150 கோடி ரூபாய்க்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் ஒன்றை தலைநகர் டில்லியில் உருவாகியிருக்கிற இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூர் அலுவலகம் சென்று வந்த கதையை இந்த நேரத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
நாக்பூர்
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்காக சங்கத்தின் தோழர்களோடு நாக்பூர் சென்றிருந்தோம். நாக்பூர் என்று முடிவானதுமே எப்படியாகினும் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் இருந்தது. மாநாட்டிற்கு வந்திருந்த மற்ற தோழர்களிடம் இதை பகிர்ந்து கொண்டால் அனுமதிப்பார்களா? என்கிற தயக்கம் மனதில் இருந்தது. ஆகவே யாருக்கும் தகவல் சொல்லாமல் நானும் இன்னும் இரண்டு தோழர்களும் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக ஒரு நாள் அதிகாலை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் செல்ல திட்டமிட்டோம். அதில் ஒரு தோழர் விவேகானந்தா கல்வி வளாகத்தில் பயின்றவர். அதனால் மாணவப் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ். சாகாக்களில் பங்கேற்ற அனுவபவம் பெற்றிருந்தார். நாங்கள் சென்ற 2014 ஜனவரியில் பிஜேபி ஆட்சி மத்தியிலும் இல்லை, மஹாராட்டிர மாநிலத்திலும் இல்லை என்கிற பின்புலத்தோடு இனி வரும் பகுதியை வாசிக்கவும்.
மக்கள் மத்தியில் ஊடுருவல்
அறையிலிருந்து பிரதான சாலைக்கு வந்து ஒரு ஆட்டோவை நிறுத்தி ‘‘ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் செல்ல வேண்டும்” என்று சொன்னோம். அவர் எந்தத் தெரு? முகவரி என்ன? என்று ஒரு கேள்வியும் கேட்கவில்லை. நேராக ஆர்.எஸ்.எஸ். அலுவலக வாசலில் கொண்டு போய் தன் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது தெளிவாக ஒன்று தெரிந்தது. ஆர்.எஸ்.எஸ். அதிகாரத்தில் இல்லாத போதே எந்த அளவிற்கு எளிய மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ளது என்று ஒரு ஆட்டோ காரரின் செயல்பாட்டால் புரிந்து கொள்ள முடிந்தது. (அதற்கு பின் தான் இந்தியாவில் மோடி ஆட்சி அரங்கேறியது.) அந்த அலுவலகம் மக்கள் குடியிருப்பிற்கு நடுவே ஒரு சிறிய கோட்டை போல இருந்தது. அந்த அலுவலகத்தின் வாசலிலும், அதன் கோட்டை போன்ற மதில் சுவர்களின் மேலேயும் துணை இராணுவப்படை பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்தது. வாசலில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் மண்மூட்டைகளுக்கு பின்னால் மறைந்து கொண்டு, துப்பாக்கியின் முனை மட்டும் வெளியே தெரிய, எல்லையில் நிற்பது போல் நின்று காவல் காத்துக் கொண்டிருந்தார். வாசலில் ”மெட்டல் டிடக்டர்” பரிசோதனை வளைவுகளும், அதைத் தாண்டி வரும் எல்லோரையும் விமானநிலையத்தில் பரிசோதிப்பது போலவும், முழுவதும் பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதித்தார்கள்.
நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்
புத்தர் படம் உண்டு, அண்ணல் அம்பேத்கர் படம் உண்டு , இல்லாத ஒரே ஒரு படம்
தந்தை பெரியார் படம் மட்டுமே
ஆண்கள் சூழ் உலகம்
நாங்கள் மூவரும் எல்லா பரிசோதனைகளையும் கடந்து அந்த அலுவலகத்திற்குள் சென்று விட்டோம். வலது புறத்தில் அந்தக் கோட்டை மதிலுக்கு உட்புறமாக ”சாகாக்கள் நடத்தும்” திடல் இருந்தது. இடது புறத்தில் நிர்வாக அலுவலகமும், அதன் அருகிலேயே மூன்றடுக்கிற்கு பெரிய கட்டடம் ஒன்றும் இருந்தது. அதற்கு எதிரில் அச்சகம் மற்றும் நூல் விற்பனை நிலையம் ஒன்றும் இயங்கிவந்தது. அந்தப் பெரிய கட்டடத்தில் பலர் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கான சமையல் உள்ளிட்ட எல்லாமும் அந்த அலுவலகத்திற்குள்ளாகவே நடைபெற்றது. அந்த அலுவலக வளாகத்திற்குள் ஒரு பெண்ணை கூட நாங்கள் பார்க்கவில்லை. அது ஆண்களால் சூழப்பட்ட உலகமாக இருந்தது.
அந்த நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஊழியர் அரசு அலுவலகங்களில் இருப்பது போல் ஒரு பெரிய ரிஜிஸ்டரில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எங்களை பார்த்தவுடன் அருகில் இருந்த இருக்கையில் அமரச்சொன்னார். தன் வேலைகளை முடித்துக்கொண்டு, கொஞ்ச நேரம் கழித்து எங்களிடம் வந்த அவர் ”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று ஹிந்தியில் கேட்டார். எங்களுக்கு என்ன சொல்வதென்று முதலில் தெரியவில்லை. எங்களுக்கு ஹிந்தியும் தெரியாது. நாங்களாகவே சுதாரித்துக் கொண்டு ஆங்கிலத்தில் எங்கள் உரையாடலை தொடர்ந்தோம். “நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம். எங்கள் ஊரில் ஆர்.எஸ்.எஸ். சாகாக்களில் இளம் வயதில் பங்கேற்றுள்ளோம். இங்கு இருப்பதைப் போலே அங்கு ஆர்.எஸ்.எஸ். வலிமையாக இல்லை. ஆகவே எங்களால் எங்கள் ஊரில் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. இப்போது எங்கள் அலுவல் பணியாக நாக்பூர் வந்தோம். ஆகவே நம் அலுவலகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டோம். அதற்காகவே வந்தோம்” என்று சொன்னேன். அவர் எங்களை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு இன்னும் கொஞ்ச நேரம் அந்த வரவேற்பு அறையிலேயே அமரச்சொன்னார். அந்த நேரம் முழுவதும் நாங்கள் அங்கிருந்த ஊழியர்களால் கண்காணிக்கப்பட்டோம்.
கண்காட்சி
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் எங்கள் அருகே வந்த அவர், “இந்த அலுவலகத்தில் ஒரே ஒரு கண்காட்சி அறை இருக்கிறது. அதை மட்டும் நீங்கள் பார்க்க அனுமதிக்கப்படுவீர்கள்” என்று கறாராக சொன்னார். நாங்கள் சம்மதித்தோம். அதன் பின் எங்களை அந்த மூன்று அடுக்கு மாடியுள்ள கட்டடத்தின் முதல் தளத்திற்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில் இடையில் தெரியும் அதன் மூன்று அடுக்குகளை அண்ணார்ந்து பார்த்தோம். பலர் அங்கு தங்கியிருப்பது தெரிந்தது. முதல் தளத்தில் அங்கிருக்கும் அறை ஒன்றிற்குள் அழைத்துச் சென்றார். அது கண்காட்சி அறை. அந்த அறைக்குள் செப்டம்பர் 27, 1925இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகிய காலம் தொடங்கி அந்த அமைப்பின் வரலாற்றுக் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த அமைப்பை உருவாக்கிய ஹெட்கேவர், மூஞ்சே, கோல்வால்கர் உள்ளிட்டவர்களின் படங்கள் தொடங்கி அதில் பணியாற்றியவர்களின் படங்கள் அங்கு இருக்கின்றன.
உலகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். கிளைகள் எந்தெந்த நாட்டில் இருக்கிறது என்கிற குறிப்போடு ஒரு உலக வரைபடம் அங்கு உள்ளது. அந்த வரைபடத்தில் அனேகமாக உலகம் முழுக்க அவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. அதில் சில நாடுகளில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு கிளைகள் இல்லை. அப்படி கிளைகள் இல்லாத நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளாக இருக்கலாம் என்று நீங்கள் கருதக்கூடும். ஆனால் அது தான் இல்லை. பாகிஸ்தான், ஆப்கான் உட்பட எல்லா நாடுகளுக்குள்ளும் அவர்களுக்கு கிளைகள் உள்ளன. அவர்களுக்கு கிளைகள் இல்லாத நாடுகள் சீனா, கியூபா, வடகொரியா, வியட்நாம், ரஷ்யா ஆகியவை. (கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதை பயன்படுத்தி இங்கும் பரவியிருக்கக்கூடும்.) ஒரு காலத்தில் வி.எச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா “இந்துக்களின் மூன்று எதிரிகளை சூலாயிதத்தின் மூன்று முனைகள் மூலம் கொல்ல வேண்டும். அந்த மூன்று எதிரிகள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் (மதச் சார்பின்மை பேசுவோர்)” என்று சொன்னார். அதன் பொருள் இந்த வரைபடத்தை பார்த்த போது தெளிவாக தெரிந்தது.
அம்பேத்கர் படம்
இந்தியாவின் பல்வேறு தத்துவ ஞானிகளின் உருவங்கள் மற்றும் சிலைகள் அந்த அறைக்குள் இருக்கின்றன. தன் வாழ்நாள் முழுவதும் ஸநாதானிகளை எதிர்த்த புத்தரின் பெரும் சிலை அந்த அறைக்குள் இருந்தது. அதே போல் இந்து மதத்தின் கீழ்மையை பக்கம் பக்கமாக எழுதியதோடு, “இந்துவாக பிறந்தேன் இந்துவாக சாகமாட்டேன்” என்று தன் மரணத்திற்கு முன் மதம் மாறிய அண்ணல் அம்பேத்கரின் பெரும் உருவப்படம் அந்த அறைக்குள் இருந்தது. இவ்வாறு இந்து மதத்தை போற்றியவர்களை மட்டுமல்ல, யாரெல்லாம் இந்து மதத்தை விமர்சித்தார்களோ அவர்களையும் போற்றும் விதமாக அவர்களின் உருவங்கள் அந்த அறைக்குள் இருக்கிறது. இந்து மதம் குறித்து விவாதித்த ஒரே ஒரு தலைவர் உருவம் மட்டும் அந்த அறைக்குள் இல்லை. அவர் தந்தை பெரியார்.
அந்தக் கண்காட்சி அறையை விட்டு வெளியே வந்ததும் , எதிரே உள்ள அச்சகம் மற்றும் நூல் விற்பனை நிலையத்திற்கு சென்றோம். அங்கு இந்திய மொழிகள் அத்தனையிலும் நூல்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும் எல்லாம் சிறு சிறு நூல்கள். அந்த நூல்களில் யாரையெல்லாம் இடது மற்றும் முற்போக்காளர்களின் தலைவர்களாக கொண்டாடுகிறோமோ, யாரெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தங்கள் வாழ்நாளில் ஏற்றுக்கொள்ளாதவர்களோ, அவர்களை ஆர்.எஸ்.