திருப்பரங்குன்றம், ஏப்.17- தொடர்ந்து பிற்போக்குவாதக் கருத்துகளையும் அறிவியலுக்கு எதிரான கருத்துகளையும் பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 12.4.2025 சனிக்கிழமை, அரசு உதவி பெறும் கல்லூரியான மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ‘கம்பர் -2025′ விழாவில் பங்கேற்றுப் பேசும்போது, தமிழ்நாடு அரசு மற்றும் ஆளும் தி.மு.க.விற்கு எதிராகப் பேசியிருந்தார்.
மேலும் மக்களைப் பிளவுபடுத்தும் மத வகுப்பு வாதத்தைத் தூண்டி, கூடியிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சியுற்று முகம் சுழிக்கும் வகையில் வெறுப்புப் பேச்சுகளையும் பேசியுள்ளார்.
இறுதியில், அவர் “ஜெய் சிறீராம்” என்று முழக்கமிட்டதுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் முழக்கமிடுமாறு வலியுறுத்தியுனார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள மூட்டா (MUTA) அமைப்பு, “ஆளுநர் மீண்டும் அரசமைப்பை அவமரியாதை செய்துள்ளார். மாணவர்கள் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கக் கட்டாயப் படுத்தப்பட்டு, வகுப்புகளையும் கற்றல் கற்பித்தல் பணிகளையும் துறக்கச் செய்து, பிற்பகல் 2.00 மணிக்கே அரங்கத்தில் அமர வைக்கப்பட்டு, சுமார் 6.00 மணி வரை நான்கு மணி நேரம் குடிநீர் வழங்காமலும் இயற்கை உபாதைக்குச் செல்லக்கூட அனுமதிக்கப்படாமலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும்.
விடுமுறை நாளை வேலை நாளாக அறிவித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை மதிக்காத ஆளுநர் ஆர்.என்.இரவியின் வகுப்புவாத வெறுப்புப் பேச்சுக்குக் கல்லூரியில் மேடை அமைத்துக் கொடுத்த வகையில், கல்லூரி நிர்வாகமும், கல்லூரி முதல்வரும் பெருங்களங்கம் விளைவித்து உள்ளனர்.
மேலும் கல்லூரியின் தற்போதைய தற்காலிக நிர்வாகத்தின் மதவாத ஆதரவு காரணமாக, கல்லூரியை நிறுவிய கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் மற்றும் கல்லூரியைத் தொடங்கிய தியாகேசர் டிரஸ்ட் மற்றும் தியாகராசர் எஞ்சினியரிங் எண்டோமெண்ட் டிரஸ்ட் நோக்கங்கள். புகழ் மற்றும் நற்பெயருக்குத் தீராத அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்வுக்குக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூட்டா டான்சாக் மற்றும் இந்திய மாணவர் சங்கம் இணைந்து 15.4.2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
டான்சாக் மாநில செயற்குழு உறுப்பினரும், தியாகராசர் பொறியியல் கல்லூரி டான்சாக் கிளைத் தலைவருமான பா.மனோகரன் தலைமையுரை ஆற்றினார்.
மூட்டா பொதுச்செயலாளர் பேரா. அ.தி.செந்தாமரை கண்ணன், மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன், இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநில துணைத் தலைவருமான கா.பிருந்தா. அகில இந்திய அறிவியல் இயக்கத்தின் தலைவர் பேரா.ராஜமாணிக்கம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், ரான்சாக் அமைப்பின் செயலாளர் பன்னீர் செல்வம். டான்சாக் மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் டேவிட் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
போராட்ட நிறைவுரையை அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேரா.பார்த்தசாரதி ஆற்றினார். தியாகராஜர் கல்லூரி FOCEA கிளையின் தலைவர் பேரா. சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்தி, தியாகராசர் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தையும் கல்லூரி முதல்வரையும் உடனடியாக தற்காலிக நீக்கம் செய்து, விசாரணைக் குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்குமாறும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-அய் அமல்படுத்த மறுப்பது, தமிழ்நாடு அரசு, தொழில் நுட்பக் கல்வி ஆணையாளர் ஆகியேரின் உத்தரவுகளைத் தொடர்ந்து செயல்படுத்த மறுக்கும் சட்ட விரோத போக்கு போன்ற இக்கல்லூரி நிர்வாகம், கல்லூரி முதல்வரின் அனைத்து சட்ட விதி மீறல்கள், அரசுக்கு ஏற்படுத்தியுள்ள நிதி இழப்புகள் உள்ளிட்டவற்றின் மீதும் உரிய நடவடிக்கை கோரப்பட்டது.
மேதகு குடியரசுத் தலைவர்், இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமலும் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டி கோரிக்கை வைக்கப்பெற்றது.
இப்போராட்டத்தில், சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.