சென்னை, ஏப். 21- அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவா் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிர் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், பழஞ்சநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் வெற்றிச்செல்வன் (26 ). கடந்த 2022-ஆம் ஆண்டு இவா், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி பிருந்தா என்பவரை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார். பின்னா் பிருந்தா 7 மாத கா்ப்பிணியான பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணமான பிறகு சென்னை சென்ற வெற்றிச்செல்வன், பிருந்தாவுடன் பேச மறுத்து, குழந்தை பிறந்தும் கூட பார்க்க வரவில்லை. இதுகுறித்து பிருந்தா கேட்டதற்கு, வெற்றிச்செல்வனும், அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வெற்றிச் செல்வனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவுள்ள தாகவும் கூறியுள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினா் வழக்குப் பதிந்து வெற்றிச்செல்வனை கைது செய்து, அரியலூா் மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டி.செல்வம், வரதட்சணை கேட்டு பிருந்தாவை கொடுமைப்படுத்திய கணவா் வெற்றிச்செல்வன், மாமனார் காமராஜ் (63), மாமியார் வள்ளி(52), நாத்தனார் ஜெனி (26) ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து 18.4.2025 அன்று தீா்ப்பளித்தார்.
இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் அரசு தரப்பில் ராஜா ஆஜரானார்