சட்டத்தை ஆளுநர் மதிக்காததால், உச்சநீதிமன்றமே அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்ப்பையே வரலாறாக்கி விட்டது!
நமது முதலமைச்சரின் வரலாற்றுச் சாதனைக்கு சரியான எடுத்துக்காட்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, ஏப். 16 தனது அதிகார எல்லையைக் கடந்து, மாநில ஆட்சியை மதிக்காத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை எதிர்த்து ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மேற்கொண்ட வழக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்ததையும், இதற்குக் காரணமாக இருந்த முதலமைச்சரையும் பாராட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு – தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா! தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
நேற்று (15.4.2025) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் நடைபெற்ற ‘‘இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு – தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா!’’ சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையுரையாற்றினார்.
அவரது எழுச்சியுரை வருமாறு:
‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சருடைய மிகச் சிறப்பான வரலாற்றுப் பெருமைமிகு சாதனைக்கு அடிப்படையாக அமைந்தது – உச்சநீதிமன்றத் தீர்ப்பாகும். ஒரு வரலாற்றுத் தீர்ப்பு என்ற பெருமையுடைய அந்தத் தீர்ப்பைப்பற்றியும், தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் வெற்றிகளைப் பற்றியும் விளக்கிச் சொல்லக்கூடிய அருமையான, சட்டப்பூர்வமான, அறிவார்ந்த அவையினருடைய கூட்டமாக அமைந்திருக்கக் கூடிய இந்த அரங்கில் தமிழ்நாடு மூதறிஞர் குழுத் தலைவரும், வரவேற்புரையாற்றியவருமான அருமை நண்பர் டாக்டர் தேவதாஸ் அவர்களே,
நோக்கவுரையாற்றிய மேனாள் சட்டப்பேரவை செயலாளரும், தமிழ்நாடு மூதறிஞர் குழு செயலாளரு மான மானமிகு செல்வராஜ் அவர்களே,
‘வில்சன்’ அல்ல;
‘வின்’சன்: கலைஞர் பாராட்டு!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு மிக அடிப்படையான பல பணிகளை, வழக்குரைஞரணியின்மூலமாக சிறப்பாக செய்து, இந்தத் தீர்ப்பு மட்டுமல்ல – இன்னும் இதுபோன்ற சிக்கல்கள் நிறைந்த பல வழக்குகளில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து வருகின்றவரும், மூத்த வழக்குரைஞராக இருப்பவரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான தலைசிறந்த பெரியாரிஸ்டாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் என்.ஆர். இளங்கோ அவர்களே,
உச்சநீதிமன்றத்தினுடைய வரலாற்றில், இப்படி ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்ல, அவர் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். இது முதல் முறையல்ல. அவர் என்றால், அவர் மட்டுமல்ல, தி.மு.க. வழக்குரைஞரணி என்று அர்த்தம்.
ஒருமுறை கலைஞர் அவர்களோடு நாங்கள் உரை யாடிக் கொண்டிருந்தபோது, வழக்குரைஞர் வில்சன் அவர்கள் அங்கே வந்து, ஒரு வழக்கில் வெற்றி பெற்றதை சொன்னார்.
அப்போது கலைஞர் அவர்கள், ‘‘நீங்கள் வில்சன் அல்ல; வின்சன்’’ என்று சொன்னார்.
அதேபோன்று, நம்முடைய கலைஞர் அவர்கள் மறைந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்வதற்கு, இடம் தரமாட்டேன் என்று அன்றைய ஆளும் அ.தி.மு.க. அரசு சொன்னது.
இன்றைய முதலமைச்சர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். நேரிடையாக அன்றைய முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அண்ணா அவர்களுக்குப் பக்கத்தில் கலைஞர் அவர்களை அடக்கம் செய்வதற்கு, அவருடைய கையைப் பிடித்து, இடம் கேட்டார்.
அந்த நேரத்தில், கொஞ்சம்கூட ஈவு, இரக்கமின்றி, மனிதநேயமின்றி மறுத்துவிட்டார்கள்.
அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள்தான், ‘‘உடனே வழக்குப் போடுங்கள்’’ என்று சொன்னார்.
நம்முடைய தி.மு.க. வழக்குரைஞரணி, குறிப்பாக வில்சன் போன்றவர்கள் அங்கே சென்று நின்று, நீதிபதியிடம் அனுமதி பெற்று வந்தனர். அந்த நீதிபதி களைப் பாராட்டவேண்டும்.
இன்றைக்கு அண்ணாவிற்குப் பக்கத்தில், நம்முடைய கலைஞர் அவர்களுக்கு இட ஒதுக்கீடு.
இட ஒதுக்கீடு என்றாலே போரட்டம்தான்!
