ஜாதிப் பெயரில் சங்கங்களைப் பதிவு செய்யக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

viduthalai
2 Min Read

வரவேற்கத்தக்க –பாராட்டத்தக்க தீர்ப்பு கல்வி நிறுவனப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும்!

சென்னை, ஏப். 16 கல்வி நிறுவனர் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், ஜாதிப் பெயர்களில் சங்கங்களை பதிவு  செய்யக்கூடாது என்றும், ஏற்ெகனவே உள்ள சங்கங்களின் பெயர்களில் ஜாதிப் பெயர் இருந்தால் அவையும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் ஜாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களைச் சங்கங்கள் பதிவுச் சட்டப்படி பதிவு செய்ய முடியுமா என்று தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, சங்கத்தின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர் தங்கள் சட்டத்துக்கு சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு செய்வ தற்கு தமிழ்நாடு அரசை அணுகப் பரிந்துரை செய்து வழக்கை முடித்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன். ஜாதிப் பெயரில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என்று அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழ்நாடு பதிவுத்துறை அய்.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாதிப் பெயருடன் கூடிய சங்கங்களின் பெயர்களில் இருந்து பெயர்களைத் திருத்தம் செய்ய வேண்டும்; அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களைச் சட்ட விரோதமான சங்கங்கள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கல்வி நிறுவனங்களின் பெயர்களிலும் ஜாதிப் பெயர் நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும். பெயர்ப் பலகைகளில் ஜாதிச் சங்கப் பெயர்கள் இடம்பெறக் கூடாது. அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதி திராவிடர் நலப் பள்ளி போன்றவற்றின் பெயர்களும்  அரசுப் பள்ளிகள் என்று மாற்றப்பட வேண்டும். ஆணவக் கொலைகள் குறித்தும், மாணவர்களிடையே நிலவும் ஜாதிப் பிரச்சினைகள் குறித்தும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையான தீர்ப்பு விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *