சென்னை, ஏப். 18– சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்குரைஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதித்துறையை அவமதிக்கும் விதமாக பேசி வருகிறார். அவருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுநீதிபதி, “நீதித் துறையை அவமதித்து சீமான் பேசினால், அதை நீதித்துறை பார்த்துக் கொள்ளும். இதுநாள் வரை சீமான் பேச்சை கேட்டதே இல்லையா? அவர் பேசிய பேச்சுகளில், இதை மட்டும் தான் கேட்டீர்களா? சீமான் பேசிய பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால், குறைந்தது 100 வழக்குகளாவது இதுவரை தொடர்ந் திருக்க வேண் டும்” என்று கருத்து தெரி வித்தார்.
அதற்கு மனுதாரர் தரப் பில், சீமானுக்கு எதிராக மேலும் 4 வழக்குகள் தொடர்ந்துள்ளேன். உயர்நீதிமன்ற பதிவுத் துறை அதை ஏற்று எண் வழங்காமல் உள்ளது என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.