சங்கராபுரம், ஏப். 18- 13.4.2025 அன்று சங்கராபுரம் தாவப்பிள்ளை திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் முனைவர் ம.சுப்பராயனின் “திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள்”நூல் வெளி யீட்டு விழா எழுச்சியாக நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்து உரையாற்றினார். தலைமை உரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் படித்தார்.
கல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் தமிழ்ச் செம்மல் செ.வ.மதிவாணன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்
யாழிசைப் பதிப்பகம் அன்புமணி வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் ரோட்டரி இராம முத்துக்கருப்பன், சங்கராபுரம் பேரூராட்சித் தலைவர் ரோஜா ரமணி தாகப்பிள்ளை,பகுஜன சாகித்திய அகாடமி தேசிய பொதுச்செயலாளர் முனைவர் உ. சுப்பிரமணியன்,சுங்கம் மற்றும் மத்திய கலால்துறை உதவி ஆணையர் ஓய்வு சு.சண்முகசுந்தரம்,மேனாள் மாவட்ட கல்வி அலுவலர் க.கோலக்காரன்,தமிழ் வழிக் கல்வி இயக்க மாநிலத் தலைவர் தோழர் அ.சின்னப்பதமிழர், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் துணை மேலாளர் ஓய்வு செ.வீராசாமி, மேனாள் மாவட்ட கல்வி அலுவலர் புலவர் பெ. சயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நூல் வெளியிட்டு சிறப்புரை
திராவிடர் கழக மாநில மருத்துவர் அணி செயலாளரும், குழந்தைகள் நல மருத்துவருமான கோ.சா. குமார் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.அவர் தமது சிறப்புரையில்” தந்தை பெரியார் திருக்குறளுக்கு மாநாடுகள் நடத்தி பல தமிழறிஞர்களை கலந்து கொள்ளச் செய்து,திருக்குறளின் கருத்துக்களை பரப்புரை செய்தார்.அதன் விளைவாகத்தான் திருக்குறள் பள்ளி கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. தமிழ்நாடெங்கும் குறள் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு திருக்குறள் நெறி பரப்பப்பட்டு வருகின்றது. மூடநம்பிக்கை கொண்டிராத ஒரே நூல் திருக்குறள் மட்டுமேயாகும்.திருக்குறளின் நெறிகளைக் கொண்டு ஒரு நாட்டின் நல்லாட்சியை நடத்த முடியும்.தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளின்போதும்சட்டமன்ற நடவடிக்கைகளின்போதும் திருக்குறள் கூறி தொடங்கப்படுகின்றன.
மாவட்ட கழக காப்பாளரான ம.சுப்பராயன் திருக்குறளையும் பெரியாரி யலையும் ஒப்பிட்டு “திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள்”என்ற பயன்மிகு நூலை எழுதியுள்ளார்.இந்நூல் படித்துப் பயன்பெற வேண்டிய நூலாகும்”என்றுகூறி சிறப்புரையை நிறைவு செய்தார்.
நூலின் முதல் படியினை, எழுத்தாளரும் மருத்துவருமான வை.செழியன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓய்வு முனைவர்உ.பிரபாகரன்,முனைவர் சிறீராம்,உளுந்தூர்பேட்டை மருத்துவர் மா.அன்புமணி, கழக பொதுக்குழு உறுப்பினர் பெ.பால சண்முகம், சங்கராபுரம் ஒன்றிய கழக செயலாளர் கே. மதியழகன், தஞ்சாவூர் மாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.ஏழுமலை, ஜெயலட்சுமி-ஏழுமலை ஆகியோர் உள்பட பலர் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நூல் ஆய்வுரை
பெரியாரிய சமூக செயற்பாட்டாளர் முனைவர் த.ஜெயக்குமார் பேராசிரியர் (பணநிறைவு) நூல் ஆய்வுரை வழங்கினார்.அவர்தம் “நூலாய்வுரையில் நூலாசிரியர் முனைவர் ம.சுப்பராயன் அரசுப் பணியில் ஆசிரியராக த் திறம்பட பணியாற்றி ஓய்வுக்குப் பின் சோற்றைத் தின்றுவிட்டு எதற்காக வீட்டில் சும்மா இருக்க வேண்டும்?சமூகத்திற்கு நம்மால் முடிந்ததை செய்துவிட்டு போவோமே என்று பகுத்தறிவு இயக்கப் பணி-தமிழ்ச் சங்கப் பணி-( உடன் )ஆய்வும் எழுத்தும் கூடுதல் பணி எனச் சேர்த்துக்கொண்டு செயல்படுகிறார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அடிக்கடி கூறும்’நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது, வேறு யாரா லும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்”என்ற தன்னம்பிக்கை முழக்கத்தை சுவாசித்ததனால் இந்நூலைப் படைத்திருக்கிறார் என்றே கூறலாம். நூலாசிரியர் பெரியார்-பெரியாரியல்- திருக்குறள் இவற்றை உள்ளடக்கி ஒரு பெரியாரியக் கருத்தியலாளராக இந்நூலை படைத்துள்ளார்.இந்த நூல் வாசிப்பவர்களை ஈர்க்கும் என்பதில் அய்யமில்லை”எனக் கூறி அணிந்துரையை நிறைவு செய்தார்.
