‘இலக்கியச் செல்வர்’ குமரிஅனந்தனுடன் ஒரு செவ்வி
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவர் வரிசையில் இருக்கக்கூடிய இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தந்தை பெரியார் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் இருந்து திராவிடர் கழகத் தலைவராக இருந்த காலம் வரை ஆற்றிய தொண்டு, அதனால் ஏற்பட்ட பலன்களை விவரிக்கிறார்.
பேட்டி கண்டவர் கலி. பூங்குன்றன்.
கவிஞர்: “ஆசிரியர்வீரமணி அவர்கள் 1962ஆம் ஆண்டு முதல் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பேற்றதிலிருந்து ‘விடுதலை’யின் சார்பாக பெரியார் பிறந்தநாள் மலர் வெளியிடப்பட்டுக் கொண்டுவருகிறது. அந்த வகையில் இது தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாள் விழா. ஆசிரியர் வீரமணியுடன் ஒரே கல்விச் சாலையில் படித்தவர் நீங்கள். நீண்டகாலம் இருவரும் பொது வாழ்க்கையில் பங்கேற்றிருப்பவர்கள். அந்த வகையில் தந்தை பெரியார் மலருக்காகத் தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வணக்கம்!”
குமரியார்: (புன்னகைக்கிறார்) வணக்கம் !
கவிஞர்: “இந்த 60 ஆண்டுகளில் தந்தை பெரி யாரின் தாக்கம் தமிழ்நாட்டின் பொது வாழ்வில் எந்தளவுக்கு இருந்தது?’
குமரியார்: ‘‘தந்தை பெரியாரின் தாக்கம் தமிழ கத்தில் அழுத்தமாக பதிந்த ஒன்று. ஒரு காலத்தில் பெண் ணுக்குத் திருமணமாகி அவளுடைய கணவன் இறந்துவிட்டால், உயிர் போகின்ற வரை அவள் கைம்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பதை யெல்லாம் மாற்ற வேண்டும் என்று புரட்சி செய்தவர்! அன்றைய காலகட்டத்திலேயே தன் தங்கை மகளுக்கு மறுமணம் செய்துவைத்து மாபெரும் புரட்சியைச் செய்தவர் மரியா தைக்குரிய பெரியார் அவர்கள்! காந்தியாரின் மதுவிலக்குக் கொள்கைக்காக நமது தந்தை பெரியார் அவர்கள், தம்முடைய தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டிக்கீழே வீழ்த்தினார். அதுமட்டுமல்ல கள்ளுக்கடை மறியல் என்ற பெரும் போராட்டம் நடைபெற்றது. அதுதேச விடுதலைப்போராட்டத்திலே ஒரு தளமாகவே இருந்தது. காங்கிரஸ்காரர்களே மறியல் போராட்டத்தைக் கைவிடக் கேட்ட பொழுது. ‘அது எங்கள் கையில் இல்லை. ஈரோட்டில் இருக்கின்ற இரண்டு பெண்கள் கையில் இருக்கின்றது’ என்று நாகம்மையார், கண்ணம்மையார் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொன்னார் அண்ணல் காந்தி மகான்! பெரியாருக்கு மட்டுமல்ல, பெரியார் குடும்பத்திலே இருக்கின்றவர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
“மரியாதைக்குரிய தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். கதர்த்துணிகளைத் தோளிலே போட்டுச் சுமந்து ஈரோட்டு வீதிகளிலே ‘கதர் வாங்கலையோ’ என்று சுதேசி இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள். அதேநேரத்தில் பெண்ணுரிமைக்காகப் போராடியவர்.’புலிக்கு மான் எப்படி உணவாகவே படைக்கப்பட்டதென்று சிலர் பேசுகிறார்களோ, பூனைக்கு எப்படி எலி உணவாகவே கடவுளால் படைக்கப்பட்டதென்று சிலர் சொல்லுகிறார்களோ, அதுபோலவே பெண்களெல்லாம் இந்த ஆண்களுக்கு அடிமைகளாகவே கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள். இது எப்படிப் பொருந்தும்? இதில் என்ன நியாயத்தைக் காண்பது? என்று கேட்டது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணுரிமைக்கு -சொத்திலே 50க்கு 50, ஆணுக்குப்பாதி, பெண்ணுக்குப் பாதி என்று சொல்லுகின்ற உரிமையை இடைவிடாது போராடிப் பெறுவதற்கு பாடுபட்டுக் கொண்டிருந்தவர் நமது மரியாதைக்குரிய தந்தை பெரியாரவர்கள்! இந்த நாட்டில் தாழ்ந்தவர்கள் என்று கிடையாது! தாழ்த்தப்பட்டவர். அவர் தாழ்ந்தவர் அல்ல. உங்களால் தாழ்த்தப்பட்டவர்! இவர் பின்தங்கியோரல்ல. உங்களால் பிற்படுத்தப்பட்டோர்! எனவே அவர்களுக்காக வேண்டிய சலுகைகளைத் தரவேண்டும் என்று வாதாடியவர். மேல் நாடுகளிலே எல்லாம் பொருளாதாரத்திலே பேதத்தைப் பார்ப்பார்கள். நமது ஒரு நாட்டிலேதான் பிறப்பால் பேதத்தைப் பார்ப்பது இருக்கிறது. இதை ஒழிக்க வேண்டுமா? இல்லையா? அதைப்போலே ‘காலம் பொன் போன்றது’. ஒருமுறை வந்தால் வந்ததுதான்! அதன்பிறகு திருப்பி அது வராது. அந்தக்காலத்தை நாம் பொன்போல போற்றவேண்டும். ஆனால் நமது ஊரிலே என்ன சொல்கிறார்கள்? நமது நாடு புனித நாடு என்று சொல்லிக்கொண்டே எமகண்டம் பார்ப்பதிலே காலம் போகிறது! ராகு காலம் பார்ப்பதிலே காலம் போகின்றது! இப்போது போன காலம் – வேறு எப்போது திரும்பி வரும்? எனவே இருக்கின்ற காலத்திலே இருக்கின்ற நல்லவைகளை நடத்திவிட வேண்டும் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் இன்றைக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்து கொண்டிருக்கின்றார்.
காமராசரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்
“அன்பிற்குரிய காமராஜரைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் காமராஜரைப் பார்த்து, தயவு செய்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலகாதீர்கள் என்றும் சொன்னார்கள். இப்போது நாங்களெல்லாம் காமராஜ் ஆட்சி அமைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம் (மெலிதாகச் சிரிக்கிறார்). அந்த காமராஜ் ஆட்சியே தொடர்ந்து இருக்கவேண்டும் என்று சொன்னவர்கள் மரியாதைக்குரிய தந்தை பெரியார் அவர்கள்! எத்தகைய தொலைநோக்கு. அப்படிப்பட்ட தந்தை பெரியாரினுடைய 140 ஆவது பிறந்நாள் விழாவிலே, எளியேனும் ஆசிரியரோடு ஒரே சர்வகலாசாலையில் படித்தேன் என்கின்ற பெருமையோடு அவர்களது புகழ் என்றென்றும், என்றென்றும் வளர்க என்று சொன்னதோடு,
தந்தை பெரியாரைப் பின்பற்றி தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும் வாழவேண்டும். பொதுமக்களும் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்று காமராஜரின் எளிய தொண்டனாகிய நான் கேட்டுக்கொள்கிறேன்”.
மதமே கூடாது என்ற உயர்ந்த தத்துவம்
தந்தை பெரியாருடையது
கவிஞர்: “மதச்சார்பின்மைக்கு சவால் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் பெரியாரினுடைய தேவை எந்த அளவுக்கு இருக்கிறது?”
குமரியார்: “தந்தை பெரியார் அவர்கள் மதமே கூடாது என்று சொன்னவர். மதத்தாலே நடக்கின்ற அட்டூழியங்கள், அநியாயங்கள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் ஒழியவேண்டும் என்று சொன்னால் அந்த மதமே இருக்கக்கூடாது என்பதுதான் தந்தை பெரியாரினுடைய தத்துவமாக இருக்கிறது. மதத்தின் பெயரால் வெறிகொண்டு அலைகின்றவர்களை நல்ல நெறி கொண்டு வாழுங்கள் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். எம்மதமும் சம்மதம் என்பதைவிட இது ஓர் உயர்ந்த தத்துவம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மதத்தால் ஜாதியால் பிரிவு ஏற்படக்கூடாது. வெளிநாடுகளிலே எல்லாம் பேதம் என்பது பொருளாதாரத்தின் அடிப்படையிலே வருகிறது. இந்த ஊரில் மட்டும்தான் பிறப்பின் அடிப்படையிலே வருகிறது . பிறக்கின்றவன் இந்தக்குலத்திலே பிறந்தான் என்கின்ற அந்த மூடநம்பிக்கை இங்கேதான் இருக்கின்றது. மற்றவர்கள் நம்மைத் துன்புறுத்துகிறார்கள் என்று சொன்னால், துன்பத்திலிருந்து இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று சொன்னால்… நாம்கூட கொசு வலை கட்டிக்கொள்கிறோம். அதனால் நம்மை கொசுத்துவேஷி என்று சொன்னால் இது என்ன நியாயம்? கொசு நமது இரத்தத்தைக் குடிக்கின்ற பொழுது ‘‘எனது இரத்தத்தின் இரத்தமே, என்றா நான் சொல்லமுடியும்?” அந்தக்கொசுவை ஒழிப்பதுதானே எனக்கு முக்கியம். அந்தக்கொசு என்னைத் தாக்காமல் இருப்பதுதானே எனக்கு முக்கியம். அதைப்போலவே ஜாதிவெறி பிடித்தவர்கள் இந்த மக்களை தாக்காமல் இருப்பதற்காகத்தான் ஒரு வலை பின்னுவதைப்போலே அதைத்தடுத்து நிறுத்துவதற்கு நான் முயன்று கொண்டிருக்கிறேன் என்று சொன்ன, எல்லோருக்கும் புரியும்படி எடுத்துச் சொன்ன ஓர் அற்புதமான ஆற்றல் பெற்றவர்தான் மரியாதைக்குரிய நமது தந்தை பெரியார்.”
கவிஞர்: மாற்றங்கள் எங்கு நடந்துள்ளன?
குமரியார்: “தந்தை பெரியார் காலத்திலே அவர் வைத்த பெயர் அன்று தேவையாக இருந்தது. அருமைக்குரிய பெரியார் அவர்கள் தம்முடைய
94 ஆவது வயதில்கூட ஓராண்டுக்கு அவர் 177 நாட்கள் பயணம் செய்து பகுத்தறிவு வாதத்தை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னதை நாம் நினைத்துப்பார்க்கிறோம்.. தந்தை பெரியார் எவ்வளவு பெரிய புரட்சி செய்தார் என்பதை எண்ணிப்பார்க்கின்றேன். சங்கராச்சாரியார் மடத்திலே அங்கிருக்கிறவர்கள் சாப்பிட்டபிறகு மிச்சமிருப்பதை வெளியிலே கொட்டமாட்டார்கள். ஏனென்றால் அதை ஒரு தீண்டத்தகாதவன் சாப்பிட்டுவிட்டால் மடத்திற்குத் தீட்டு ஏற்பட்டுவிடுமென்று குழிதோண்டிப்புதைத்த காலம். அந்தக் காலத்தை எப்படி மாற்றியிருக்கிறார் பார்த்தீர்களா? இன்று எல்லா இடத்திலும் ‘சமபந்தி போஜனம்’ என்று பெயரிட்டு அழைத்து அனைவரும் ஒன்று என்று காட்ட முயல்கிறோம் என்றால், அதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் மரியாதைக்குரிய தந்தை பெரியார் என்பதை எண்ணி அவரைப்போற்ற வேண்டும். அவருடைய பணிகளை பின்தொடர்ந்து எல்லோரும் செல்லவேண்டும்.
அவரைப்பற்றி நாம் சொல்வதைவிட அவரே பேசுகிறார் ஓர் இடத்திலே, நம்முடைய நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய சொந்த அறிவால் பகுத்துப்பார்த்து இது சரியா என்று சிந்தித்துப்பார்த்து அதன்படி நடந்தால் இன்று மதத்தின் பெயரால் நடைபெறுகின்ற பல சடங்குகளை, பல வலிகளை தடுத்து நிறுத்திவிட முடியும் என்று சொல்லுகின்ற உயர்ந்த கருத்தை எடுத்துச் சொன்னார். ஆக எல்லோரும் சமம் என்று சொல்லுகின்ற ஒன்றை, தமிழ்நாட்டிலே நான்கு ஜாதிப்பிரிவுகள் என்பதே கிடையாது. சூத்திரன் என்ற சொல் 11 ஆவது நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியத்திலே கிடையாது! இவைகளையெல்லாம் நாட்டுமக்கள் புரிந்து கொண்டு தமிழ்ச்சமூகம் வாழவேண்டும் என்று அதற்காகத் தொண்டு செய்தவர் தந்தைபெரியார் அவர்கள்.
கவிஞர்: இவ்வளவு தூரம் வந்திருந்து பல அரிய கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!
குமரியார்: நன்றி! வணக்கம்!
இந்திய தேசிய காங்கிரசின் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ‘சொல்லின் செல்வர்’ குமரி அனந்தன் தமது 85 ஆவது வயதிலும் மிகுந்த நிதானத்தோடும், வார்த்தைகளை தெள்ளத் தெளிவான உச்சரிப்போடும், கருத்துச் செறிவாகவும் பதிலளித்து மகிழ்வித்தது வியப் பாகவும் இருந்தது. அதோடு அவர்களின் இந்தக் கருத்துகள், திராவிடர் இயக்கத்தின் தாக்கம் எப் படிப்பட்டது என்பதை மேலோட்டமாக இல்லாமல் அடித்தளத்திற்கே (வேருக்கு) சென்றே பார்ப்பதைப் போல இருந்தது. நேர்காணல் நிறைவுற்றதும் அவரை, கழகத்தின் துணைத்தலைவர் வாசல்வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
05.09.2018,
பெரியார் திடல், சென்னை