எனவே, இட ஒதுக்கீடு என்றாலே போராட்டம்தான். சாதாரண இட ஒதுக்கீடு அல்ல; கல்லறைக்குப் போகின்ற நேரத்தில்கூட, இட ஒதுக்கீடு போராட்டம் – அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று இருக்கின்ற இயக்கம், திராவிட இயக்கமாகும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் வாதாடி, மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்தது மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு திருப்புமுனை; ‘திராவிட மாடல்’ ஆட்சி – இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஆட்சி என்பதையும் தெளிவாக்கியுள்ளது. மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான அருமைச் சகோதரர் பி.வில்சன் அவர்களே,
இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றக்கூடிய, அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காப்பாற்றக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பு, நம்மு டைய முதலமைச்சர் அவர்களுடைய இந்த சாதனை என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டுவதற்குக் காரணமான வழக்குரைஞர்கள் – வாதாடிய மூத்த வழக்குரைஞர்களாகிய அருமை நண்பர்களே!
ஆளுநர் பதவி விலகவேண்டும் என்று சொன்னவர் ‘இந்து’ என்.ராம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன், கொஞ்சம்கூட தயங்காமல், பல பேருக்கு வேண்டிய ஒரு பொது மனிதராக, தான் இருந்தாலும்கூட, நியாயத்தை, துலாக்கோல் போன்று பிடித்து, “சுயமரியாதை உள்ள வராக இருந்தால், இந்த ஆளுநர், பதவியை விட்டு விலகவேண்டும்’’ என்று சொன்ன துணிவு, நம்முடைய ‘இந்து’ என்.ராம் அவர்களுக்குத்தான் இருந்தது.
முதலில் நாங்கள் சொன்னோம்; நாங்கள் சொல்வ தெல்லாம் சாதாரணம் என்று நினைத்துக் கொள்வார்கள். ‘இந்து’ ராம் போன்றவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு ஒரு மதிப்பு உண்டு.
அப்படிப்பட்ட துணிச்சலோடு, கருத்தை மறைக்கா மல், சொல்வதற்குத்தான் அறிவு நாணயம் என்று பெயர். அந்த அறிவு நாணயத்தோடு அவர் சொன்னார்.
ஆகவேதான், உழைத்தவர்களுக்கும், அதற்குக் காரணமானவர்களுக்கும், உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்குரைஞர்கள் திவேதி போன்றவர்களுக்கும் தமிழ்நாட்டினுடைய நன்றியை, பாராட்டை, வாழ்த்து சொல்வதற்குத்தான் இந்தக் கூட்டம்.
அதுபோலவே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு நன்றியுரை கூறவிருக்கக்கூடிய தோழர் மாணிக்கம் அவர்களே!
உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்றத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விட்டார்கள். வழக்கு நடந்தபோது என்ன சூழ்நிலை இருந்தது என்பதைப்பற்றி, நம்முடைய என்.ஆர்.இளங்கோ அவர்கள் மிக அழகாகச் சொன்னார்.
‘‘இந்த வழக்கே ஒரு வரலாறு’’ என்றார். இதுவரையில் வரலாற்றில் வழக்குகள் வந்ததுண்டு; அதைப்பற்றிய செய்திகள் வந்தது உண்டு.
வழக்கே வரலாறாகி விட்டது!
ஆனால், ஒரு வழக்கே வரலாறு ஆனதிருக்கி றதே, அதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய, முதலமைச்சருடைய ஒப்பற்ற வரலாற்றுச் சாதனையாகும்.
அவர்கள் அனைவரும் முன்மொழிந்ததை நான் வழிமொழிந்து என்னுரையை தொடங்குகின்றேன்.
இது மிக முக்கியமான காலகட்டம். இந்திய ஜனநாயகத்திற்கே சோதனை ஏற்பட்ட நேரத்தில், சட்டப்பேரவை உரிமைகளுக்கே சோதனை ஏற்பட்ட நேரத்தில், அதற்கு ஒரு விடியலைத் தேடிக் கொடுத்த பெருமை இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கே உரியதாகும்.
அந்தத் தீர்ப்பை அளித்த, அந்த அமர்வின் நீதிபதிகளான பர்திவாலா அவர்களுக்கும், மகாதேவன் அவர்களுக்கும் ஆயிரம் ஆயிரம் பாராட்டுகளை, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுவாக நமக்கெல்லாம் இங்கே அநீதிகள் நடக்கின்ற நேரத்தில், இந்திய நாட்டின் குடிமகனுக்கு இருக்கின்ற கடைசி நம்பிக்கை உச்சநீதிமன்றம்தான்.
அந்தக் கடைசி நம்பிக்கைதான் ஜனநாயகத்தைக் காப்பாற்றும்; அந்தக் கடைசி நம்பிக்கைத்தான் அரச மைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும்.
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றில் பெரிய வெற்றி என்று சொன்னால், அந்தத் தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Unprecedented என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, புதிய துணிவோடு இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி விளக்குவதுதான் மிக முக்கியமானதாகும்.
