“மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு” அமைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.04.2025 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்
நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் பணி
1) ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்; ஒன்றிய- மாநில உறவு குறித்து ஆராய நீதிபதி குரியன் ஜோசப் குழு- இவர் பெயரை சொன்னாலே டில்லியே அதிருமே!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்தல்; மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்; நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்;
1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்தில்கொள்ளுதல் வேண்டும். இவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும். உயர்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும்
• • • •
நீதிபதி ஜோசப் குரியன்
ஜோசப் குரியன், இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதியாக, சமூக நீதி மற்றும் அரசமைப்பு கோட்பாடுகளை மய்யப்படுத்தி பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர். அவரது தீர்ப்புகள் சமூகநீதி, சமத்துவம், மனித உரிமைகள், மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை வலியுறுத்தியது. அவரது சில முக்கியமான சமூக நீதி தொடர்பான தீர்ப்புகள் மற்றும் அவற்றின் தாக்கங்கள்:
- முத்தலாக் வழக்கு (Shayara Bano v. Union of India, 2017)
இஸ்லாமிய முறையில் ஒருதலைப்பட்சமாக மூன்று தலாக் (Triple Talaq) மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து ஷியாரா பானோ வழக்கு தொடர்ந்தார்.
ஜோசப் குரியன், நீதிபதிகள் ரோஹிண்டன் நாரிமன் மற்றும் யு.யு.லலித் ஆகியோருடன் இணைந்து, முத்தலாக் நடைமுறை இஸ்லாமிய மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது மற்றும் இந்திய அரசமைப்பின் பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் பிரிவு 21 (வாழ்க்கை மற்றும் தனிநபர் சுதந்திரம்) ஆகியவற்றை மீறுவதாக உள்ளது என தீர்ப்பளித்தார். இந்த நடைமுறை அரசியலமைப்புக்கு எதிரானதாகவும், பெண்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் கருதப்பட்டது.
இந்தத் தீர்ப்பு முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய அரசு மூன்று தலாக் நடைமுறையை குற்றமாக்கும் சட்டத்தை (2019) இயற்றியது. இந்த தீர்ப்பு ஆளும் பாஜக கூட்டணிக்கு சாதகமானது என்று கருதப்பட்டாலும் பெண்களின் உரிமைகளை குறிப்பாக இஸ்லாமியப் பெண்களின் உரிமைகள் தொடர்பான விவகாரம் என்று கருதப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி வாதம் நடந்துகொண்டு இருக்கும் போதே… மத்தியப் பிரதேசம் போஜ்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் துபாயில் பணிபுரிந்துகொண்டே அங்கு ஏற்கெனவே பணிபுரியும் ஒரு பெண்னைத் திருமணம் செய்வதற்காக வாட்ஸ் அப் மூலம் மூன்று முறை தலாக் கூறினார். இதனை அவருக்குச் சாதகமாக மாற்றி தலாக் வழங்கிவிட்டதாக கூறப்பட்டது. .(Bhojpur Man Sends WhatsApp Triple Talaq to Wife from Dubai; FIR Lodged, 13 Persons Named Accused )
நாகராஜ் வழக்கு மறுஆய்வு (Jarnail Singh v. Lacchmi Narain Gupta, 2018)
தாழ்த்தப்பட்ட (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 2006-ல் வழங்கப்பட்ட நாகராஜ் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டுமா என்பது குறித்த வழக்கில் ஜோசப் குரியன் உள்ளிட்ட அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வில் பங்கேற்று, நாகராஜ் தீர்ப்பை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டிய அவசியமில்லை என தீர்ப்பளித்தார்.
மேலும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு “கிரீமி லேயர்” (Creamy Layer) விதிவிலக்கு பொருந்தும் என்று உறுதி செய்யப்பட்டது. ஜோசப் குரியனின் இந்தத் தீர்ப்பு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியது, மேலும் சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமானதாக அமைந்தது. இந்த தீர்ப்பை வைத்து தமிழ்நாடு அரசு இட ஒதுக்கிடு தொடர்பான வழக்குகளில் வெற்றிகரமான தீர்ப்பை பெற்று சமுகநீதியை நிலைநாட்டியுள்ளது
மனோஜ் நருலா வழக்கு: உயர் பதவியில் உள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டு
குற்றவியல் குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதைத் தடுக்க வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று கோரிய வழக்கு தொடரப்பட்டது ஜோசப் குரியன் தனது தீர்ப்பில் பிரதமர் அல்லது முதலமைச்சர்களுக்கே முழு அதிகாரம் உள்ளது. அவர்கள் அமைச்சர்களாக நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்கள் என்று கூறினார்.
மரண தண்டனை குறித்த கருத்து
வழக்கு விவரம்: ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டிய சன்னுலால் வர்மா வழக்கின் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி ஜோசப் குரியன், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியதுடன், மரண தண்டனையின் அவசியம் குறித்து கேள்வி எழுப்பினார். 2015ஆம் ஆண்டு சட்ட ஆணைய அறிக்கையை மேற்கோள் காட்டி, மரண தண்டனை “தன்னிச்சையாகவும், விசித்திரமாகவும்” விதிக்கப் படுவதாகவும், அரசமைப்பு வலியுறுத்தும் தண்டனை காரணங்களை அடையத் தவறுவதாகவும் கூறினார்.
இந்தத் தீர்ப்பு, மனித உரிமைகள் மற்றும் நீதியின் மனிதாபிமான அணுகுமுறையை வலியுறுத்தியது, மேலும் மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவில் நடந்துவரும் பல்வேறு அமைப்புகளுக்கு மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்தது.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொறுப்பு
வழக்கு விவரம்: தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (NJAC) அறிமுகப்படுத்திய 99ஆவது அரசமைப்பு திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜோசப் குரியன், தன்னுடைய தீர்ப்பில் கொலிஜியம் முறையில் குறைபாடுகள் உள்ளதாகவும், அதை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு முக்கியமானதாக இருந்தாலும், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த விவாதங்களைத் தூண்டியது.
இன்றும் கொலீஜியம் குறிப்பிட்ட சமுகத்தில் இருந்து வரும் நபர்களுக்கு நீதிபதி பதவிகளில் அமரவைக்க பரிந்துரை செய்துகொண்டே வருகிறது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதிவேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியார் திடலில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். “உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களிலும் ‘இடஒதுக்கீடு’ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
குடும்ப சண்டைகளில்
மத்தியஸ்த அணுகுமுறை
ஜோசப் குரியன், விவாகரத்து தொடர்பான வழக்குகளில் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அகன்சா மற்றும் அனுரூபம் மாத்தூர் விவகரத்தில் அவர்களின் குழந்தைகள் அலைக்கழிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்ய ஒப்புக் கொண்ட இணையருக்கு ஆறு மாத காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து, அவர்களின் முடிவை மதித்தார்.
இத்தகைய தீர்ப்புகள், குடும்ப உறவுகளில் மனிதாபிமான அணுகுமுறையையும், விவகாரத்து கோரும் நபர்களின் குழந்தைகளின் எதிர்கால முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. ஜோசப் குரியனின் தீர்ப்புகள், சமூகநீதி, பாலின சமத்துவம், மனித உரிமைகள், மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை கருத்தில் கொண்ட அவரது அணுகுமுறை, சட்டத்தின் கடுமையை இலகுவாக்கி மனிதாபிமானத்துடன் அணுகுவதாக இருந்தது. மறுஆய்வு போன்றவை சமூகத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின.