வீடுகளில் பெரும்பாலும் அரளிச் செடியை அதன் விஷத்தன்மை காரணமாக வளர்ப்பது இல்லை. ஆனால் நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகம் இருப்பதை பார்த்திருப்போம்.
பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது குறைந்த செலவு என்பதாலும் இதனை நெடுஞ்சாலைகளில் வைப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்குப் பின் அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
சுவாசக் கோளாறு நீங்கும்
வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுக்கள் அதிகமாக இருக்கும். இந்த நச்சுக்கள் காற்றில் கலந்து சாலையில் பயணிப்பதற்கு சுவாசக் கோளாறு ஏற்படுத்தக் கூடும்.
ஆனால் செவ்வரளி செடியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள், கார்பன் துகள்களை காற்றில் இருந்து நீக்கி காற்றில் உள்ள மாசுகளை அகற்றும் தன்மை கொண்டவை.
அதுமட்டுமில்லாமல், இவை வறட்சியை தாங்கும் தன்மை கொண்டவை. சத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டவை, இவ்வளவு ஏன் எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எதிர்புற வாகன ஓட்டிகளின் மீது படாமல் தடுக்கின்றன. அந்த அளவுக்கு இலைகள் அடர்த்தி மிக்கவை.
சாலைகளில் செடிகள் இருந்தால் அதனை விலங்குகள் தீண்டும். ஆனால் விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் இலைகளை சாப்பிடாது என்பதும் மற்றொரு காரணம்.
குறைந்த பராமரிப்பு செலவு
நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் அரளிச் செடிகள் மழை அதிகமான காலங்களில் அதிகமாக வளரும். அப்படி வளரும் பட்சத்தில் விபத்துகள் நேரலாம்.
அதனால்தான் சாலையின் நடுவில் செடிகள் குறைந்த அளவு உயரமாக வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பராமரிப்பது குறைந்த செலவு தான் என்றாலும் சரியாக அதனை செய்ய வேண்டும்.
இந்த செவ்வரளி எல்லா பருவநிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்கூடியது. அழகோடு சேர்த்து இத்தனை அறவியல் காரணங்கள் இருப்பதால் செவ்வரளியை நெடுஞ்சாலையில் அதிகம் காண முடிகிறது.