இந்த நிலையிலும்கூட, ஒன்றுமே நடக்காதது போன்று, சம்பந்தப்பட்டவர்கள் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால், அதை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? என்பதுதான் இப்போதைய கேள்வி.
இறையாண்மை மக்களிடம்தான் உள்ளது!
ஏனென்றால், மக்களிடம்தான் இறையாண்மை இருக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இரண்டு சிறப்புகள் என்னவென்றால், இதுவரை இல்லாத ஒன்றை துணிச்ச லாக எடுத்துச் சொன்னார்கள். 142 என்ற அரசமைப்புச் சட்ட விதியைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள்.
அதற்கு முன்பு பேரறிவாளன் வழக்கில், உச்சநீதி மன்றம் ‘‘ஆளுநர், மற்றவர்கள் இவ்வழக்கில் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. ஆகவே, நாங்களே விடுதலை செய்கிறோம்’’ என்று தீர்ப்பளித்தது.
பெரியார் மண்தான், இந்த சுதந்திரத்தையெல்லாம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது; ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு அதுவும் ஓர் அடையாளம்.
அரசமைப்புச் சட்ட விதி 142 அய் சுட்டிக்காட்டியி ருக்கிறார்கள்.
வழக்குரைஞர் நண்பர்கள் இங்கே சொன்னார்கள்; அருமை நண்பர் இந்து ராம் அவர்களும் சொன்னார்.
ஆர்டிக்கல் 200 இல் வெற்றி என்று.
‘‘200 இடங்களில் வெற்றி! 200 இடங்களில் வெற்றி’’ என்று ஏற்கெனவே நம்முடைய முதலமைச்சர் சொல்லி விட்டார். அதைத்தான் இலக்காக வைத்திருக்கிறார்.
அரசமைப்புச் சட்டம் 200-லும் வெற்றி! சட்டமன்றத் தேர்தலிலும் 200-லும் வெற்றி!
ஆர்ட்டிக்கல் 200-லும் வெற்றி! அடுத்து நடைபெறப் போகின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் 200-க்குத் தாண்டிய வெற்றி என்பதைத்தான் அடையாளமாகக் கொள்ளவேண்டும்.
நீதிமன்றத்திலேயே 200-இல் வெற்றி பெற்றி ருக்கின்றோம் என்றால், மக்கள் மன்றத்தில் 200 இடங்களையும் தாண்டி வெற்றி பெறுவோம்.
இப்போது இன்னொரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், அந்த வெற்றி மிகச் சுலப மாகக் கிடைக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.
ஏனென்றால், அண்ணா தி.மு.க. இப்போது அமித்ஷா தி.மு.க.வாக ஆக்கப்பட்டுவிட்டது. அடகு வைக்கப்பட்ட தி.மு.க.வாக ஆக்கப்பட்டுவிட்டது. மீட்கப்பட முடியாத அளவிற்கு அவர்கள் சிக்கிக் கொண்ட ஒன்றாக ஆகிவிட்டது.
அரசமைப்புச் சட்ட விதி 142-இன்படி, சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட முன்வடிவுகள் நடைமுறைக்கு முன்தேதியிட்டு வருகின்றன என்று நீதிபதிகளே சொன்னார்கள்.
ஏன் இந்தத் தீர்ப்பைக் கொடுக்கிறோம்? அதற்கு என்ன அடிப்படை என்பதையும் சொன்னார்கள்.
தமிழ்நாடு ஆளுநர், சண்டித்தனம் செய்துகொண்டு, வம்பு செய்துகொண்டு, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்கிறார் என்பதையும் அந்த நீதிமன்ற அமர்வு கண்டித்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெறும் அம்புதான் – எய்தவர்கள் வேறு!
நண்பர்களே, நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள். இது ஒரே ஓர் ஆளுநருடைய செயல் என்றா நாம் அலட்சியப்படுத்திவிட முடியும்?
அவர் ஓர் அம்புதான்.
எய்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
எனவே, இந்த உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு என்பது நேரிடையாக அவர்களைப் பாதிக்காமல் இருக்கலாம்; ஆனால், சுரணை உள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால், தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையே அந்தத் தீர்ப்பின் மூலமாக விடுக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியைப் பொறுத்தவரை இங்கே என்ன சூழல் என்றால், எல்லாமே கருவிகள்தான்.
மாநிலத்தில் எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறுகிறதா? அந்த மாநிலத்தில் அரசியல் கருவிகளாக ஆளுநர்கள் ஆக்கப்பட்டார்கள்.
அதனுடைய விளைவுதான், எல்லா மாநில முதல மைச்சர்களும், நம்முடைய முதலமைச்சரைப் பாராட்டக் கூடிய அளவிற்கு, வாழ்த்தக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.
