கேள்வி 1: சமூகநீதியின் பாடி வீடான தமிழ்நாட்டில் சமூக நீதி தலைவர் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் சமூக நீதிக்கு வித்திட்ட பி.பி. மண்டல், சமூகநீதி காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அல்லது கழகத்தின் சார்பில் சிலைகள் வைக்கப்படுமா?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 1: வி.பி.சிங் சிலை தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதலமைச்சரால் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளதே. பி.பி.மண்டல் சிலை முக்கியம்தான். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
*****
கேள்வி 2: பி.ஜே.பி. ஆளுகின்ற மாநிலங்களான டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாகவும், சுற்றுச் சூழல் பாதிப்பு நிலையை அவசரமாக கவனிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கருதலாமா?
– மு.கவுதமன், பெங்களூரு.
பதில் 2: பா.ஜ.க. ஆட்சிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதற்கு இது ஒரு ‘சாம்பிள்’.
*****
கேள்வி 3: இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகை உள்ள நிலையில், 10 லட்சம் மக்களுக்கு வெறும் 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்ற அவல நிலையைத் தகர்த்தெறிய ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?
– சு.இராமச்சந்திரன், குரோம்பேட்டை.
பதில் 3: லட்சக்கணக்கில் வழக்குகள் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கார்டு வைத்திருக்கும் வழக்குரைஞர்களையோ, மாவட்ட நீதிபதிகளையோ, மற்றவர்களையோ தேடிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ!
*****
கேள்வி 4: பி.ஜே.பி. கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரே ஒரு முஸ்லீம்கூட இல்லாத அவலநிலையில், காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் முஸ்லீம்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுவது நகைப்புக்குரிய ஒன்றல்லவா?
– அ.அப்துல் அகத், அய்தராபாத்.
பதில் 4: ஓணானைப் பார்த்து ஒட்டகம் குறை சொன்ன விசித்திரம் போலும் இது! ஒன்றிய அமைச்சரவையில் இருந்த ஒரேயொரு பா.ஜ.க. முஸ்லிம் அமைச்சருக்கும் விடை கொடுத்த நிலையில் பச்சையாக உண்மையை மறைத்துப் பேசும் மோடியின் துணிவை வியக்கத்தான் வேண்டும்!
*****
கேள்வி 5: டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில், 49 ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு மட்டுமன்றி, வெறுப்பு அரசியலை விட, அன்பு அரசியலே வலிமை சேர்க்கும் என்றும், தி.மு.க. அரசு சமூகநீதியை நிலைநாட்டும் என்றும் பேசியிருப்பது அம்பேத்கரிய – பெரியாரிய வாதிகளை இன்பத்தில் திளைக்க வைக்கும் தேனினும் இனிய செய்தி அல்லவா?
– இரா.அலமேலு, செங்குன்றம்.
பதில் 5: தேனினும் இனிக்கச் செய்யும் செய்தி; தேன்கூட சில நேரங்களில் தெவிட்டும்; திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளோ எப்போதும் தி்கட்டாது; இனிக்கவே செய்யும்!
*****
கேள்வி 6: கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகோலுகின்ற 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதோடு, அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்த வேண்டும் என்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்த ஆவன செய்யுமா?
– சீ.கண்ணன், வெங்கோடு.
பதில் 6: சந்தேகம்தான்! காரணம், முன்பு அது காங்கிரசால் காந்தியார் பெயரில் கொண்டு வரப்பட்ட திட்டமாயிற்றே!
*****
கேள்வி 7: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்ததை எதிர்த்து சீராய்வு வழக்கு தொடர ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது ஏற்புடையதா?
– ம.சின்னத்தம்பி, சிதம்பரம்.
பதில் 7: பொறுத்திருந்து பார்ப்போம்! தவறைத் திருத்திக் கொள்ளாமல் மேலும் மேலும் தவறு செய்வது நியாயந்தானா? உலகம் என்ன நினைக்கும்? ஒன்றிய அரசு யோசிக்க வேண்டாமா?
*****
கேள்வி 8: பி.ஜே.பி. கட்சித் தலைவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடுகின்ற நிலையில், அவர்களால் நெருங்க முடியாத தலைவராக இருப்பவர் தந்தை பெரியார் மட்டுமே என்பது பெரியார் கொள்கைக்கே உரிய தனித்தன்மை என்று எடுத்துக் கொள்ளலாமா?
– சு.தமிழ்ச்செல்வி, குடியாத்தம்.
பதில் 8: இமயமலை மீது ஏறலாம்; எரிமலை அருகே நெருங்கவே முடியாதே! அதனால்தான்!
******
கேள்வி 9: அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச நலத்திட்ட உதவிகள் என்பன மக்களுக்கு வேலை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தையே முற்றிலுமாக போக்கிவிடுகின்றன என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது சரியா?
– ந.திருநாவுக்கரசு, திருநெல்வேலி.
பதில் 9: ஏற்கத்தக்க கருத்தல்ல; ஏழை, எளிய வறுமையில் உள்ள மக்களுக்கு உடனடியாக தேவை இத்தகைய உதவிகள்!
******
கேள்வி 10: டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்ல வளாகத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூட்டை மூட்டையாக கட்டிக் கிடந்த 500 ரூபாய் பணத்தாள்கள் ரூ.15 கோடி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், மேனாள் நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், வழக்குரைஞர்கள், அரசியல் கட்சிகள், நடுநிலையாளர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளை பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட நீதிபதியை உ.பி. அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் மட்டும் செய்து அவரை பிரதமர் மோடியும், அவரது சகாக்களுமான ஒன்றிய அமைச்சர்களும், ஹிந்துத்துவா அமைப்பினரும் பாதுகாப்பது ஏன்?
– மன்னை சித்து, மன்னார்குடி-1.
பதில் 10: மில்லியன் டாலர் கேள்வி இது! நாடே இதைக் கேட்கிறதே!