நூலாசிரியர் ஏற்புரை
நூலாசிரியர் முனைவர் ம.சுப்பராயன் தனது ஏற்புரையில், “நான் குலத்தூர் என்ற குக்கிராமத்தில் எழுத்தறிவற்ற பெற்றோருக்கு மகனாகப் பிறந்தேன்.தந்தை பெரியார் போராடி பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் படித்தேன்-பட்டங்கள் பல பெற்றேன்..அரசு பணியில் முதுகலைப் பட்டதாரி கணித ஆசிரியராக சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றினேன்.6 ஆண்டுகள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினேன்.ஓய்வுக்குப்பின் முனைவர் பட்டம் பெற்று, இன்று ஒரு நூலை வெளியிட்டுள்ளேன்.என்னுடைய இணையர் அன்புமணி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.மகன் சதீஷ்குமார் கப்பல் பொறியாளர்.மகள் கவிதா, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்.இந்த நிலை சாதாரணமாக ஏற்பட்டுவிடவில்லை.தந்தை பெரியாரின் 60 ஆண்டுகால ஓயாத உழைப்பால்தான் ஒடுக்கப்பட்ட மக்களெல்லாம் உயர்ந்த நிலையை அடைந்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்க ளெல்லாம் தலைநிமிர்ந்து நடந்தார்கள். வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கப்பட்ட பெண்கள் எல்லாம் இன்று ஆண்களுக்கு நிகராக விளங்குகின்றார்கள்.
தந்தை பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவனாக இன்று சமுதாயத்தில் வீறுநடை போட் டுக் கொண்டிருக்கின்றேன். இந்த பெருமைகள் எல்லாம் தந்தை பெரியாரையேசாரும்”எனக் கூறி ஏற்புரையை வழங்கினார்.
இவ்விழாவில் பாவலர் கோ.அழகிய நம்பி,அறங்காவலர் பேராசிரியர் சாலை இளந்திரையன் அறக்கட்டளை சென்னை, சங்கை நகர திருக்குறள் பேரவை புரவலர் பாமாஇலட்சுமிபதி, மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், குறள் வீடு உறவுகள் மூத்த உறுப்பினர் மா.பன்னீர், சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்கத் துணைத் தலைவர் நா.கமலநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிவரசன்; செய லாளர் வீர.முருகேசன்; அமைப்பாளர் சி.முருகன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பா.முத்து, கீழ்குறிச்சி குமார், உளுந்தூர்பேட்டை ஒன்றிய கழகத் தலைவர் செல்வ சக்திவேல், சென்னை மாங்காடு பரமேஸ்வரன்-கீதா, சென்னை குன்றத்தூர் இளங்கீரன்-தனலட்சுமி, சேலம் மோகன்- ஆண்டாள், குலத்தூர் ம.காசிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.யாழிசை பதிப்பகத்தின் ப. கோபாலகிருஷ்ணன், இ.பிரியதர்ஷினி ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்தனர். நிறைவாக சு.கவிதா (உதவிப் பொறியாளர், மின்வாரியம், சென்னை கலைஞர் கருணாநிதி நகர்) நன்றி கூற கூட்டம் இனிதாக முடிந்தது.