எங்கெங்கெல்லாம் பா.ஜ.க.வின் எதிர்க்கட்சிகள் ஆட்சிகள் நடைபெறுகின்றனவோ, எங்கெங்கெல்லாம் இவர்களுடைய கட்சி வெற்றி பெற முடியவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் இரண்டு வைத்தியங்களை வைத்திருக்கிறார்கள்.
ஒன்று, ஆளுநர்களை அரசியல் கருவிகளாக ஆக்குவது.
மத்திய புலனாய்வுப் பிரிவு – சி.பி.அய்.யாக இருந்தாலும், அமலாக்கத் துறையாக இருந்தாலும் அதையெல்லாம் ஒன்றிய அரசு ஏவிடுகிறது. அந்த வகையறாவில் ஆளுநரும் வருகிறார்.
நாள்தோறும் இதுபோன்ற வேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் நமது முதலமைச்சர்!
இன்றைக்குக்கூட நம்முடைய முதலமைச்சர் அவர்கள், மாநில சுயாட்சித் தீர்மானத்தை சட்டப்பேரவை யில் பிரகடனப்படுத்தி இருக்கிறார்.
அதைத்தான் இந்த அறிவார்ந்த அவையினருக்கு நான் வலியுறுத்த விழைகிறேன். ஒரு பொதுநலத் தொண்டன், ஒரு பெரியார் தொண்டன் என்ற முறையில்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஓர் அருமையான சொல்லாக்கத்தை நீதிபதிகள் பயன்படுத்தி இருக்கி றார்கள். என்ன அந்த சொல்லாக்கம் என்று சொன்னால், Complete Justice என்பதுதான்.
இதுவரை Justice என்றுதான் சொல்லியிருக்கி றார்கள். 142 அய் பற்றி விளக்கிச் சொல்லுகின்ற நேரத்தில், நாங்கள் தீர்ப்பளித்துவிட்டோம்; அதைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டுப் போக முடியாது. அப்படிப் போய்விட்டால், அது எங்கள் கடமையிலிருந்து தவறியவர்களாகி விடுவோம்.
ஆகவே, இதற்கு ஒரு விடியலை உண்டாக்கவேண்டும். இதற்கு ஓர் உண்மையான தீர்வு வரவேண்டும். இதற்கு உண்மையான நியாயம் கிடைக்கவேண்டும். அந்த நியாயம் எப்படி இருக்கவேண்டும் என்றால், அந்த உண்மை எப்படி இருக்கவேண்டும் என்றால், முழு நீதி – முழு நியாயம் – சிஷீனீஜீறீமீtமீ யிustவீநீமீ என்ற வார்த்தையை நீதிபதிகள், தங்களுடைய தீர்ப்பில் அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள். இது கோடிட்டுக் காட்டப்படவேண்டியது – வாழ்த்தப்படவேண்டியதாகும்.
இதைவிட மிக முக்கியமான ஒரு பகுதியை உங்க ளுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மொத்தப் பக்கம் 414. இதை முழுவதும் படித்துவிட்டுத்தான் பேசுகிறேன். மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டுச் சொல்பவன் அல்ல.
அந்தத் தீர்ப்பில் ஒரு முக்கியமான பகுதியைச் சுட்டிக்காட்டுகிறேன்.
431 ஆவது பாரா – இந்தத் தீர்ப்பின் முக்கியமான பகுதி இது என்பது எங்களைப் போன்றவர்களுடைய பொதுநலத் தொண்டர்கள், போராளிகளுடைய கருத்தாகும்.
அவர்களோடு (பா.ஜ.க.வோடு) – புதிய கூட்டணி சேர்ந்திருக்கிறார்களே அவர்கள் (அ.தி.மு.க.) சிந்திக்க வேண்டும்.
நம்முடைய முதலமைச்சரின் பெருந்தன்மை!
நம்முடைய முதலமைச்சர் எவ்வளவு தெளிவானவர்; எவ்வளவு நடுநிலையானவர்; பாராபட்சம் பார்க்காதவர்; அரசியல் வேற்றுமைகளைப்பற்றி பொருட்படுத்தாதவர் என்பதற்கு அடையாளம், ஜெயலலிதா அவர்களின் பெயர் பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்படுவதற்கும் அனுமதி கொடுக்கவில்லை. அந்த மசோதாவும் ஆளு நரிடம் நிலுவையில் இருந்தது. அந்த மசோதாவையும் நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை நம்முடைய முதலமைச்சரையே சாரும்.
அதற்கான அனுமதியை அமித்ஷாவா வாங்கிக் கொடுத்தார்?
‘‘ஆயிரம் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், முதலமைச்சராக இருந்திருக்கின்றார் அந்த அம்மையார். இன்னொரு அரசு அதனை முன்மொழிந்தது என்பதற்காக நான் அதனை அலட்சியப்படுத்த மாட்டேன்’’ என்றார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது 2020 ஆம் ஆண்டில் என்றால், இப்போது அய்ந்தாண்டுகள் ஆகவில்லையா?
