சென்னை, ஏப்.19- தமிழ்நாட்டில் 25 அரசு மருத்துவ மனைகள் ரூ.1018 கோடியில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சட்டமன்றத்தில் 17.4.2025 அன்று உறுப்பினர்கள் கேள்விக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.
சட்டமன்றத்தில் ராஜபாளையம், தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதற்கு ஒப்புதல் தந்து, ரூ.1018 கோடி நிதி ஆதாரத்தையும் தந்து அந்தப் பணிகள் எல்லாம் தற்போது நிறைவுறும் தருவாயில் இருக்கிறது. இந்த பணிகள் முடிந்த உடன் மன்ற உறுப்பினர் கூறியதைப்போல ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளும் நிறைவுறும் தருவாயில் இருக்கிறது. மிக விரைவில் அதற்கான மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்பட்டு, மருத்துவப் பணியாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாட்டில் புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்படும்.
பெட்டமுகிலாளம் பகுதியைச் சுற்றியிருக்கிற 8 கிராமங்களை வழியில்லாத காரணத்தினால் ஏறத்தாழ 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைப்பாதைகளில் நடந்தே சென்று பார்த்திருக்கிறோம். அங்கு இருக்கின்ற மக்களின் மருத்துவ வசதிக்காக பெட்டமுகிலாளம் பகுதியில் ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி, அங்கிருந்து பிற கிராம மக்களும் பயன்பெறும் வகையில் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதையும் கடந்து வந்தால், தேன்கனிக்கோட்டையில் இருக்கின்ற மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டி ருக்கின்றன. அதையும் கடந்து ஓசூரில் ரூ.100 கோடி செலவில் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, பெரிய அளவில் முதலமைச்சர் மிக விரைவில் திறந்து வைக்க இருக்கிறார்கள். எனவே மலைக் கிராமங்களைப் பொறுத்தவரை, இந்த ஆட்சியில் ஏறத்தாழ 2000-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் இருக் கின்ற மக்களும் பயன் பெறுகின்ற வகையிலான மருத்துவ திட்டங்களை செய்து கொண்டிருக்கிற அரசு இது என்பதை சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் அறிவார். எனவே சட்டமன்ற உறுப்பினர் கோரியதைப் போல கூடுதல் வசதிகள் என்னவெல்லாம் முடி யுமோ அதையெல்லாம் செய்து தருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.