சென்னை, ஏப்.20- சென்னையில் ஜூன் மாதம் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் 630 வழித்தடங்களில் 3,200 பேருந்துகளை இயக்கி வருகிறது, அதில் தினமும் 32 லட்சம் பேர் வரை பயணம் மேற்கொள்கின்றனர்.
மேலும் நகரின் போக்குவரத்து தேவை அதிகரிப்பதாலும், காலாவதியாகும் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்பதாலும் தேவைக்கு ஏற்ப புதிய பேருந்துகள் வாங்கப் படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாநகர் மற்றும் புறநகர் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
தற்போது சென்னை உட்பட பல்வேறு மாநகரங்களில் புதிதாக வாங்கப்பட்ட தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் கால நிலைக்கு ஏற்ப சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என அரசு தெரிவித்தது.
இதையடுத்து தமிழகத்தில் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன், கடந்த 2023ஆம் ஆண்டு 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் விடப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டு மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரப்பட்டது.
மேலும் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு இரண்டாவது கட்டமாக மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 600 மின்சார தாழ்தள பேருந்துகள் வாங்க கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கோரியது.
சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில வாரங் களுக்கு முன் சென்னையில் பயன்பாட்டிற்கு வரவுள்ள பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பேருந்துகள் தயாரான நிலையில் அவற்றை இயக்குவதற்கான கட்டமைப்புகளை நிறைவு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஜூன் மாதம் முதல் 100 மின்சார தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
வியாசர்பாடி, பெரும் பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை ஆகிய 5 பேருந்து பணி மனைகளில் இருந்து பேருந்துகளை இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
மின்சாரப் பேருந்து களுக்கான சார்ஜர் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் 5 பணிமனைகளில் முழு வீச்சல் நடைபெற்று வருகிறது.
தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் மாற்றுத் திறனாளிகள், சிறியவர்கள் முதல் முதியவர்கள் என அனைவராலும் சுலபமாக ஏறி-இறங்கும் வகையில் இந்த பேருந்துகள் வடிவமைக் கப்பட்டுள்ளன.
ஜூன் மாதம் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.