431. Considerable time has elapsed since these ten Bills were originally passed and presented to the Governor for assent. Two out of the ten Bills even date back to 2020.
It is important to keep in mind that the tenure of the State legislature is of five years and the representatives are accountable to their electorate as regards the enactment of legislations addressing the issues faced by the electorate. At the end of every five years, the elected representatives have to go back to their electorate and provide a report card, based upon which the people, in whom the ultimate sovereignty rests, cast their votes. Bills, if kept pending for long despite their passage by the State legislature, militate against this very fundamental, essential to the sustenance of a representative democracy based on direct elections.
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘431. மேற்கண்ட பத்து மசோதாக்களும் நிறைவேறி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. அவற்றுள் இரண்டு மசோதாக்கள் 2020 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்டவை. ஒரு மாநில சட்டமன்றத்தின் செயல்பாட்டுக் காலம் அய்ந்து ஆண்டுகள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. வாக்காளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தக்க பதிலளிக்கவேண்டிய கடமை மாநில சட்டமன்றப் பிரதிநிதிகளுக்கு உண்டு. அதற்கேற்றவாறு சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. ஒவ்வொரு அய்ந்தாண்டு முடிவிலும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வாக்காளப் பெருமக்களுக்குத் தங்கள் பணிகள் பற்றிய விவரங்களைத் தெரியப்படுத்தவேண்டும். அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் மக்கள் மீண்டும் வாக்களிப்பது குறித்து முடிவு செய்வார்கள். இறையாண்மை மக்களிடம் தான் உள்ளது என்பதால் அவர்களுடைய முடிவே இறுதியானது. சட்டமன்றத்திலிருந்து அனுப்பப்பட்டு விட்ட மசோதாக்கள் நீண்ட காலம் நிறுத்தப்பட்டுக் கிடந்தால், அது அடிப்படை விதி மீறலே ஆகும். தேர்தல்கள் மூலம் சட்டமன்றப் பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக அரசு அமைய இந்த விதி மீறல் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய அலட்சியப்போக்கு தேர்தல்களின் அடிப்படை நோக்கத்திற்கே எதிரானது என்றே கூறலாம்.’’
திராவிடர் கழகத்தின் கருத்து – உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பதிவாகியுள்ளது!
நண்பர்களே, இது அரசமைப்புச் சட்டம். அந்த அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே, sovereignty என்று சொல்லக்கூடிய இறையாண்மை எங்கே இருக்கிறது என்று பல கூட்டங்களில் மக்கள் மத்தியில் நாங்கள் எடுத்துச் சொன்னது, இத்தீர்ப்பில் பதிவாகியிருக்கிறது. அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி!
திராவிடர் கழகம், பிரச்சாரக் கூட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் சொன்ன கருத்துகள் அனைத்தும் இந்தத் தீர்ப்பில் பதிவாகியிருக்கின்றது. எங்களை மற்றவர்கள் இருட்டடிக்கலாம்; புறக்கணிக்க லாம். ஆனால், எங்களுடைய கருத்து இதில் பதிவாகி இருக்கிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி!
அரசமைப்புச் சட்டம் எப்படி தொடங்குகிறது? பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிக் கொடுத்த முகப்புரை என்பது சட்டத்தின் மிக முக்கியமான அடிக்கட்டுமானமாகும் கேசவானந்த் பாரதி வழக்கில் சொல்லப்பட்டுள்ளதுபோல, அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பகுதியாகும்.
இதனை, உச்சநீதிமன்றத் தீர்ப்போடு இணைத்துப் பார்க்கவேண்டும்.
நம்முடைய முதலமைச்சர் ஜனநாயகக் காவலர்.
எப்படி மாநில உரிமைகளுக்குக் காவலரோ, அதுபோன்று ஜனநாயகக் காவலர். அரசமைப்புச் சட்டத்தினுடைய மாண்பைக் காக்கின்ற காவலர் என்பதற்கு அடையாளம் இது.
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citize
JUSTICE, social, economic and political;
LIBERTY of thought, expression, belief, faith and worship;
EQUALITY of status and of opportunity;
and to promote among them all
FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
கடைசி வாசகங்கள்தான் மிக முக்கியமாகும். ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION நமக்கு நாமே வழங்கிக்கொண்ட என்றால், என்ன பொருள்? இறையாண்மை எங்கே இருக்கிறது அரசமைப்புச் சட்டத்தில் என்று சொன்னால்,
குடியரசுத் தலைவரிடம் இருக்கிறதா? கிடையாது.
பிரதமரிடம் இருக்கிறதா? கிடையாது.
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் இருக்கிறதா? கிடையாது.
