பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்புவரை நூறு மாணவர்களில் ஒருவருக்கு எத்துப்பல் என்ற மாறுபட்ட பல்வரிசை உண்டு. இதற்காக அவர் “ஏய் எத்துப்பல்லா?” என்றும், “பல்லா” என்று கேலிக்கு இலக்காவார்.
இதனால் உளவியல் தொடர்பான சிக்கலுக்கு மாணவர்கள் ஆளவது உண்டு, இந்த நிலையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.பி.ஜெயசீலன் திட்டமிட்டார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் 600 மாணவ, மாணவியர்களை எத்துப்பல் (கோரைப்பல்) பிரச்சினை உள்ளவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் பல் சிகிச்சைக்கு உதவி வழங்கியுள்ளார்.
இந்த முயற்சி மாணவர்களின் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியரின் செயல் பாராட்டப்பட்டுள்ளது. பல்வரிசை குறைபாடு என்பது மரபணு தொடர்பான சிக்கல் ஆகும். இதற்கான சிகிச்சை 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டாலும் பலர் இதனை அலட்சியமாகவே எடுத்துக்கொண்டு விடுவார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் பல் வரிசைக் குறைபாடுகளோடுதான் வாழ்வார்கள்.
தமிழ்நாடு அரசின் மனிதநேயச் செயல்பாடுகளில் – பலவற்றில் ஒரு தனி மாணவர்கள் கூட கல்வி தொடர்பான எந்த ஒரு பாதிப்பிற்கும் இலக்காகிவிடக் கூடாது என்பதற்காக களமிறங்கி உள்ளார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.
இவரது இந்த சேவை மனப்பான்மையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பின்பற்றுவார்கள். மேலும் பள்ளிக் கல்வித்துறையும் இதுபோன்ற மனிதாபிமான நடைமுறையை அனைவரும் கடைப்பிடிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
( மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளப் பதிவிலிருந்து…)