தந்தை பெரியாரின் கொள்கைகளை சிங்கப்பூரில் பரப்பிய தமிழவேள் கோ. சாரங்கபாணி பிறந்த நாள் இன்று (19.4.1903)
தமிழவேள் கோ. சாரங்கபாணி (19 ஏப்ரல் 1903 – 16 மார்ச் 1974) சிங்கப்பூரில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தமிழறிஞர், எழுத்தாளர், பதிப்பாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி!
தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்த இவர், 1924ஆம் ஆண்டு தனது 21ஆம் வயதில் சிங்கப்பூர் சென்று, அங்கு “முன்னேற்றம்” பத்திரிகையில் துணையாசிரியராகப் பணியைத் தொடங்கினார்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், 1928இல் தந்தை பெரியாரை சந்தித்த பிறகு சீர்திருத்தக் கருத்துகளை தீவிரமாகப் பரப்பினார். தமிழர் பிரதிநிதித்துவ சபை, தமிழர் சீர்திருத்த சங்கம் ஆகியவற்றை நிறுவினார்.
1935இல் தமிழ் முரசு பத்திரிகையை வார இதழாகத் தொடங்கி, அதன் மூலம் தமிழ் இலக்கியம், கலை, மற்றும் சமூக மேம்பாட்டிற்கு வித்திட்டார்.
சிங்கப்பூரில் பகுத்தறிவிற்கு முக்கியத்துவம் தந்து தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தமிழ் மக்களின் கலாச்சார மற்றும் இலக்கிய எழுச்சிக்கு முக்கிய ஊடகமாக விளங்கியது.
தமிழர் திருநாள்: மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும் வகையில் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தார், இது தமிழ் கலை மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
கல்வி மற்றும் இலக்கியம்: மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கல்வித்துறை அமைக்க பங்க ளித்தார். “ரசனை வகுப்பு” என்ற பகுதியை தமிழ் முரசில் 1952இல் அறிமுகப்படுத்தி, சிறுகதைகளை புரிந்து ரசிக்கும் நுணுக்கத்தை மக்களுக்கு கற்றுத் தந்தார்.
1955இல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இவருக்கு “தமிழவேள்” என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி கவுரவித்தார். இவரது பெயரில் “தமிழ வேள் விருது” ஆண்டுதோறும் சிங்கப்பூரில் தமிழ் தொண்டாற்றுவோருக்கு முத்தமிழ் விழாவில் வழங்கப்படுகிறது, இது சிங்கப்பூர் தமிழ் இலக்கியத் துறையில் முக்கிய விருதாகக் கருதப்படுகிறது.
சார்லஸ் டார்வின் நினைவு நாள் இன்று (19.4.1882)
மந்திரத்தால் உருவாகவில்லை உயிரினம்
ஒருசெல் உயிரிலிருந்துதான் ஒட்டுமொத்த உயிரினமும் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று சான்றுகளோடு புதிய கொள்கையை வழங்கி கடவுளின் படைப்பு என்ற கருத்தை குப்பைக்கு அனுப்பிய சார்லஸ் டார்வின் நினைவுநாள்! (Charles Darwin, 19 ஏப்ரல் 1882).
சார்லஸ் டார்வின் ஆங்கிலேய இயற்கையியலாளர், புவியியலாளர் மற்றும் உயிரியலாளர். உயிரினத் தோற்றத்தின் பரிணாமக் கோட்பாட்டை (Theory of Evolution) முன்மொழிந்தவர்
இயற்கைத் தேர்வு (Natural Selection) மூலம் உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன என்பதை விளக்கினார். அவரது மிக முக்கியமான படைப்பு, “On the Origin of Species” (1859), உயிரியல் மற்றும் அறிவியல் துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது.
‘‘குறிப்பாக கடவுள் படைத்தார்’’ என்ற மத நூல்களின் கருத்துகள் இவரது ஆய்வு நூலால் ஒன்றுமில்லாமல் போய்விட்டன.