பின், யாரிடம் இருக்கிறது? மக்களிடம் இருக்கிறது.
மக்கள் மத்தியில் மட்டும்தான் இருக்கிறது. எனவே, மக்கள் மத்தியில் இருக்கின்ற இறையாண்மை பாது காக்கப்படவேண்டும்.
ஆட்சியாளர் தவறும்போது, நீதியாளர் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டான தீர்ப்பாகும்.
அதற்கடுத்து நம்முடைய நண்பர் ‘இந்து’ ராம் அவர்கள் இந்தப் பகுதியை எடுத்துச் சொன்னார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 432 பாராவில்,
432. The conduct exhibited on part of the Governor, as it clearly appears from the events that have transpired even during the course of the present litigation, has been lacking in bonafides. There have been clear instances where the Governor has failed in showing due deference and respect to the judgments and directions of this Court. In such a situation, it is difficult for us to repose our trust and remand the matter to the Governor with a direction to dispose of the bills in accordance with the observations made by us in this judgment. Article 142 empowers this Court to do complete justice and in the facts of the present case, more particularly, in light of the fact that the option of granting assent to the repassed bills was the only constitutionally permissible option available with the Governor, we deem it absolutely necessary and appropriate to grant that very relief by exercising our extraordinary powers. No meaningful purpose would be served by keeping the bills, some of which have already been pending for incredulously long periods, pending for more time. Therefore, we deem the assent to have been granted.
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘432. உண்மையும், நேர்மையும் மிக்க நல்லெண்ணமே அவருக்கு இல்லாததைத்தான் ஆளுநரின் அலட்சியப் போக்கு தெளிவுபடுத்துகிறது. தற்போதைய வழக்கு சார்ந்த நிகழ்வுகள் மூலம் அவருடைய உள்நோக்கம் தெளிவாகிறது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் ஆளுநர் மதிக்கத் தவறிவிட்டது பல சந்தர்ப்பங்களில் தெளிவாகத் தெரிந்து விட்டது. நடவடிக்கைகளின் காலதாமதம் அவர் இந்த நீதிமன்றத்தை அவமதிப்பதாகவே கருத வைக்கிறது. இந்த நிலையில் இந்தத் தீர்ப்புக்கேற்ப ஆளுநரை மசோதாக்களை ஏற்கச் செய்வது எங்களுக்குச் சிரமமாக உள்ளது. அவர் சுமுகமாக முடிவெடுத்து பிரச்சினையைத் தீர்ப்பார் என்று நம்ப முடியவில்லை. முழுமையான நீதி வழங்க இந்த நீதிமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 142 அதிகாரம் வழங்கியுள்ளது. தற்போது எதிர் கொள்ளப்பட்டுள்ள வழக்கு சார்ந்த அம்சங்களையெல்லாம் பார்க்கும்போது, எங்கள் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவது தான் சரி என்று தோன்றுகிறது. மறுமுறையும் நிறைவேற்றப்பட்ட மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழி நிச்சயமாக இல்லை என்பதை அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. எனவே, அவரை இணங்கச் செய்ய எங்கள் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டியதே அவசியம்.
முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் சில மசோதாக்கள் மிக நீண்ட காலமாக உள்ளன. இந்த நிலை மேலும் நீடிப்பது அர்த்தமற்றதாகும். எந்த ஒரு நல்ல நோக்கமும் இதனால் (காலதாமதத்தால்) நிறைவேறப் போவதில்லை. காலதாமதம் இனிமேலும் தொடரக்கூடாது. எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.’’
நம்முடைய முதலமைச்சருடைய போராட்டம் சட்டப் போராட்டம்; தீர்ப்புகள், சட்டப்படி. அதுவும் எந்த சட்டப்படி? அரசமைப்புச் சட்ட விதிகளின்படி.
இதுதான் ஒரு வரலாறு. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று இல்லை.
சட்டத்தை ஆளுநர் மதிக்காததால், உச்சநீதிமன்றம் அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டிய நிலை!
அடுத்ததாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 433 ஆவது பாராவில்,
433. Constitutional authorities are creatures of the Constitution and are bound by the limitations prescribed by it. No authority, in exercise of its powers, or to put it precisely, in discharge of its duties, must attempt to breach the constitutional firewall. The office of the Governor is no exception to this supreme command. Whenever there is an attempt by any authority to move beyond the bounds of the Constitution, this Court has been entrusted with the responsibility to act as the Sentinel on the qui vive and bring back the authority within the constitutionally permissible limits by exercising judicial review. We are not exercising our power under Article 142 in a casual manner, or without giving a thought to it. On the contrary, it is only after deepest of deliberations, and having reached at the firm conclusion that the actions of the Governor – first in exhibiting prolonged inaction over the bills; secondly in declaring a simplicter withholding of assent and returning the bills without a message; and thirdly in reserving the bills for the President in the second round – were all in clear violation of the procedure envisaged under the Constitution, that we have decided to declare the deeming of assent to the ten bills, considering it to be our constitutionally bounden duty. In our view, that is the only way to ensure that complete justice is done with the parties without any delay, and without possibility of any further delay due to any inaction on the part of the Governor, or lack of deference on his part to this judgment.
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘433. அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள எல்லைகளை மீறும் அதிகாரம் எவருக்கும் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் விதிகளை மீறி செயல்பட எவரும் முயலவும் கூடாது. இந்தக் கட்டுப்பாட்டிற்கு ஆளுனரின் அலுவலகமும் உட்பட்டே ஆகவேண்டும். அவருக்கு எத்தகைய விதிவிலக்கும் இல்லை. விதிமீறல்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் இந்த நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தக் கடமையும், பொறுப்பும் அதற்கு உள்ளது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 142 இன் படி மிகவும் கவனமாகவே நாங்கள் எங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளோம். ஆளுநரின் அலட்சியப்போக்கு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே எல்லா விதத்திலும் உள்ளதால், குறிப்பிட்ட பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவே நாங்கள் முடிவு செய்கிறோம். அரசமைப்புச் சட்டப்படியே எங்கள் கடமையை நிறைவேற்றியுள்ளோம். நீதியை முழுமையாக நிலைநாட்ட இது ஒன்றே வழி என்பது எங்கள் நம்பிக்கை. ஆளுநரின் அலட்சியப் போக்கால் மேலும் காலதாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். எனவே பத்து மசோ தாக்களும் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டதாவே கருதப்படவேண்டும்.’’
எனவே, தமிழ்நாடு ஆளுநர், ராஜ்பவனுடைய மரியாதையை மட்டும் குறைக்கவில்லை; ஆளுநர் பதவியின் மரியாதையை மட்டும் குறைக்கவில்லை. குடியரசுத் தலைவருடைய மரியாதையையும் சேர்த்துக் குறைத்திருக்கின்றார். இந்தக் குற்றத்திற்காக இவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும். அரசமைப்புச் சட்ட விதிமுறைகளை மீறியது; அதனைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடுவது போன்று நடந்துகொண்டிருக்கிறார்.
எனவே நண்பர்களே, உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது நம்முடைய உரிமைகளைப் பாதுகாக்கின்ற தீர்ப்பு. அந்த உரிமைகளுக்கு யார் எதிராக இருக்கிறாரோ, அவர்கள் இன்னமும் பதவியில் நீடித்துக் கொண்டிருக்கிறார். இன்னமும் அவர் எதிர்க்கட்சித் தலைவரைவிட மிக மோசமாக நடந்துகொள்கிறார்.
தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தபோது நடந்தது என்ன?
அரசமைப்புச் சட்டத்தின் 163 பிரிவின்படி, ஆளுநர் என்பவர் மாநில அரசாங்கத்தின் ஒரு பகுதி தான். அதை அவர் மதிக்கவேயில்லை. சட்டப்பேரவையில் இதுவரையில் எப்படி நடந்துகொண்டிருக்கின்றார்? எதிர்க்கட்சித் தலைவர்கூட இப்படி நடந்துகொண்டதில்லை.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் படிக்கும்போது, ஆளுநர் வெளியேறியது உண்டா?
வழக்கமாக எதிர்க்கட்சியினர்தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால், ஓர் ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
அதையும்கூட அந்த நேரத்தில், பொறுமையின் உச்சக்கட்டமான நம்முடைய முதலமைச்சர் பதற்றப்படா மல், அழகாக சமாளித்தார் பாருங்கள், அது ஜனநாயக வரலாற்றில் இடம்பெறவேண்டிய மிக முக்கியமான நிகழ்வாகும்.
இதுவே பின்னாளில், முன்னுதாரணம் ஆகும்.
தந்தை பெரியார் இறந்தவுடன், ‘‘அவரது உடலடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறவேண்டும்’’ என்று முதலமைச்சராக இருந்த கலைஞர் சொன்னார்.
அப்போது தலைமைச் செயலாளர், சபாநாயகர் அவர்கள், முதலமைச்சர் கலைஞரிடம், ‘‘அப்படி அரசு மரியாதை கொடுத்தால், இதற்கு முன்மாதிரி இல்லை என்பதால், உங்கள் ஆட்சிக்கு சிக்கல் வரும்’’ என்றார்.
அதற்குக் கலைஞர் அவர்கள், ‘‘இதுவே ஒரு முன்மாதிரியாகட்டும்’’ என்றார்.
காந்தியார் என்ன பதவியில் இருந்தார்? அவர் எந்தப் பதவியிலும் இல்லை.
