திருவள்ளுவர், ஏப். 19- பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார். அப்போது, ஆா்வத்துடன் பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.
அரசு நலத்திட்ட உதவி
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (18.4.2025) நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக காலை 11 மணிக்கு பொன்னேரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
அப்போது, அங்குள்ள அண்ணா சிலை முதல் விழா மேடை வரை நடந்து சென்று பொதுமக்களைச் சந்திக்க அவா் திட்டமிட்டிருந்தார். அதன்படி, அங்கிருந்து பஜார் வழியாக இருபுறமும் கூடியிருந்த பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார்.
தொடா்ந்து கட்சியினா், மகளிர் ஆா்வத்துடன் முதலமைச்சருடன் தங்களது கைப்பேசி மூலம் சுயபடம் எடுத்துக் கொண்டனா். அப்போது, குழந்தைகளை வாங்கி முதலமைச்சர் கொஞ்சி மகிழ்ந்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
இதற்காக அவா் 2 கி.மீ. தொலைவு நடந்து சென்றார். இதனால், விழா மேடைக்கு வர தாமதம் ஏற்பட்டது. இதற்காக அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் பின்னா் தனது உரையைத் தொடங்கினார்.