உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னா லால் கோலா குவான் என்ற ஊரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, முகேஷ் சோனி என்பவரின் மனைவி பிரியன்ஷா சோனி என்பவர் நவராத்திரி பூஜை நடத்த வேண்டிய நேரத்தில், தனக்கு மாதவிடாய் நாட்கள் ஆகிவிட்டது. அதனால் தன்னால் விரதம் இருக்க முடியவில்லை என்று வருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
அவர்களுக்கு மூன்றரை வயதிலும், இரண்டரை வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜைகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்று விரும்பியிருந்த பிரியன்ஷாவுக்கு, விரதம் இருக்கவும் கடவுளை வழிபடவும் மாதவிடாய் தடையாகிவிட்டது என்று கருதி விஷம் அருந்தி இருக்கிறார்.
குற்ற உணர்வு
எல்லாவற்றிலும் தீட்டு புனிதம் என்று கற்பித்திருக்கும் இந்து மதத்தின் கொடு விளைவு, இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்குள் நுழையக்கூடாது, பூஜை அறைக்குள் நுழையக் கூடாது, கடவுள் படங்களைத் தொடக்கூடாது, தீட்டு, வீட்டுவிலக்கு என்று பெண்களின் உடல் இயற்கை நிகழ்வை குற்றத்துக்குரிய ஒன்றாக்கி, அதனால் குற்ற உணர்வுக்கு ஆளாகி, ஒரு பெண் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறார் என்பது எத்தனை கொடுமை!
கட்டுக் கதைகள்
பெண்கள் ஏன் அர்ச்சகராகக்கூடாது என்று கேட்டால் இதே காரணத்தைத் தானே கூறி மறுக்கிறது ஸநாதனம். மாதவிடாய் குறித்த கட்டுக்கதைகள், பெண்களின் மீது சுமத்தப்பட்டுள்ள புனிதம், அவர்களின் மீதே திணிக்கப்பட்டுள்ள தீட்டு, பெண்ணைப் போற்றுகிறோம் என்று சொல்லி பூட்டி வைக்க விரும்பும் அடிமைத்தனம் அனைத்துக்கும் அடித்தளமாக இருப்பவை இந்து மதத்தின் ஆணிவேர்களான மனுஸ்மிருதியும், ஸநாதன தர்மமும் தானே! ஜாதி, மத வெறியர்கள் எவராயினும் பெண்ணடிமைத் தனம் தான் அவர்களுக்குக் குலப் பெருமை.
மூடநம்பிக்கைகள்
மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகள் வடநாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் இன்னும் எத்தகைய மோசமான நிகழ்வுகளை உருவாக்குகின்றன என்பதற்கு அண்மையில் கோவையை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டைப் பாளையம் பகுதியில் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு சான்றாகும். தேர்வு எழுத வந்த மாணவி பூப்பெய்தியவர் என்பதால், அவரைத் தனி பெஞ்சில் அமரவைத்துக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார் தாய். அந்தப் பள்ளி ஆசிரியரோ, அந்தப் பெண்ணைத் தனியாக, பூட்டியிருந்த ஒரு வகுப்பறையின் வாசலில் அமர்த்தி தேர்வெழுதச் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண் குழந்தையின் தாய் காட்சிப் பதிவாக பதிவு செய்து வெளியிட, உடனடியாக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை, அந்தத் தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.
பெண்களேதான்
பருவமெய்திய பெண் குழந்தைக்கு முதல் மாதவிடாயின் போது தொற்று ஏற்படும் என்பது மருத்துவ மூடநம்பிக்கைதான். அதையே தீட்டென்று கருதி தனியே அமர வைத்த ஆசிரியர்களும் பெண்கள் தான். உடலியற்கையான ஒரு நிகழ்வை ஏதோ பெரிய பிரச்சினையாகக் கருதி பிள்ளைகள் அஞ்சும் நிலையும், மறைத்து ஒளித்துப் பேச வேண்டிய விவகாரம் என்று கருதும் நிலையும் இருக்கும் இதே சமூகத்தில் தான், அதற்குப் பெரிய அடையாளம் வழங்கி, அதை ஏதோ பெரிய சாதனையாக, அல்லது பெரும் மகிழ்ச்சிக்குரியதாக ஊரே அறியக் கொண்டாடும் அருவெறுக்கத்தக்க மனநிலையும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் வீட்டுவிலக்கு என்று தனியே அமரவைத்து அசிங்கப்படுத்திய கொடுமை கடந்த நூற்றாண்டோடு ஒழிந்துவிட்டது என்று கருத முடியாத அளவுக்குத் தான் இந்தப் பள்ளி நிகழ்வு எச்சரிக்கை செய்கிறது. மூடத்தனங்களும், பழைமைச் சிந்தனையும் பண்பாடு என்ற பெயராலும், போலி அறிவியலின் பெயராலும் இன்றைய “வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியின் புரபசர்களால் ”பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஆபாசமான விழா
பருவமெய்திய உடன் பெண் திருமணத்திற்குத் தயாராகிவிடுகிறாள் என்ற பழைமைச் சிந்தனையின் விளம்பரமே, பூப்புனித நீராட்டு விழா என்ற ஆபாசமான விழாவாகும். பண்பாடு என்ற பெயரில் இதனை இன்னும் நிகழ்த்திக் கொண்டிருப்பது மடத்தனம் என்பதை உரக்கச் சொல்லியது சுயமரியாதை இயக்கம்தான்.
அதை இன்னும் அழுத்தமாகச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது இன்றும் அவசியமாக இருக்கிறது என்பதையே மேற்கண்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. பெண்ணுரிமைக் களத்தில் இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பது நமக்குத் தெரியும்; பயணித்து வந்த பாதையில் அடுத்தடுத்த தலைமுறையை அழைத்துவர வேண்டிய கடமையும் உண்டு என்பதை நாம் உணரவேண்டும். இல்லையேல், வழியிலேயே தடம் மாற்றி அழைத்துச் செல்ல பிற்போக்குவாதிகள் தயாராகவே இருக்கின்றனர்.
– சமா.இளவரசன்