ராமானுஜர் சொன்னதாகக் கூறப்படும்
கூற்றை இன்று ஏற்கிறார்களா?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
மின்சாரம்
“ஜாதி பேதமற்ற சமூகம் கண்ட ஸ்ரீராமானுஜர்” என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதத்தில்’ ஒரு கட்டுரை (21.4.2023, பக். 10) இதோ அந்தக் கட்டுரை:
ராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட் டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக் கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். உறங்காவில்லிதாசர் என்ற வேடுவ குலத்து மாணவரை தனது சீடராக ஏற்றுக் கொண்ட திருக் கோஷ்டியூர் நம்பியிடம் சரண் புகுந்தார் ஆனால் நம்பியோ, ராமானுஜரை நம்பி மந்திரத்தின் பொருள் கூற மறுத்தார் தொடர்ந்து 17 முறை ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.
ஒவ்வொருமுறையும் ‘நான் செத்து வா’ என்றே பதில் கிடைத்தது 18வது சந்திப்பில். அடியேன் ராமானுஜன் என்று சொன்னபோது திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் உபதேசத்தை பெற்ற ராமானுஜர் மறு நிமிடமே நேராக திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீதேறி. திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உரக்க சொன்னார். இதனால் கோபமுற்ற நம்பி ராமானுஜரிடம் நீ ரகசியத்தை வெளிப்படுத்தியதன் மூலம் நரகம் செல்வாய் என்று சொல்லி இருந்தேனே அதனை மீறி எப்படி மற்றவர்களுக்கு சொன்னாய் என்று கேட்ட போது நான் ஒருவன் நரகம் செல்வதின் மூலம், இந்த மந்திரத்தை அறிந்து கொண்ட ஆயிரக் கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் எனக்கு அது ஒன்றே போது மானது என்றார்.
திருவாலி-திருநகரி சேத்திரத்தில் ராமனுஜர் தனது சிஷ்யர்களுடன் ஒரு தெரு வழியே வந்து கொண்டிருந்தார். எதிரே தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட ஜாதியைச் சார்ந்த ஒரு முதிய பெண்மணி வந்து கொண்டிருந்தாள். ”அம்மணீ! சற்று விலகி நில்லுங்கள். நாங்கள் போய்விடுவோம்” என்றார் ராமானுஜர். அந்த அம்மையார் “எந்தப் பக்கம் ஒதுங்கோணுங்க! வலப்பக்கம் ஒதுங்கினா பரகாலன் பெருமாளை வழிப்பறி செய்த திரு மன்னன் கொல்லை. இடது பக்கம் ஒதுங்கினா திருவாலன் பெருமாள் கோயில், பின்பக்கம் போனா திருக்கண்ணபுரம், திருக்கோயில். முன்பக்கம் வந்தா நீர் இருக்கிறீர். எந்தப்பக்கம் ஒதுங்கட்டும் சொல் லுங்க?” அதிர்ந்து போய் திகைத்து நின்றார் ராமானு ஜர். “ஆணவம் அறிவுக் கண்ணை மூடிவிட்டது. சரியானபடி கண்களைத் திறந்தாய் தாயே! நீயல் லவோ உண்மையான வைஷ்ணவப் பெண்” என்றுரைத்தார் ராமானுஜர். அந்த ஊர் ஆலயத்தில் பெருமாள் பக்கத்தில் அவள் திருவுருவம் இன்றும் காட்சி தருகிறது.
ராமானுஜர் காலையில் குளிக்கச் செல்லும்போது பிராமண சீடரின் தோளில் கையை போட்டுக் கொண்டு செல்வதும், குளித்து முடித்தபின் மடத் திற்கு திரும்புகையில் திருக்குலத்து தொண்டரின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு திரும்புவார். இதனை ஜாதிபேதம் கூடாது என்று மக்களுக்கு உபதேசிக்காமல் அனைவரும் சமமே என்று தனது நடத்தையின் மூலம் உணர்த்தியவர் ராமானுஜர்.
ராமானுஜர் தோன்றவில்லை என்றால் அடித் தட்டு மக்கள் பல லட்சம் பேருக்கு “திருக்குலத்தார்” என்ற அழகு தமிழ்ப் பெயரும் ஆன்மிக அந்தஸ்தும் கிடைத்திருக்காது.
இதுதான் ‘விஜயபாரதத்தின்’ கட்டுரை. “பார்த்தேளா, பார்த்தேளா! ஹிந்து சமுதாயம் எவ்வளவு முற்போக்குச் சமுதாயம் – சமத்துவத்தின் ஆழ்கடல்!” என்று ஹிந்து மதத்தை விமர்சிப்போரை நோக்கி பிரம்மாண்டமான இந்த அஸ்திரத்தை ஏவி நொறுக்கித் தள்ளி விட்டது என்று தங்களுக்குத் தாங்களே ஒரு சபாஷ் ஒரு கர்வம்!
இந்தச் சபாஷ்கள் நாம் தொடுக்கும் கடுகளவு கேள்வி மூலம் சுக்கல் சுக்கலாக நொறுங்கிக் குப்புற விழாதா?
ராமானுஜர் கூறியதாகக் கூறும் அந்தக் கோட் பாட்டைத் தான் ராமானுஜரைப் பின்பற்றும் வடகலை – தென்கலை அய்யங்கார்கள் பின்பற்றுகிறார்களா? இது வரை இல்லை என்றாலும் இனிமேலாவது, அவர் கள் பாஷையில் அந்தத் “திருக்குலத்தார்” தோளின்மீது கையைப் போட்டு நடக்கத் தயாரா?
இவர்களுக்குள்ளேயே வடகலை – தென்கலை சண்டை – தெரு சிரிக்கிறது. வீதியில் கட்டிப்புரளு கிறார்களே!
சிறீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலோ காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலோ, அந்தத் திருக் குலத்தார் பூஜை செய்ய அனுமதிப்பார்களா?
ஊரை ஏமாற்றத்தானே ராமானுஜரை இழுத்து வந்து குளிப்பாட்டி, ‘பார்த்தேளா பார்த்தேளா, ராமானு ஜரின் புரட்சியை?‘ என்று இந்த 2023லும் கரடி வித்தை காட்டுவது எல்லாம் யாரை ஏமாற்றிட?
இது ராமானுஜர் கதை என்றால் ஸ்மார்த்தர்களான சங்கராச்சாரியாரின் கதை ஒன்று இருக்கிறது.
அதையும் அடுத்துப் பார்ப்போம்.