ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது (என்.சி.இ.ஆர்.டி), தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆங்கில வழிப் பாடப்புத்தகங்கள் பலவற்றிற்கு, ஹிந்தியில் என்.சி.இ.ஆர்.டி பெயர் வைத்துள்ளது. ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில், ஆங்கில வழிப் பாடப் புத்தகங்களின் பெயர்களை ஹிந்தியில் மாற்றம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ஒரு புத்தகம் எந்த மொழியில் வெளியிடப்படுகிறதோ, அந்த மொழியிலேயே பெயர் சூட்டும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அப்படி இருக்கையில், ஆங்கில மொழியில் இருக்கும் பாடப்புத்தகங்களுக்கு ஹிந்தியில் பெயரை மாற்றியது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழிப் பாடப்புத்தகங்களின் பெயர்கள் முன்பு ‘ஹனிசக்கிள்’ மற்றும் ‘ஹனிகோம்ப்’ என்று இருந்தன. ஆனால், இம்முறை இரண்டு வகுப்புகளுக்குமான ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் ‘பூர்வி’ என ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான புதிய ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் ‘மிருதங்’ என்றும், 3 மற்றும் 4ஆம் வகுப்புகளுக்கான ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் ‘சந்தூர்’ என்றும், பிற பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களின் புத்தகங்களுக்கும் ஹிந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு கணிதப் பாடப்புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பிற்கு முன்பு ‘Mathematics’ என்று இருந்தது.
இம்முறை ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பதிப்புகளுக்கு ‘கணித் பிரகாஷ்’ (Ganit Prakash) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 3ஆம் வகுப்பு கணிதத்திற்கு, ‘கணித மேளா’ (Maths Mela) என்றும், 6ஆம் வகுப்பு கலை பதிப்புக்கு ‘கிருதி 1’ என்றும், 3ஆம் வகுப்பு உடற்கல்விக்கு ‘கேல் யோக்’ என்றும், 6ஆம் வகுப்பு உடற்கல்விக்கு ‘கேல் யாத்ரா’ என்றும், 6ஆம் வகுப்பு தொழில்கல்விக்கு ‘கவுஷல் போத்’ என்றும் ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய பிஜேபி அரசின் முக்கிய நோக்கம் என்பது ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பது தானே!
அதனை மய்யப் புள்ளியாக வைத்து ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மும்மொழிகளைத் திணிக்கிறது.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் இரண்டே மொழிதான் என்று இன்றைக்கு 58 ஆண்டுகளுக்கு முன்பாகவே (ஆகஸ்டு 1967) அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போதே அதிகாரப் பூர்வமாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானிக்கப்பட்டு, நடைமுறையிலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பிஜேபி ஆட்சியில் தேசிய கல்வி திட்டம் என்ற பெயரால் மூன்றாவது மொழியை மாநிலங்களில் திணிப்பது வறட்டு முரட்டுப் பிடிவாதமே.
ஒரு மொழி கற்பிப்பு என்று எண்ணி, இதனைக் கடந்து சென்றுவிட முடியாது. இது ஓர் பண்பாட்டுத் திணிப்பேயாகும். சமஸ்கிருதம் ஊருடுவி தமிழ் மொழியைப் பல மொழிகளாக (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்டவை) கூறுபோட வில்லையா?
மூன்றாவது மொழி என்று பொதுவாக சொல்லப் பட்டாலும் நடைமுறையில் ஹிந்தி மற்றும் சமஸ் கிருதமே திணிக்கப்படும் என்பது நாடறிந்த கெட்டியான உண்மையாகும்.
இப்பொழுது ஆங்கிலப் பாடப் புத்தகங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டுவது எந்த வகையில் சரியானதாகும்? ஆங்கிலத்திலும் ஊடுருவலா என்று கேட்கத் தோன்றுகிறது. இந்தப் பொறுப்பை என்.சி.இ.ஆர்.டி.யிடம் (கல்வி திட்டமிடும் தேசியக் குழு) ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
இந்தக் குழுவில் இடம் பெற்று இருப்பவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் சிந்தனையுடைய வர்கள்தாம்.
உத்தரப்பிரதேசம் 7ஆம் வகுப்பில் இடம் பெற்றவைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
‘முலாயம் சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?
‘பாபர் மசூதியை இடிக்க முயற்சி நடந்தபோது, முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்?’’ (அவுட் லுக்’’ 10.8.1999) எடுத்துக்காட்டுக்காகவே இவை. இவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு எடுத்துக்காட்டே ஆங்கில நூல்களில் பெயர்களை ஹிந்தியில் மாற்றும் மோசடியாகும்.