நீதிபதி கவாய் மகாராட்டிராவின் அமராவதி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பிறந்தார். சமூக ஆர்வலரும் மேனாள் கேரள மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநருமான ஆர்.எஸ்.கவாயின் மகன்தான் இந்த பி.ஆர்.கவாய்.
கடந்த 1985ஆம் ஆண்டு வழக்குரைஞர் சங்கத்தில் சேர்ந்தார். மகாராட்டிர உயர் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞராக இருந்த அவர், பிறகு மகாராட்டிர உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். அதாவது 1987 முதல் 1990 வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தார். அதன் பிறகு, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் அரசமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான விஷயங்களில் பிரதானமாக ஆஜரானார்.
அரசு வழக்குரைஞர்
இதையடுத்து ஆகஸ்ட் 1992இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்குரைஞராகவும், கூடுதல் அரசு வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டில் நாக்பூர் அமர்வில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து நீதிபதி கவாய் 2003இல் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005இல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2019இல் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு நீதிபதி கவாய் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
2016ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டம் அரசமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பு வழங்கிய அமர்வில் நீதிபதி கவாய் இடம்பெற்றிருந்தார்.
கருத்து சுதந்திரம்
சிறுபான்மையினர் பாதுகாப்பு, பேச்சுரிமை கருத்துச் சுதந்திரம் மனித உரிமைகள் மற்றும் அரசியல் விமர்சனங்களை ஆதரிக்கும் தீர்ப்புகளை வழங்கியவர்.
தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான சட்டம் பொய்யான வழக்குகளைப் பதிய மட்டுமே பயன்படுகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கை விசாரித்த அமர்வில் இருந்த இவர் நாடு முழுவதும் உள்ள பல சமூகநீதிக்காகப் போராடிய தலைவர்களின் வாழ்க்கையை நினைவு கூர்ந்து, அவர்களின் போராட்டங்கள் அதில் கிடைத்த வெற்றிகளை மேற்கோள் காட்டி இந்தச் சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் கருவியாகவே இருக்க வேண்டும் என்றார்.
நலத் திட்டங்கள்
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள், பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்று சேரும் போதுதான் அந்த திட்டத்திற்கான வெற்றி, ஒருவர் கூட விடப்பட்டாலும் அது முழுமையான தோல்வி என்று கூறியவர்.
வாழ்வுரிமை என்பது வெறும் உணவு, நீர், மருத்துவம் என்பதிலேயே முடிவதில்லை. அது சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உள்ளடக்கியது. இது சமூக நீதி வட்டத்தில் மிக முக்கியமான பார்வை ஆகும். சில உத்தரவுகளில், பசுமை நிலங்களை பாதுகாக்கும் நோக்குடன் தீர்ப்புகளை அளித்துள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகள்
நீதிபதி கவாய், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் வழிகளில் நீதிமன்றத்தின் தலையீடு தேவைப்படும் வழிகளில் சமூக நீதியை ஆதரித்தார்.
நீதிபதி பூஷண் கவாயின் தீர்ப்புகளில் முக்கியமானவை மனிதநேயம் சார்ந்த அணுகுமுறை, நீதி வழங்கும் சட்டத்தின் முக்கியத்துவம், அரசின் பொறுப்பை வலியுறுத்துதல், பின்தங்கிய மக்களின் உரிமைகளை முன்னிறுத்துதல் நாட்டின் பல்துறை சமத்துவ வளர்ச்சிக்கு வழிகாட்டல் போன்றவை ஆகும்.