ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 17 அன்று வெளியாகியுள்ள நிலையில், தகுதி பெறுவது மற்றும் மதிப்பெண்களைக் கொண்டு சேரக்கூடிய படிப்புகள் குறித்த தகவல்கள் இங்கே:
ஜேஇஇ முதன்மைத் தேர்வில்
தகுதி பெறுவது எப்படி?
ஒரு மாணவர் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தகுதி பெற பின்வரும் இரண்டு முக்கிய அம்சங்களை நிறைவு செய்ய வேண்டும்.
கட்-ஆஃப் மதிப்பெண் (Cut-off Percentile): தேசிய தேர்வு முகமை (NTA) ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக கட்-ஆஃப் மதிப்பெண்களை வெளியிடும். இந்த மதிப்பெண்ணை விட அதிக percentile பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் 93.23 ஆக இருந்தது. இந்த ஆண்டு கட்-ஆஃப் முந்தைய ஆண்டை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொதுப் பிரிவு: 93.23 (2024) – இந்த ஆண்டு அதிகரிக்கலாம்.
கிரீமிலேயர் அல்லாத பிற்படுத்தப்பட்டவர்: 79.67 (2024)
எஸ்.சி. பிரிவு: 60.09 (2024)
எஸ்.டி. பிரிவு: 46.69 (2024)
பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்: 81.32 (2024)
12ஆம் வகுப்பு மதிப்பெண்: ஜேஇஇ மெயின் தேர்வில் தகுதி பெற, மாணவர்கள் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர்: 75 விழுக்காடு மதிப்பெண்கள்
பிற பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள கட்-ஆஃப் மதிப்பெண் மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் தேவைகள் இரண்டையும் பூர்த்தி செய்பவர்களே ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவர்.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு சேரக்கூடிய படிப்புகள்:
ஜேஇஇ முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர்கள் பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பின்வரும் படிப்புகளில் சேர முடியும்:
பி.இ. / பி.டெக் (B.E. / B.Tech – Bachelor of Engineering / Bachelor of Technology)
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (Computer Science and Engineering)
மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (Electrical and Electronics Engineering)
இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
குடிசார் பொறியியல் (Civil Engineering)
வேதியியல் பொறியியல் (Chemical Engineering)
தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
மற்றும் பல சிறப்புப் பிரிவுகள்
பி.ஆர்க் (B.Arch – Bachelor of Architecture) – இதற்கு தனியாக நாட்டா (NATA) தேர்வும் கருத்தில் கொள்ளப்படும்.
பி.பிளானிங் (B.Planning – Bachelor of Planning)
தேசிய அளவில் உள்ள NIT (National Institutes of Technology), IIIT (Indian Institutes of Information Technology) மற்றும் CFTI (Centrally Funded Technical Institutions) போன்ற கல்லூரிகளில் சேருவதற்கு ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் முக்கியமானதாகும்.
ஜேஇஇ மேம்பட்ட தேர்வில் தகுதி பெறவும், அய்அய்டி (Indian Institutes of Technology) போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களில் சேரவும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையாக அமையும். ஜேஇஇ அட்வான்ஸ்ட் கட்-ஆஃப் மதிப்பெண்ணை NTA வெளியிடும். கல்லூரிகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை JoSAA கலந்தாய்வின்போது வெளியிடும்.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் சுமார் 100 அரசு கல்வி நிலையங்களில் சேர முடியும். இவை தவிர பல்வேறு தனியார் கல்லூரிகளும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. எனினும் இந்த மதிப்பெண்களைக் கொண்டு அய்அய்டி நிறுவனங்களில் சேர முடியாது.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NIT), 30க்கும் மேற்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IIIT), சுமார் 40 அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (GFTI) சேர முடியும். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே என்அய்டி கல்லூரி திருச்சியில் உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த என்அய்டி கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படும் இங்கு பி.டெக் படிப்புகளில் சேர ஜேஇஇ முதன்மைத் தேர்வு மதிப்பெண்கள் போதுமானது.
இதே போன்று என்அய்டி கர்நாடகா, என்அய்டி ரூர்கேலா, என்அய்டி வாரங்கல், என்அய்டி காலிகட் உள்ளிட்ட பிற என்அய்டி கல்லூரிகளில் சேரவும் ஜேஇஇ முதன்மைத் மதிப்பெண்கள் போதுமானது. வேறு நுழைவுத் தேர்வுகள் கிடையாது.
காஞ்சிபுரத்தில்…
இதே போன்று திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IIIT) கல்லூரியிலும் ஜேஇஇன் முதன்மைத் தேர்வு மதிப்பெண்கள் கொண்டு சேரலாம்.இந்தக் கல்லூரிகள் தவிர, அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTI) நாட்டில் பல உள்ளன. இந்த வகை கல்லூரிகளில் தமிழ்நாட்டில் பிரபலமானது காஞ்சிபுரத்தில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மேனுஃபாக்சரிங் (IITDM). இந்தக் கல்லூரியில் உள்ள பி.டெக் படிப்புகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையாக உள்ளன.
மேலும் தஞ்சாவூரில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜியில் (NIFTEM) உணவுத் தொழில்நுட்பத்தில் பி.டெக் படிப்பு உள்ளது.
காரைக்குடியில்…
காரைக்குடியில் சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (CECRI) என்ற கல்லூரியில் கெமிக்கல் மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் படிப்புகளில் பி.டெக் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. சேலத்தில் இந்திய கைத்தறி தொழில்நுட்பம் என்ற நிறுவனத்தில் பி.டெக் படிப்புகள் உள்ளன. ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்தப் படிப்புகளிலும் சேரலாம்.
இவை உள்பட தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இந்த மதிப்பெண்களைக் கொண்டு சேரலாம்.ஜேஇஇ மெயின் தேர்வு முடிகள் வந்த பிறகு, மாணவர்கள் அடுத்து கவனிக்க வேண்டியது JoSAA(Joint Seat Allocation Authority) கலந்தாய்வு. இந்தியாவில் உள்ள 31 என்.அய்.டி, 26 அய்அய்அய்டி, 40 அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட 121 கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான கலந்தாய்வு இது.
ஜேஇஇ மெயின் தேர்வுகளில் தகுதி பெறும் மாணவர்கள் https://josaa.nic.in/ என்ற இணையதளத்தில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். இந்தக் கலந்தாய்வு பல சுற்றுகளில் நடைபெறும்.
ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் தவிர பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களும் கலந்தாய்வில் பங்குபெறுவதற்கான தகுதியாக அமையும்.
இவை மட்டுமின்றி சில தனியார் கல்லூரிகளும் ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. இவற்றில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள், ஜேஇஇ மதிப்பெண்கள் ஆகிய இரண்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
எந்தெந்த கல்லூரிகளில் எப்போது விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்று மாணவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் அடிப்படை என்றாலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பித்தால் மட்டுமே அங்கு சேர முடியும்.
ஜேஇஇ மேம்பட்ட தேர்வுகள்
ஜேஇஇ மெயின் தேர்வில் தகுதி பெறும் முதல் 2.5 லட்சம் பேர், ஜேஇஇன் அட்வான்ஸ்ட் எழுத முடியும். அதில் தகுதி பெறுபவர்களே அய்அய்டியில் சேர முடியும். 2025 ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை அய்அய்டி கான்பூர் நடத்துகிறது.
இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களின் நுழைவு அட்டைகள்(ஹால் டிக்கெட்) மே 11ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை பதிவிறக்கம் செய்வதற்கு https://jeeadv.ac.in/ என்ற இணையத்தில் கிடைக்கும்.