ஜாதியின் பெயரில் கோயில் திருவிழாக்களை நடத்தக் கூடாது என்று கடந்த பிப்ரவரியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்து மதம் என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தில் உள்ள ஒரு பிரிவினர் மட்டும் கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்பது எந்த வகையில் சரியானதாக இருக்கவும் முடியும்?
கோயில்கள்தான் ஜாதியிருப்பை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு இருக்கின்றன. கோயில் கருவறைக்குள் குறிப்பிட்ட ஜாதியினர்தான் அர்ச்சகராக இருக்க முடியும் என்பது எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல!
அந்த வகையில் உயர்நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்க ஒன்றாகும். நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான ஆணை பிறக்கப்பட்டுள்ளது.
‘‘கல்வி நிறுவனர் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், ஜாதிப் பெயர்களில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என்றும், ஏற்ெகனவே உள்ள சங்கங்களின் பெயர்களில் ஜாதிப் பெயர் இருந்தால் அவையும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் ஜாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களைச் – சங்கங்கள் பதிவுச் சட்டப்படி பதிவு செய்ய முடியுமா என்று தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, சங்கத்தின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர் தங்கள் சட்டத்துக்கு சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு தமிழ்நாடு அரசை அணுகிப் பரிந்துரை செய்துள்ளது.
ஜாதிப் பெயரில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என்று அனைத்துப் பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழ்நாடு பதிவுத்துறை அய்.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாதிப் பெயருடன் கூடிய சங்கங்களின் பெயர்களில் இருந்து பெயர்களைத் திருத்தம் செய்ய வேண்டும்; அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களை சட்ட விரோதமான சங்கங்கள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களின் பெயர்களிலும் ஜாதிப் பெயர் நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும். பெயர்ப் பலகைகளில் ஜாதிச் சங்கப் பெயர்கள் இடம்பெறக் கூடாது. அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதி திராவிடர் நலப் பள்ளி போன்றவற்றின் பெயர்களும் அரசுப் பள்ளிகள் என்று மாற்றப்பட வேண்டும்.
ஆணவக் கொலைகள் குறித்தும், மாணவர்களிடையே நிலவும் ஜாதிப் பிரச்சினைகள் குறித்தும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையிலேயே மக்கள் நலனில் ஆழ்ந்த அக்கறை உள்ள ஒரு ஆணையாக இது கருதப்பட வேண்டும்.
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருந்தால் அது சுதந்திர நாடா என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவிற்கு இன்று வரை விடை காண முடியவில்லையே!
ஜாதியின் காரணமாகக் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு, அதே ஜாதியை அளவுகோலாக வைத்து கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால், இந்தக் காலத்திலும் ஜாதியை வைத்து வாய்ப்புக் கேட்கலாமா என்று ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல வினா எழுப்பக்கூடிய பார்ப்பனர்கள், ஹிந்து மதத்துக்குள் இருக்கக் கூடியவர்கள், ஹிந்து மதக் கோயில் கருவறைக்குள் ஆகமம் கற்றுத் தேர்ந்தாலும்கூட, தங்களைத் தவிர மற்றவர்கள் கோயில் கருவறைக்குள் நுழைந்தால் கருவறை தீட்டாகி விடும்; சாமி செத்துப் போய் விடும் என்கிற அளவுக்கு ஜாதியைத் தூக்கிப் பிடிக்கும் கூட்டம் தானே இந்தப் பார்ப்பனர்கள். இன்னும் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று தனியே ஒரு நாளை ஒதுக்கிப் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு தானே வருகிறார்கள்.
அந்தப் பூணூலின் தத்துவம் என்ன? நாங்கள் துவி ஜாதியினர் (இரு பிறப்பாளர்) பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், இந்தப் பூலோகத்தை பிராமணர்களுக்காகவே பிர்மா படைத்தான் என்று பறைசாற்றுபவர்கள் தானே!
உண்மையான சுதந்திர நாடாக இருந்தால் இந்த ஜாதியை சட்டம் போட்டுத் தடை செய்ய வேண்டாமா? மனிதனை மனிதனாகப் பார், சக மனிதனை சகோதரனாக நேசி என்று சொல்லுவதற்கு ஒரு தந்தை பெரியார் தானே தேவைப்பட்டார்; அதற்காக குரல் கொடுப்பதற்குத் திராவிடர் கழகம் தானே இருக்கிறது!
சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டு, அதன் சட்டப் புத்தகத்தில் பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் ஜாதியை கெட்டியாகப் பாதுகாக்கும் பகுதி இருக்கிறதே என்று சுட்டிக்காட்டி, அந்தப் பகுதியை நீக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு பல லட்சம் மக்கள் கூடிய மாநாட்டை தஞ்சையில் கூட்டி (3.11.1957) வேண்டுகோள் தீர்மானம் நிறைவேற்றியும்கூட, சட்டத்தைத் திருத்த முன் வராமல் ஜாதியைப் பாதுகாக்கும் சட்டத்தின் புகுதியைக் கொளுத்தினால் மூன்றாண்டு தண்டனை என்று அவசர அவசரமாக சட்டம் இயற்றுவதுதான் யோக்கியமா?
சட்டத்தைக் கண்டு அஞ்சாமல், ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தின் பகுதியைப் பத்தாயிரம் திராவிடர் கழகத் தோழர்கள், கருஞ்சட்டை மாவீரர்கள் கொளுத்தி வெஞ்சிறை ஏகிய வரலாற்றை உலகத்தின் எந்த மூலையிலாவது கண்டதுண்டா?
தந்தை பெரியாரின் தொண்டும், பிரச்சாரமும் வீண் போய் விடவில்லை.
தனது பெயருக்குப் பின்னர் ஜாதி பட்டத்தைப் போட்டுக் கொள்ள வெட்கப்படும்படிச் செய்திருப்பது – தந்தை பெரியாருக்கும் அவர்கள் கண்ட திராவிடர் கழகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியே!
இப்பொழுது உயர்நீதிமன்றம் ஜாதியின் பெயரால் சங்கம் அமைத்தால் அதனைப் பதிவு செய்யக் கூடாது என்றும் ஜாதிப் பெயர்களோடு கல்வி நிறுவனங்கள் இயங்கக் கூடாது என்றும் நீதிமன்றமே சொல்லும் அளவுக்கு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். தீர்ப்பை வரவேற்கிறோம்.
தென் மாநிலங்களில் மாணவர்கள் தத்தம் ஜாதிக்கென்று அடையாளமாக வெவ்வேறு வண்ணங்களில் கயிறு கட்டி வந்த நிலையில், அதனைக் கடுமையாக எதிர்த்தது திராவிடர் கழகம் அது நூறு விழுக்காடு வெற்றி பெற்றது என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.