மோசடிகளில் இருந்து தப்பிக்க வழிமுறைகள் வங்கி அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து ஆலோசனைக் கூட்டம் 5 முக்கிய அறிவிப்புகள்

viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.17- பொது மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் இழப் பதை தடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கி அதிகாரிகளும், காவல்துறையினரும் இணைந்து 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

பொது மக்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து நாள்தோறும் நூதன முறையில் இணையம் மூலமாக பணத்தை இழந்து வருகிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் செயல்படுகிறார்கள். இது போன்ற ஏமாற்றங்களில் இருந்து பொது மக்களை விடுவித்து, அவர்கள் வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை பாதுகாப்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (16.4.2025) மாலை வங்கி அதிகாரிகள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.

சென்னை காவல் ஆணையர் அருண் ஏற்பாட்டில், மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உயர் காவல் அதிகாரிகளும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

5 முக்கிய அறிவிப்புகள்

இந்த நிகழ்ச்சியின் முடிவில் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.அதன் விவரம் வருமாறு:-

* வங்கி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் இழந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொடுப்பதில் எந்தவித கால தாமதமும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

* வழக்குகள் தொடர்பாக வங்கி அதிகாரிகள், காவல்துறையினர் கேட்கும் தகவல்கள், ஆவணங்களை காவல் விசாரணைக்கு பயனுள்ள வகையில் உடனடியாக காவல்துறையினரும் கொடுத்து உதவ வேண்டும்.

* சைபர் குற்றங்களை தடுப்பதற்காக விழிப்புணர்வு கூட்டங்களை வங்கி அதிகாரிகள் அவ்வப்போது நடத்த வேண்டும்.

சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள்

* வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் அடிக்கடி ஏமாற்றப்படும் சம்பவங்கள் நடக்கிறது. இத னால் வங்கிகள் தங்களுடைய மூத்த குடிமக்களுக்கு அவர்கள் ஏமாறுவதை தடுக்கும் விதமாக அடிக்கடி சிறப்பு விழிப்புணார்வு முகாம்களை நடத்தி உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

* சைபர் குற்றங்கள் வாயிலாக பொது மக்களுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தி அவர்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நொடிப் பொழுதில் இழக்க செய்து விடுகிறார்கள். இதனால் வங்கிகளில் பணத்தை சேமிக்கும் பொது மக்கள் மனச்சோர்வு அடைகிறார்கள். இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உடனடியாக வங்கி அதிகாரிகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். இதுபோல் பணத்தை இழக்கும் பொது மக்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்ற உறுதிமொழியை கொடுத்து அதை நிறைவேற்றும் வகையில் வங்கி அதிகாரிகள் பொது மக்களோடு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.  மேற்கண்டவாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *