தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட 8 சதவிகித வளர்ச்சி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் (Madras School of Economics) என்ற அமைப்பு உத்தேசிக்கப்பட்ட 9.3 சதவிகிதம் வளர்ச்சி என்பதைத் தாண்டி, 2024-2025ஆம் நிதியாண்டில் 9.69 சதவிகிதம் என்கிற மிகப் பெரிய வளர்ச்சியை, ‘திராவிட மாடல் அரசு’ சாத்தியப்படுத்தி உள்ளது. இந்த வளர்ச்சி, இந்தியாவில் மற்றெந்த மாநிலங்களிலும் காணப்படாத உச்சம் என்று சமீபத்தில் ஆய்வறிக்கைகள் வெளியாகின.
அதன் தொடர்ச்சியாக, மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பிலும் மற்ற மாநிலங்கள் எட்ட முடியாத வளர்ச்சியை, தமிழ்நாடு பதிவு செய்திருப்பதாக ‘பிசினஸ் லைன்’ ஊடகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், இதனைத் தெரிவித்துள்ள பிசினஸ் லைன் ஊடகம், “தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு 12.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் தேசிய சராசரியே 7.3 சதவிகிதமாகத்தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உணவகங்கள் துறை 14.8 சதவிகிதமும், ரியல் எஸ்டேட் துறை 13.6 சதவிகிதமும் அதிக வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்நாடு தொடாத புதிய உச்சம் இது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில், கருநாடகாவில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு 8.9 விழுக்காடாகவும், மகாராட்டிராவில் உற்பத்தி யாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு 7.8 விழுக்காடாகவும் மட்டுமே உள்ளன.
திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு உயர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சிக்கு இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த மாநிலத்தாலும் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே இப்புள்ளிவிவரங்கள் உணர்த்தும் செய்தி.
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படை யில் திராவிட மாடல் அரசின்மீது சேற்றை வாரி இறைப்பவர்கள், தங்களை அறியாமலேயே தங்கள் கைகளை கறையாக்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நாட்டு மக்கள் நாளும் – ‘திராவிட மாடல்’ அரசின் வளர்ச்சித் திட்டங்களால்் பலன் அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திராவிட மாடல் அரசின்மீது ஆதாரமில்லாமல் அவதூறுகளைப் பரப்பினால், அது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்! ‘‘குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதை’’யாகவே முடியும். வெகு மக்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் தான் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பது நினைவிருக்கட்டும்.
காலையில் பசியாறாமல் வெறும் வயிற்றோடு செல்லும் பிள்ளைகள் சமூக நீதிக்கான சரித்திர நாயகராம் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் காலையிலும் உணவு உண்டு, உற்சாகத்தோடு கல்வியில் கவனம் செலுத்தும் நிலையை தமிழ்நாடு அல்லாமல், வேறு எந்த மாநிலத்தில் காண முடியும்? தமிழ்நாட்டின் இந்தத் திட்டத்தை வெளி நாடுகளும் பின்பற்றத் தொடங்கும் அளவுக்குத் திராவிட மாடல் ஆட்சி – உண்மையான மக்கள் நலன் ஆட்சியாக மலர்ந்து மணம் வீசுகிறது – மனம் திறந்த பாராட்டுகள்!