தமிழில் பெயர் சூட்டுவீர்!
தலைவர்கள் மட்டுமல்ல இங்கு பள்ளிச்சிறார்களும் தமிழில் தான் கையொப்பமிடுகிறார்கள். பள்ளிப்பருவத்தில் இருந்தே சிறார்கள் தமிழில் கையொப்பமிடவேண்டும் என்று 1990 களில் கலைஞர் ஆட்சியின் போதே சட்டம் இருந்தாலும் 2021 ஆம் ஆண்டு அரசாணை மூலம் அனைத்து அரசு அலுவலர்களும் கட்டாயம் தமிழில் கையெழுத்து போட வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தது திராவிட மாடல் அரசு.
ஜூலை 27, 2023 அன்று வெளியான செய்தி கீழே:
பள்ளிக் கல்வித் துறையில் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களும் தமிழில் கையொப்பம் போட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழில் பெயர் எழுதும் போது, இனிஷியல் என்று சொல்லப்படும் முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை செயலில் இருக்கிறது. இதுதொடர்பாக அவ்வப்போது நினைவூட்டப்பட்டும் வருகிறது. பொதுமக்களும், பொதுப்பயன்பாடுகளில் இந்த முறையை பின்பற்ற ஊக்குவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஏற்ெகனவே குறிப்பிட்டுள்ளபடி கண்டிப்பாக தமிழ் மொழியை தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டே அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசினால் 2021ஆம் ஆண்டு வெளி யிடப்பட்ட அரசாணையைக் குறிப்பிட்டு, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சார்பில், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பணியாற்றி வரும் அனைத்து இயக்குநர்கள், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி, அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும், கையொப்பமிடும் போதும் கண்டிப்பாகத் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது’’ எனக் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையைக் குறிப்பிட்டுப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகைப்பதிவு ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிடவும் மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாணவர்களின் சான்றிதழை பெற்றோர் கையொப்பமிட்டு பெறும் போது, முன்னெழுத்தும் தமிழிலேயே இட வேண்டும். இவ்வாறு பள்ளிப் பருவத்திலேயே நடைமுறைப்படுத்து வதால் மாணவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும்.
இதுதவிர, பொதுமக்கள் அதிகம் அணுகக்கூடிய மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மின்சார வாரியம். போக்குவரத்துத் துறை பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த் துறை, வணிகவரித் துறை, சமூக நலத்துறை. காவல் நிலையம், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆகியவற்றில் பொதுமக்கள் பூர்த்தி செய்து அளிக்கும் விண்ணப்பங்களில் முன்னெழுத்து மற்றும் கையொப்பம் ஆகியவை தமிழில் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்றும் பள்ளிச் சீருடையில் நூற்றுக்கணக்கான சிறார்களை அழைத்து வந்து வெயிலில் பல மணி நேரம் உட்கார வைத்து ஜெய் சிறீராம் சொல்ல வைக்கிறது சங்பரிவார்க் கூட்டம்.
அரசு விழாவில் – அதுவும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் பல தரப்பட்ட மதக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் மக்கள் மத்தியில் ‘ஜெய் சிறீராம்’ என்று சொல்வது – திட்டமிட்டு வடவர்களைப் போல் தமிழர்களையும் மதவெறிக்கு பலியாக்கி அரசியல் லாபம் பெறலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்!
ஒரு கல்லூரிக்குச் சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்கள் மத்தியில் ராமஜெயம் முழக்கம் போட்டு மாணவர்களையும் முழக்கமிட வைத்துள்ளார்.
தமிழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நம் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள். பெயர் என்பது நமது இனத்தின், மொழியின் அடையாளம் அல்லவா!
வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப் பலகையை வைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துச் செயல்பட வைக்கிறது.
இந்த நிலையில் தமிழில் கையொப்பமிடுவது குறித்தெல்லாம் பிரதமர் பேசுவது வேடிக்கைதான்!