சென்னை, ஏப்.16- இந்தியாவின் மிகப் பெரிய அய்டி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்க திட்டமிட்டிருந்த ஊதிய உயர்வை ஒத்திவைத்துள்ளது.
மார்ச் காலாண்டு முடிவு களையும், 2024-2025ஆம் நிதியாண் டுக்கான முடிவுகளையும் வெளியிடும் போது செய்தியாளர் சந்திப்பில் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இதை தெரிவித்தனர்.
வர்த்தக போர்
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான தொடர்ச்சியான வர்த்தகப் போர் காரணமாக அதிகரித்துள்ள உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலையே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இந்திய அய்டி சேவைத் துறையைப் பாதிக்கும் விஷயங்கள் அதிகம் செய்து வருகிறார்.
முதலில் விசா கட்டுப்பாடுகள், கிரீன் கார்டு பிரச்சினை, இதைத் தொடர்ந்து தற்போது ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு, சீனா உடன் வர்த்தக போர் என அமெரிக்கா வர்த்தகத்தையும், அமெரிக்காவில் அதிகம் வருமானம் ஈட்டும் இந்திய அய்டி சேவை துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய அய்டி சேவைத் துறைக்கு அமெரிக்கச் சந்தையில் இருந்து புதிய வர்த்தகம் கிடைப்பது என்பது கடினமான விஷயமாக இருக்கும். ஏற்கெனவே அமெரிக்கப் பொருளாதாரத்தில் ரெசிஷன் அச்சம் சற்று அதிகமாகவே உள்ளது.
ஒத்தி வைப்பு
இந்த நிலையில் பொருளாதார நிலைமை தெளிவடையும் வரை, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுகள் நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் இதுகுறித்து கூறுகையில், இந்த ஆண்டு ஊதிய உயர்வு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு கரோனா தொற்றுக்காலத்தில் உலகளாவிய வணிகம் முடங்கியபோதும் எடுக்கப்பட்ட இதேபோன்ற முடிவு போல் உள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் நிலவும் மோசமான சூழ்நிலையும் டிசிஎஸ்-ன் முடிவு காட்டுகிறது.
இதேவேளையில் அய்டி சேவைத் துறையில் உள்ள நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தையும், வளர்ச்சியையும் காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.
இந்திய அய்டி சேவை துறையில் மாபெரும் நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் எடுத்திருக்கும் இத்தகைய முடிவு இதன் போட்டியாளர்களான இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களையும் இதேபோன்ற முடிவை எடுக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. அடுத்த வாரம் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களும் தங்களுடைய நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன.
டிசிஎஸ் நிர்வாகம் ஊதிய உயர்வை ஒத்திவைத்தாலும், காலாண்டு ஊக்கத்தொகை அதாவது வேரியபிள் பே தொகையைத் தொடர்ந்து அளிக்க டிசிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நான்காவது காலாண்டில், ஊழியர்களில் 70 சதவீதம் ஊழியர்கள் தங்களுடைய வேரியபிள் பே தொகையில் முழுவதையும் பெறுவார்கள். மீதமுள்ள ஊழியர்களின் வணிக செயல்திறனைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.