தேசிய அளவில் முன்மாதிரி அணி –
மதவாத சக்திகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும்
தி.மு.க. தலைமையிலான அணி!
சென்னை, ஏப். 21– சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று (20.4.2025) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி சந் தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது வருமாறு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எங்களது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ. சண்முகம் ஆகியோரோடு சந்தித்துப் பேசினேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. மதுரையில் அண்மையில் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டு மக்கள் மிகச் சிறப்பான ஆதரவை அளித்து மாநாட்டை வெற்றி பெறச் செய்தனர்.
தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு இன்னும் 12 மாதகால அவகாசம் உள்ளது. அதே காலகட்டத்தில் கேரளாவிலும் மேற்குவங்கத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடை பெறவுள்ளன. மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்ட நாங்கள் பணியாற்றி வரகிறோம். இத்தகைய அணி தான் மதவாத சக்திகளின் பேராபத்தை தடுத்து நிறுத்தமுடியும்.
மதவாத சக்திகளை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு
இன்றைய (20.4.2025) சந்திப்பின்போது மதவாத சக்திகளை எதிர்த்து தமிழ்நாட்டில் வலுவான அரசியல் அணியை ஏற்படுத்தியதற்காகவும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரையும் ஓரணியில் திரட்டியதற்காகவும் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் சிறப்பான பங்களிப்பிற்காக நாங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் திமுக, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு அனைத்து சக்திகளையும் ஓரணியில் திரட்டியதால் கடந்த கால தேர்தல்களில் நல்ல முடிவுகள் கிடைத்தன. முக்கியமாக தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. – பா.ஜ.க. சந்தர்ப்பவாத கூட்டணி
அதிமுக -பாஜக இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மதச் சார்பின்மை மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டில், ஜனநாயக உரிமைகள் மீதும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மீதும் பாசிச குணம் கொண்ட அமைப்பான ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் நரேந்திரமோடி அரசு வலுவான தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. போராடும் மக்களின் உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்கிறது. மோடி அரசு வக்ஃபு வாரிய சட்டதிருத்த மசோதாவைஅண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகள் மீது மோடி அரசு நடத்தி வரும் தாக்குதலுக்கு சமீபத்திய உதாரணம் இந்த மசோதா ஆகும். நாடாளுமன்றத்தில் அதிமுக இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது. அதேநேரம் தமிழ்நாட்டில் அதிமுக பாஜகவுடன் கை கோர்த்துள்ளது. இது படுமோசமான சந்தர்ப்பவாதம் ஆகும்.
உச்சநீதிமன்றத் தலையீடு
வக்ஃபு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மோடி அரசு சிறுபான்மை மக்கள் மீது நடத்திவரும் தாக்குதலுக்கு சமீபத்திய சரியான உதாரணம் இந்த மசோதா ஆகும். உச்சநீதிமன்றம் இந்த சட்டதிருத்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை மீறுவதாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆளுநர் விவகாரத்தில்
தமிழ்நாடு அரசின் வெற்றி
தமிழ்நாடு அரசின் வெற்றி
அதேநேரம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அணுகுமுறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தமிழ்நாடு அரசு வெற்றி பெற்றுள்ளதற்காக மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டோம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்கள் நிறுத்தி வைத்துள்ளார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரிதிலும் அரிதான தீர்ப்பை அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை எவ்விதக் காரணமும் இல்லாமல் நிறுத்தி வைக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை உச்நீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அசாதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது முக்கியமானதாகும்.
ஆக்கப்பூர்வமான விவாதம்
கேரளா சட்டப்பேரவையில் மக்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அம்மாநிலத்தில் முன்பு இருந்த ஆளுநர் நிறுத்திவைத்திருந்தர். எனவே ஒன்றிய- மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை சில கவலைக்குரிய விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆளுநரின் எதேச்சதிகார நடவடிக்கையை உச்சநீதிமன்றத்தில் சட்ட ரீதியாக அணுகி அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்று உள்ளது. இன்றைய சந்திப்பின்போது முதலமைச்சருடன் தோழமை ரீதியாக ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றது.
தி.மு.க. தலைமையிலான அணி வலுப்பெறும்
ஓராண்டுக்குள் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குச் சக்திகளை தமிழ்நாட்டில் திமுக ஓரணியில் திரட்டியுள்ளது. இந்த அணி ஒட்டுமொத்த தேசத்திற்கு முன்மாதிரியாக உள்ளது. எனவே, இந்த அணி மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும் பல கட்சிகள் இந்த அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் பாஜக – அதிமுக இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சிகளை எதிர்க்கும் பலர் எங்களோடு கை கோர்க்க வாய்ப்புள்ளது. இவ்வாறு எம்.ஏ.பேபி கூறினார்.
தேர்தல் குறித்து முதலமைச்சருடன் விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பாஜக- அதிமுக இடையே ஏற்பட்டுள்ள சந்தர்ப்பவாத கூட்டணி குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த அணி தமிழ்நாடு அரசியலில் ஆதாயமடைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
மூன்றாவது முறை நிச்சயம்
கேரளா அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த பேபி, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சி அமைத்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள மாநில மக்கள் இந்த அரசு மேலும் தொடரவேண்டும் என்று வாக்களிக்க தயாராகி வருகிறார்கள். மக்களுக்காக நாங்கள் கடுமை யாக உழைக்கிறோம். அவர்களும் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பாளர்கள். நிச்சயமாக 3 ஆவது முறையாக கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியைக் கைப்பற்றும் என்று குறிப்பிட்டார்.