எஸ். தன் மொழியில் புகழ்பாடும் நூல்கள் அங்கு விற்பனைக்கு உள்ளன. அந்த நூல்களில் மேற்சொன்ன தலைவர்களான அம்பேத்கர் தொடங்கி பலரின் நூல்கள் அங்கு விற்பனைக்கு உள்ளன. ஹிந்துத்துவ வாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட காந்தியார் தொடங்கி, ‘‘நான் ஏன் நாத்திகனானேன்?” என்று நூல் எழுதிய பகத்சிங் வரை ”பாரதிய நாட்டை” உருவாக்க பாடுபட்ட தலைவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அந்த நூல் நிலையத்திலும் அவர்கள் அச்சிட்டு வெளியிடாத ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பொறுத்த வரையில் கூடுமானவரை அவர்கள் தங்கள் சித்தாந்த எதிரிகளை திருதுராஷ்ட்ர ஆலிங்கனம் செய்தே அவர்களுக்கு முடிவுரை எழுத முற்படுவார்கள். அதற்கு அவர்களின் பல்வேறு துணை அமைப்புகளே சாட்சி. காந்திய சிந்தனை அவர்களுக்கு எதிரானது. ஆனால் அவர்களின் அமைப்புகளில் ஒன்றின் பெயர் ”சுதேசி விழிப்புணர்வு இயக்கம்”. ஏகலைவன் கட்டை விரலை வெட்டிய இவர்கள் தொடங்கிய அமைப்புகளில் ஒன்று, “ஏகலைவன் கல்வி அறக்கட்டளை”, முஸ்லீம்களை வன்மமாக நடத்தும் இவர்கள், ”முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்” என்ற அமைப்பையும் நடத்துகிறார்கள். தொழிற்சங்கங்களை கடுமையாக எதிர்ப்பவர்கள், “பாரதிய மஸ்தூர் சங்கம்” என்ற தொழிற்சங்கத்தை நடத்துகிறார்கள். பெண்கள் அரசியல் தளத்தில் மேல் எழுவதை விரும்பாதவர்கள், “துர்கா வாகினி” என்ற அமைப்பை நடத்துகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடிகளை இலக்கு வைத்து தாக்கும் இவர்கள், ‘‘வனவாசி கல்யாண் ஆசிரமம்” ”பஜ்ரங் தள்” போன்ற அமைப்புகளை நடத்துகிறார்கள். இந்த அமைப்புகளில் பல்வேறு அரசியல் தலைவர்களை பயன்படுத்துகிறார்கள். இது போன்ற ஆலிங்கன அமைப்புகளின் பட்டியலில் மட்டுமல்ல, அவர்கள் தமிழ்நாட்டை மட்டுமே மய்யமாகக் கொண்டு சில அமைப்புகளையும் (இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி) நடத்தி வருகிறார்கள். அந்த அமைப்புகளில் கூட அவர்களால் பயன்படுத்த இயலாத ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டும் தான்.
ஆகவே தான் எந்த வகையிலும் ஆலிங்கனம் செய்யவியலாத பெரியாரை மட்டும் இழிவுபடுத்தி முடிவுரை எழுத முற்படுகிறார்கள். அதற்கான பணிகளை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் தொடங்கிவிட்டார்கள். அம்மையார் மணியம்மையை பெரியார் திருமணம் செய்துகொண்டதற்கான காரணம், வாரிசுரிமைக்காக மட்டுமே. மகளாக தத்தெடுக்க அன்றைய அரசியல் சட்டத்தில் இடம் இல்லாததால், திருமணம் செய்துகொண்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தும் அவர் நடத்தையை இழிவு படுத்த அப்போதே தொடங்கிவிட்டார்கள். அப்படி அவர்கள் எடுத்த பல்வேறு ஆயுதங்களில் முக்கியமானது திராவிடத்திற்கு எதிரான தமிழ்த் தேசிய அரசியல். பெரியார் இருக்கும் வரை அதைக்கூட அவர்களால் எளிதில் செய்ய இயலவில்லை. ஏனென்றால் பெரியாரை வீழ்த்தும் அளவிற்கு தமிழுணர்வு கொண்டோர் யாருமில்லை. பெரியார் இறப்பிற்கு பின்பும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு பலரை தேர்வு செய்தார்கள். ஆனால் பெரும்பாலும் எல்லோருமே ஒரு கட்டத்திற்குப் பின்பு பெரியாரிடம் போய் சேர்ந்தார்கள். ஆனாலும் அவர்கள் விட்டபாடில்லை. தங்கள் முயற்சியை தொடர்ந்தார்கள். அப்படியாக அவர்களின் பெரியார் எதிர்ப்பு தமிழ்த் தேசிய வாகனத்தில் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் ஏற்றிவிட்டிருக்கும் ஓட்டுநர் தான் சீமான்.
