தொழில்நுட்பவளர்ச்சியின் உச்சத்தை பிரதிபலிக்கும் உணவக ஊழியர் ரோபோ, இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. துபாயில் உள்ள பிரபல உணவக விடுதியில், ஊழியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் பரிமாறுபவர்களாக வேலை செய்கின்றன. அந்த ரோபோக்கள் சுமார் 2 அடி உயரமே உள்ளன. அவை தலை மற்றும் கைகளை மட்டும் கொண்டிருக்கின்றன. மார்புப் பகுதியில் ஒளிவீசும் பகுதி ஒன்று உள்ளது. முகத்தில் திரை தெரிகிறது.
காற்றில் மிதந்தபடி பறந்து வரும் ரோபோக்கள் மார்பில் இருந்து ஒளியை வீசி, உணவு மேஜையில் படங்களை ஒளிரச் செய்கிறது. அதில் பிடித்தமான உணவை வாடிக்கையாளர் தொட்டதும், ரோபோக்கள் உணவை எடுத்து வர பறந்து செல்கின்றன. இந்த காட்சிப் பதிவு பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
இதை வெளியிட்ட வட இந்தியரான ஷீத்தல் யாதவ் என்பவர், “இது துபாயில் உள்ள ஒரு உணவகம். உலகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் மக்கள் இன்னும் ஜாதி மதத்தில் சிக்கித்தவிக்கிறார்கள் ” என்று பதிவிட்டு இந்த காட்சிப் பதிவை இணைத்துள்ளார். அவரது கருத்து வலைத்தளவாசிகளிடம் விவாதத்தை தூண்டி காட்சிப் பதிவை மேலும் வைரலாக்கியுள்ளது.