தமிழர் தலைவர் கி.வீரமணி, கவிஞர் கனிமொழி கருணாநிதி,
உதயநிதி ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பங்கேற்கின்றனர்
கோவை, ஏப். 20– திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மாநில மாநாடு 26.4.2025, 27.4.2025 ஆகிய நாள்களில் கோவை மாநகரில் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.
இம்மாநாட்டில் கருத்தரங்கம், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், பேரணி, பொது மாநாடு என அடுக்கடுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கனிமொழி கருணாநிதி தொடங்கி வைக்கிறார்
26.4.2025 அன்று கோவை – ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் தொடங்கும் இம்மாநாட்டில், காலை 10 மணியளவில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும், துணைப் பொதுச் செயலாளருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி மாநாட்டைத் திறந்து வைத்து தொடக்க உரையாற்றுகிறார்.
கருஞ்சட்டை அரங்கம்
பகல் 1 மணிக்குத் தொடங்கும் கருஞ்சட்டை அரங்கத்துக்கு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்துப் பேருரையாற்றுவார். திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் உரையாற்றுவர்.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவாக மாலை 6 மணிக்கு அரசியல் அரங்கம் நடைபெறுகின்றது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா சிறப்புரையாற்றுகிறார்.
இரண்டாம் நாள்
27.4.2025 அன்று காலை 9 மணிக்கு பறை இசையோடு மாநாடு தொடங்குகிறது. கவியரங்கம், ஊடகவியலாளர் அரங்கம், சமூகநீதி அரங்கத் தில் பல்துறையினரும் சொற் பொழிவாற்ற உள்ளனர்.
இடைவேளைக்குப் பிறகு மாநாட்டின் முத்தாய்ப்பாக மாலை 4.30 மணிக்குத் கோவை – காந்திபுரம் பெரியார், அண்ணா சிலை அருகிலிருந்துத் தொடங்கும் உரிமை முழக்கப் பேரணியை மேனாள் அமைச்சர் மு.கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின்
மாலை 7 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் பொது மாநாடு நடைபெறுகின்றது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அனைத்துக் கட்சியினர் உரையாற்றுகின்றனர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுப் பேருரையாற்றுவார்.
பேரவை செயற்குழு உறுப்பினர் வி.பி.கோவிந்தராசு நன்றி கூறிட மாநாடு முடிவுறும்.