திருப்போரூர், ஏப். 21– திருப்போரூர் திருக்குறள் பேரவை சார்பில், பொது இடங்களில் திருக்குறள் பலகை வைத்தல், பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி வழங்குதல், திருக்குறள் சார்ந்த பல திறன் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக திருக்குறள் முழக்கப் பேரணி நடைபெற்றது. பேரவைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
திருப்போரூர் பிரனவ மலை கோயில் நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணி வடக்கு மாடவீதி, கிழக்கு மாடவீதி, தெற்கு மாட வீதிகளில் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு. திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து முழக்கமிட்ட வண்ணம் ஊர்வலமாக சென்றனர்.
வீடுதோறும் திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் செந்தில்குமார், லட்சுமி, மேரி ஸ்டெல்லா, இணைச் செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர் மோகனஜோதி மற்றும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருக்குறள் முழக்கப் பேரணி, திருக்குறளை மக்களிடையே பரப்பவும், அதன் மூலம் நல்லொழுக்கம், அறிவு, அறம் போன்றவற்றை வளர்க்கவும் உதவும் என்று திருக்குறள் பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.