‘‘காந்தியார் மறைந்தபோது, அவருக்கு அரசு மரியாதை கொடுத்தார்கள் அல்லவா! அதேபோன்று, பெரியாருக்கும் அரசு மரியாதை கொடுக்கலாம். முன்மாதிரி இல்லை என்கிறீர்கள்; முன்னுதாரணமாக இதுவே இருக்கட்டும்’’ என்றார்.
அதுதான் பகுத்தறிவு – அதுதான் ஈரோட்டுப் பள்ளி – அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை.
அதேபோன்று, இன்றைய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாக, அமைதியாக, பதற்றப்படாமல், அவருக்கே உரிய நிதானத்தோடு, அதேநேரத்தில் ஆழமான உறுதியோடு அந்த நிகழ்வைக் கையாண்டார்.
இது அறிவார்ந்த அரங்கம். இவர்களையெல்லாம் மேடையில் வைத்துக்கொண்டு இதைச் சொல்வதற்கு யோசிக்கின்றேன்.
ஏனென்றால், இவர்கள் எல்லாம் நீதிமன்றத்திற்குச் செல்பவர்கள்; நான் வீதிமன்றத்திற்குச் செல்பவன்.
கல்லூரிக்குள் நுழைந்து மதக் கலவரத்தை உருவாக்க ஓர் ஆளுநர் முயற்சிக்கலாமா?
நாகரிகம் வேண்டும் அல்லவா! உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, ஆளுநராக இருக்கக்கூடியவர் இதற்குப் பிறகும் கல்லூரிக்குள் நுழையலாமா?
திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்குள் சென்று, ‘‘ஜெய் சிறீராம்’’ என்று மூன்று முறை கோஷம் எழுப்பி, மாணவர்களையும் கோஷம் போடச் சொல்லியிருக்கிறார்.
‘‘ஜெய் சிறீராம்’’ என்று சொல்லி ‘‘சிறீராம்’’ ஜெயிப்பது இருக்கட்டும்; முதலில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? என்று பாருங்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன், இராமேசு வரத்திற்கு வந்த பிரதமர் இந்த கோஷத்தைத்தானே கொடுத்தார். அந்தத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களிலும் எங்களுடைய முதலமைச்சர் வெற்றி பெற்றார்.
ஆளுநர் சென்ற அந்தக் கல்லூரி தனியார் கல்லூரியில் ‘‘ஜெய் சிறீராம்’’ கோஷம் போடச் சொன்னார். அங்கே இருக்கின்ற இஸ்லாமிய நண்பர்கள், எங்கள் மதக் கோஷம் போடவேண்டும் என்று சொன்னால், கிறித்தவ நண்பர்கள், எங்கள் மதக் கோஷம் போடவேண்டும் என்று சொன்னால், அல்லது மதத்தை ஏற்காத எங்களைப் போன்றவர்கள் ‘‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை’’ என்று கோஷம் போடவேண்டும் என்று சொன்னால், கலவரம் உருவாகுமா, இல்லையா? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.
மதக் கலவரத்தை உருவாக்குவதற்காகத்தானே இப்படி நடந்துகொண்டிருக்கின்றார் ஆளுநர். அதுவும் அந்தக் கல்லூரி, திருப்பரங்குன்றத்தில் உள்ளது. ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தை உருவாக்கவேண்டும் என்பதில், பா.ஜ.க.வினர் தோற்றுப் போனார்கள். அவர்களால் முடியவில்லை என்பதால், அந்தப் பணியை ஆளுநராக இருக்கக்கூடிய, நம்முடைய அரசுப் பணத்தை சம்பளமாகப் பெறுபவர் செய்ய முயல்கிறார்.
ஆகவே, இவ்வளவு மோசமான ஓர் ஆளுநர், தன்மானத்தை இழந்த ஒரு பிறவி வேறு யாரும் கிடையவே கிடையாது. அதற்காக நாங்களெல்லாம் வெட்கப்படுகின்றோம். அதுமட்டுமல்ல, ஆளுநர் பதவிக்கே அவமானத்தை உண்டாக்கிவிட்டார். ஆளுநர் பதவியின் மாண்பையே குலைத்துவிட்டார்.
நீங்கள் எல்லாம் அறிவார்ந்த மக்கள்; இங்கே பேராசிரி யர்கள், வழக்குரைஞர்கள், ஆய்வாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பலதரப்பட்ட ஆய்வறிஞர்கள் இருக்கி றீர்கள். இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒரு தீர்மானத்தை வடிக்கவேண்டும்.
நேற்றுகூட இந்த ஆளுநர் சொல்கிறார், ‘‘மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா?’’ என்று.
மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதால், கல்வி பயிலுகின்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத் தொகைக் கொடுப்பதால், மகளிர் மத்தியில், மாணாக்கர் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்பதை நேரில் போய் தெரிந்துகொள்ளட்டும்!
இங்கே உரையாற்றிய அத்துணை தோழர்களுக்கும் நன்றி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரையாற்றினார்.