சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
சென்னை, ஏப்.18 வேலையில்லாத இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படுபவர் களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கு எப்படி விண்ணப் பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித் தொகை
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மய்யம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை தற்போது பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உதவி பெற சில தகுதிகளை இளைஞர்கள் பூர்த்தி செய்து இருக்க வேண்டும். 10 அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி/தோல்வி, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து இருக்க வேண்டும். அதே போல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதனை முறையாக பதிவு செய்து இருக்க வேண்டும் போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசின் உதவி தொகை பெற
யார் யார் தகுதியானவர்கள்?
யார் யார் தகுதியானவர்கள்?
இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற தனிநபர்கள் தங்கள் படிப்பு தொடர்பான விவரங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குறைந்தபட்சம் அய்ந்து ஆண்டுகள் புதுப்பித்து இருக்க வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும், ஆதி திராவிட அல்லது பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு 45 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மேலும் விண்ணப்பதாரர்கள் எந்த நிறுவனத்திலும் பணிபுரிந்து இருக்கக் கூடாது. அதே சமயம் சுயதொழில் ஈடுபட்டு இருக்கக் கூடாது. அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்து இருந்தால், உங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவிகளை பெறலாம். ஏற்கனவே வேறு ஏதேனும் திட்டத்தில் உதவி பெற்று வந்தால் இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் மற்றும் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.