சுயநல அரசியல்
சீமான் தன் சுயநலத்திற்காக எவ்வளவு வேலைகளை கடந்த இருபது ஆண்டுகளில் செய்து வந்துள்ளார் என்று சொல்ல தனி புத்தகமே எழுதலாம். 2006இல் வெளிவந்த சீமானின் தம்பி திரைப்படத்தை அதில் வரும் சேகுவாரா ஒளிப்படம் உள்ளிட்டவைகளுக்காக, அதில் தூவப்படும் உணர்ச்சிகரமான வசனங்களுக்காக நம்மவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்த போது, “இது ஈழத்தமிழர்களுக்கான படம்” என்று அய்ரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களை மய்யப்படுத்தி அங்கு தவறான விளம்பரம் மூலம் தனது ஈழத்தமிழர் வணிகத்தை தொடங்கியவர் சீமான். தன்னை வளர்த்துக் கொள்ள பெரியாரிய, இடதுசாரி மேடைகளை பயன்படுத்திக்கொண்டிருந்தவர், அதைவிட லாபகரமான ஈழத்தமிழர் அரசியல் பயன்படும் போது ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியின் வழிகாட்டுதலில் அதில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ்நாட்டில் இவர் தொடங்கிய ”நாம் தமிழர்” அமைப்பின் வளர்ச்சிக்கு பெரியார் தேவைப்படுவார் என்கிற வரை வலதுசாரிகளுடனான கள்ள உறவை இரகசியமாகவே பாதுகாத்து வந்தார். ஆனாலும் வலது சிந்தாந்தத்தை பரப்பும் வேலையை லாவகமாகவே செய்து வந்தார். வலதுசாரிகளின் சிந்தாந்தமான வர்ணாசிரமத்தை ”தமிழ்க்குடிகள்” என்று பெயர் மாற்றி தமிழ்த்தேசியத்தில் கலந்து ஊட்டினார். வலதுசாரிகளின் ஹிந்தி மேலாதிக்கத்திற்கு எதிரான தமிழ்நாட்டின் குரலை, “தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்கள் எதிர்ப்பு” என்று திசை திருப்பி, ஹிந்தி எதிர்ப்பிற்கான தென்னிந்தியாவின் வலுப்பெறும் மொழியுரிமைக் குரலை சிதைக்க முற்பட்டார். இந்தியாவில் ஆரியர்களை விடவும் பழைமையான மக்கள் திராவிட மக்கள் என்கிற கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தொல்லியல் மற்றும் அறிவியல் சான்றுகள் கிடைத்துவருகையில் ”திராவிடம் என்பதே மாயை” என்கிற வலதுசாரிகளின் கருத்தை தமிழ்த்தேசிய தேன் தடவிக் கொடுக்கும் வேலையை செய்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் மும்பையில் போய் குடியேறிய தமிழர் குடிம்பத்தை சேர்ந்த ஒருவர் மஹாராட்டிரா தேர்தலில் அங்குள்ள பிஜேபி சார்பாக நிற்கும் போது, அவர் தமிழர் என்று ஓடோடிப் போய் பிரச்சாரம் செய்யும் சீமான், தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் பல இடது மற்றும் முற்போக்காளர்களை இவர்கள் தமிழர்கள் இல்லை என்று கடந்த தேர்தல்களில் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.
பெரியார் எனும் பேரரண்
இவ்வாறு வலதுசாரிகளின் சிந்தாந்த அரசியலை தமிழ்த்தேசிய முலாம் பூசி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் விற்று வரும் சீமான் தற்போது ஆர்.எஸ்.எஸ்.சின் நீண்ட நாள் கனவுத் திட்டமான ”பெரியார் எனும் பேருருவத்தை சிதைக்கும் பணிகளுக்கு” ஒரு கடப்பாரையை போல் தோற்றம் தந்து செயல்படுகிறார். அதனால் தான் சீமான் பேச்சை இத்தனை நாட்களாக மறைமுகமாக ரசித்த பிஜேபி மற்றும் வலதுசாரிகள் தற்போது பகிரங்கமாக ஆதரித்து பகிர்ந்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தன் நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த ஆண்டில் பெரியார் மீது விழும் சிறு கீறல்களைக் கூட அவர்களின் வெற்றிச் சின்னங்களில் ஒன்றாக பொறித்துக்கொள்ள முயல்வார்கள். இந்தியாவின் எல்லா மாநிலத்திற்குள்ளும் தனித்து போட்டியிட்டு ஓரிரு சீட்டையேனும் பெற்றுவிடும் வலதுசாரிகளுக்கு அப்படி ஒரு சீட்டு கூட தனித்து பெறவியலாத மண்ணாக தமிழ்நாடு இருப்பதற்கு ‘‘பெரியார் எனும் பேரரண்” தடையாக இருக்கிறது. அதை தகர்க்க பல சிறு சிறு ஆணிகளைக் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த சிறு ஆணிகளில் ஒன்று தான் சீமான். தமிழ்நாட்டை பொறுத்த வரை அது தேவையில்லாத ஆணி.