முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி – மே 3

Viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.20- 2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் வரும் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு:

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாளன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர் வரும் 15.8.2025 அன்று நடைபெறும் சுதந்திர நாள் விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப் பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2024 (1.4.2024) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2025 (31.3.2025) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2024- 2025) அதாவது 1.4.2024 முதல் 31.3.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்பட கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in உள்ளது. இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இணைதளம் மூலம் விண்ணப்பிக்க இறுதிநாள் வரும் மே 3ஆம் தேதி மாலை 4 மணி ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை-84. அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசிஎண். 7401703480 (அல்லது) 044-26644794 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *