருப்பம்
ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது!
பீகார் தலைநகர் பாட்னாவில் அதற்குரிய முதல் தொடக்கம் – ஆரம்பமாகியிருக்கிறது.
ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
தோழர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தபோது, எனக்கு இதில் விருப்பமில்லை என்று சொன்னேன். பெரிய அரங்கம் தேவையில்லை – வேண்டுமானால் சாதாரண ஓர் அரங்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்றேன்.
இதுவரையில் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்றுகூட என்னிடத்தில் சொல்லவில்லை. இந்த நிகழ்விற்கு ஒப்புக்கொண்டேன் கடைசியாக.
ஏன் ஒப்புக்கொண்டேன் என்று சொன்னால் – உங்களுக்கெல்லாம் தெரியும் – என்னுடைய பிறந்த நாளன்று நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள் வதில்லை. 75 ஆம் ஆண்டு பிறந்த நாளிலும், 80 ஆம் ஆண்டு பிறந்த நாளிலும் கலைஞர் அவர்கள் என்னை கட்டிப்போட்டார்கள்.
நம்முடைய முதலமைச்சர் அவர்களின்
அன்பு ஆணையினால்…
அதற்குப் பிறகு 90 ஆம் ஆண்டு பிறந்த நாளன்று நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அன்பு ஆணையினால், கலைவாணர் அரங்கத்தில் அவ்விழா நடந்தது.
இப்போது நான் ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் உண்டு. ஏன் ஒப்புக்கொண்டேன்? 90 இல் 80 வீரமணி என்ற விழாவிற்கு.
அந்த ரகசியத்தை வெளியிட்டால், அது எல்லோ ருக்கும் பயன்படும். 90 இல் 80 என்பதைப்பற்றி எல்லோரும் இங்கே பேசினார்கள்.
அந்த 80 இல்லாவிட்டால், 90 இல்லை!
சுருக்கமாகச் சொல்கிறேன், இந்த 90 அந்த 80 தால்தான் கிடைத்தது. அதுதான் ஒப்புக்கொண்டதற்குக் காரணம். அந்த 80 இல்லாவிட்டால், 90 இல்லை. அதுதான் ரகசியம். இது எனக்கு மட்டும் அல்ல நண்பர் களே, களத்தில் நிற்கின்ற போராளிகளாக இருக்கக்கூடிய அத்துணை பேரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை.
நீங்கள் ஒதுங்கிப் போனால், உங்கள் வாழ்க்கை சுருங்கிப் போகும்; நீங்கள் உழைத்தால், உயர்வீர்கள் – நீங்கள் என்று சொல்லும்பொழுது, நாம் உயர்வோம் என்று சொல்லும்பொழுது – நாடு, இனம், மொழி, மக்கள். அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
90 இல் வந்து, இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் 20 ஆகத் திரும்புகிறேன்!
எனவேதான், இந்த விழாவிற்கு நான் ஒப்புக் கொண்ட சூழ்நிலை வந்தது. இன்றைக்கு 90 இல் வந்து, இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் 20 ஆகத் திரும்புகிறேன் என்பதுதான் இந்த நிகழ்ச்சியால் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய லாபம் எனக்கு. இன்னும் உழைக்கக்கூடிய வாய்ப்புகள்; இவ்வளவு பேர் தட்டிக் கொடுத்திருக்கிறார்கள்; அவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை – நீங்கள் காட்டுகின்ற அன்பு – இவை அத்தனையும் மேலும் மேலும் என்னை முதுமையாக்கவில்லை – இளமையாக்கிக் கொண்டிருக்கிறது.
தந்தை பெரியாரைப்பற்றி ஒன்றிய உள்துறை அமைச்சராக அன்றிருந்த உமாசங்கர் தீட்சத் என்பவர் – அவரை பலர் மறந்திருக்கலாம். அவர் சொன்னார், ‘‘பெரியாருக்கு வயதாகிவிட்டது; இனிமேல் அவர் எவ்வளவு காலம் இருக்கப் போகிறார். எனவே, அந்த இயக்கத்தைப்பற்றி அதிகம் கவலைப்படவேண்டிய தில்லை” என்று அன்றைய உள்துறை அமைச்சர் உமாசங்கர் தீட்சத் சொன்னார்.
கோவையில் பொதுக்கூட்டத்தில் அய்யா அவர் களும், நாங்களும் உரையாற்றினோம். நான் முதலில் பேசும்பொழுது அதற்கு பதில் சொன்னேன்.
என்னுடைய கொள்கைக்கோ, என்னுடைய இயக்கத்திற்கோ வயதாகவில்லை!
பிறகு அய்யா உரையாற்றும்பொழுது, ‘‘ஆமாம், எனக்கு வயதாகி விட்டது, அதுதானே உண்மை. அதற்கு ஏன் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். அதற்காக நாம் கோபப்பட வேண்டியதில்லையே! அவருக்கு நான் சொல் லிக் கொள்கிறேன், எனக்குத்தான் வயதாகி விட்டதே தவிர என்னுடைய கொள்கைக்கோ, என்னுடைய இயக்கத் திற்கோ வயதாகவில்லை. அவை என்றைக்கும் இளமை யாகத்தான் இருக்கும்” என்று பதில் சொன்னார்.
(தொடரும்)