பொன்னேரியில் தமிழ்நாடு முதலமைச்சர், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உரை – வெறும் சொற்பொழிவல்ல – தன்மான இயக்கத்தின் வழிவந்த படைத் தளபதியின் போர் முழக்கமாகும்?
சினமேவி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசப்பட்ட பேச்சுமல்ல!
தமிழ்நாட்டின் உரிமை முழக்கமாகும். முதலமைச்சரே பொன்னேரி உரையில் குறிப்பிட்டது போல, குரல் தமிழ்நாட்டிலிருந்து வெடித்துக் கிளம்பியிருந்தாலும் இந்தியா முழுமையிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைக் குரல் அது.
‘மாநில சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி!’ என்ற ஜனநாயக உரிமையின் ஜெயப் பேரிகை!
தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி ஒன்றிய அரசு அளித்தே தீர வேண்டிய நிதியை அளிக்காதது ஏன் என்ற சட்டப்படியான குரலை எழுப்பினால், இந்தியத் துணைக் கண்டத்தின் பிரதமர் இராமேசுவரத்துக்கு வந்து பேசுகிறார் – தமிழ்நாடு ‘ஏன் அழுகிறது?’ என்று பேசியுள்ளார்.
உரிமையும் அழுகையும் ஒன்றல்ல என்ற ‘அரிச் சுவடி’ அறியாத வகையில் ஒரு பிரதமர் பேசலாமா?
தமிழ்நாடு முதலமைச்சர் நெற்றியடிபோல ஒரு கேள்வியை எழுப்பினார். ‘மோடிஜி அவர்களே, நீங்கள் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, ஒன்றிய அரசை நோக்கி எந்தக் கேள்வியை எழுப்பினீர்கள்? மாநில அரசுக்குரிய நிதியைக் கேட்பது பிச்சையல்ல’ என்று சொன்னவர் தானே அன்றயை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி!
அதைச் சரியான இடத்தில் சரியான முறையில் நமது முதலமைச்சர் சுட்டிக் காட்டியது – அருமை, அருமையிலும் அருமையே!
அது மட்டுமல்ல; குஜராத் முதலமைச்சராக திரு. மோடி இருந்தபோது ‘நீட்’டை எதிர்த்தார், ஜி.எஸ்.டி.யை எதிர்த்தார், இ்னனும் சொல்லப் போனால் ‘ஆதார் கார்டை’கூட எதிர்த்தவர் தானே!
முதலமைச்சராக இருந்தபோது ஒரு நிலை – பிரதமரான பிறகு அதற்கு நேர் எதிரான நிலைப்பாடு ஏன், ஏன்? புதிய ‘ஞானோதயம்’ ஏற்பட்டது எப்படி?
ஒரு ஜனநாயக நாட்டில் முதலமைச்சர் மட்டுமல்ல. ஒரு குடிமகன்கூட இத்தகைய வினாக்களை எழுப்பிட உரிமை உண்டு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சருக்கு இன்னும் கூடுதலான தார்மீகப் பொறுப்பும், உரிமையும் உண்டு – கட்டாயம் உண்டு.
ஒன்றிய அரசு நியாயப்படி, சட்டப்படி தமிழ் நாட்டுக்கு அளிக்க வேண்டிய நிதியை அளிக்கத் தவறிய நிலையிலும்கூட? இந்திய அளவில் தமிழ்நாடு எல்லா வளர்ச்சியிலும் முதலிடத்தில் தலை நிமிர்ந்து நடக்கிறது – வீறு நடை போடுகிறது என்றால், இது சாதாரணமானதல்ல!
எத்தகைய அணுகுமுறைகளை, ஆயுதங்களை ஒன்றிய பிஜேபி அரசு ஏவும் என்பதை எல்லாம் தெரிந்தே துணிவுடன் முதலமைச்சர் தன்மான உணர்வுடன் முழங்கியிருக்கிறார்.
பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒன்றிய அரசு எந்தெந்த வழிமுறைகளைக் கண்மூடித் தனமாக மேற்கொள்கிறது என்பதையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
ஆளுநரை வைத்து அரசியல் சித்து விளையாட்டை ஆடப் போய், அது விபரீதத்தில் முடிந்திருக்கிறது. திராவிட மாடல் அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் தான் வெற்றி பெற்றதாக மட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் கருதவில்லை; அனைத்து மாநிலங்களுக்குமான புதிய வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.
மாநில அரசின் சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநருக்கு ஒரு மாதம், குடியரசு தலைவருக்கு மூன்று மாதம் கெடுவை உச்சநீதிமன்றத்தின் மூலம் திராவிட மாடல் அரசு பெற்றுத் தந்திருப்பது – காலா காலத்திற்கும் பேசப்படக் கூடிய ஒன்றாகும்.
‘நானே ராஜா’ என்றெல்லாம் ஆளுநர்கள் ராஜ நடை போட முடியாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என்கிற ஜனநாயக உரிமையை அனைத்து மாநிலங்களுக்கும் பெற்றுத் தந்ததன் மூலம், நமது முதலமைச்சர்மீது 140 கோடி மக்களின் வசீகரமான பார்வை விழுந்திருக்கிறது!
ஜனநாயகப் போர்வையில் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற முழக்கத்தை எல்லாம் மூட்டைக் கட்டி மூலையில் ஒதுக்கி வைக்கும் ஒரு நிலையை நமது முதலமைச்சர் ஏற்படுத்தி விட்டார்.
இவரால் முதலமைச்சர் நாற்காலி பெருமை பெற்று இருக்கிறது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வெற்றி முழக்கம் பொன்னேரியில் ஒலித்தது. வாழ்த்துகள்! பாராட்டுகள்!!