சென்னை, ஏப்.16- தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் ஏற்பாட்டில், “இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு – தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா – சிறப்புக் கூட்டம்” 15.4.2025 அன்று மாலை 6.45 மணியளவில், சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மூதறிஞர் குழுத் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு மூதறிஞர் குழு செயலாளர் மா.செல்வராஜ் நோக்க உரையாற்றினார்.
இச்சிறப்புக் கூட்டத்தில், மாநில தி.மு.க. வழக்குரைஞரணிச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, தலைமை சட்ட ஆலோசகரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆகியோரது சட்ட நுணுக்கங்கள் பற்றிய விளக்கங்களைத் தொடர்ந்து இந்து வெளியீட்டு குழுமத்தின் இயக்குநர் என்.ராம் சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை உரையாற்றினார்.
சிறப்புரையாற்றிய இந்து வெளியீட்டுக் குழுமத்தின் இயக்குநர் என்.ராம் அவர்களுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் புத்தகம் வழங்கினார்.
மூத்த வழக்குரைஞர்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோருக்கு தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் துணைத் தலைவர் மாவட்ட நீதிபதி (ஓய்வு) பரஞ்சோதி, தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் பொருளாளர் முனைவர் த.கு.திவாகரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்துப் புத்தகம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். வழக்குரைஞர்கள், சட்டக் கல்வி பயிலுவோர், கல்வியாளர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் அரங்கம் நிரம்ப இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
பங்கேற்றோர்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் சு.குமார தேவன், மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், ஆடிட்டர் இராமச்சந்திரன், ஆர்.சாமிநாதன், மாநில கழக இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், பு.எல்லப்பன், பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், வேண்மாள் நன்னன், பசும்பொன், பேராசிரியர் நம்.சீனிவாசன், ஆர்.டி.வீரபத்திரன், பி.சி.செயராமன், கி.இராமலிங்கம், பூவை.தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.சேகர், சி.பாசுகர், திருவள்ளூர் ஸ்டாலின், கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, சீ.இலட்சுமிபதி, ச.மோகன்ராசு, த.பர்தின், ந.கார்த்திக், செங்கை சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக தமிழ்நாடு மூதறிஞர் குழு செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.மாணிக்கம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
வழக்குரைஞர்
என்.ஆர்.இளங்கோ எம்.பி.
என்.ஆர்.இளங்கோ எம்.பி.
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ தனது உரையில் குறிப்பிட்டதாவது:
அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மாநில உரிமை பற்றியதுதான். மாநிலங்களின் உரிமையை பாதுகாக்கின்ற வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் எடுத்த முன் முயற்சிதான் முழுக் காரணமாகும்.
மாநில உரிமைகள் பற்றிய ஓர் ஆய்வாக தீர்ப்பு வெளிவந்துள்ளது. 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் தொடங்கி பின்னர் வழங்கப்பட்ட மாநில உரிமைகள் பற்றிய பல்வேறு தீர்ப்புகளின் ஆய்வாவணமாக இருக்கிறது – அண்மையில் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் வழங்கியுள்ள இத்தீர்ப்பு.
நமது அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி (Federal Policy) என்பதான சொல் நேரடியாக இடம் பெறாவிட்டாலும், அத்தகைய ஆட்சி முறையானது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றாக உச்சநீதிமன்றம் கருதியுள்ளது இந்தத் தீர்ப்பின் வழியாக.
சட்டப் பேரறிஞர் தாமஸ் ஃபுல்லார் கூறுவார்.
‘Be your ever so high. the law is above you.’
(உங்களது மிகப் பெரிய நிலையிலும், உங்களுக்கு மேலானதாக சட்டம் இருந்திடும்)
‘கருத்து மோதலான சமயங்களில் மாநில ஆளுநர் பொதுக் கருத்தும், தீர்வும் வரத்தக்க வகையில் ஒரு முன்னோடியாக கடமை ஆற்ற வேண்டும். தம்முடைய வருங்கால நோக்கு, அறிவாற்றல் திறனால், நிலைமைகள் செயல்படாத நிலைக்கு மாறி விடாமல் அக்கடமையை ஆற்றிட வேண்டும். (அரசு) செயல்பாட்டிற்கு ஆளுநர் ஒரு கிரியா ஊக்கி போல செயல்பட வேண்டும்; நடைபெற வேண்டியதை தடுப்பவராக இருக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது. ஆளுநரின் செயல் அனைத்தும், தான் வகிக்கின்ற அரசமைப்புச் சட்டப் பதவியின் கண்ணியத்தை மனதிற் கொண்டு துணைபுரியும் வகையில் அமைந்திட வேண்டும் எனவும் தீர்ப்பு கூறுகிறது.
அரசமைப்புச் சட்டமானது ஆட்சிப் பொறுப்பின் பல நிலையில் உள்ளவர்கள் பதவி ஏற்கும் பொழுது எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழிகளைக் கூறுகிறது. ஆனால் மாநில ஆளுநராக பதவி ஏற்றிடும் உறுதி மொழியில் மட்டும் மாநிலத்தின் மக்கள் நலம் சார்ந்த பணிகளை உணர்ந்து கடமை ஆற்றுவேன் எனக் கூறுகிறது. அத்தகைய கடமையைச் செய்திட தமிழ்நாடு ஆளுநர் தவறிவிட்டார். அரசமைப்புச் சட்டத்தின் கருவியாக உள்ள ஆளுநர் தடைக்கல்லாக இருக்கக் கூடாது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய பின் தி.மு.க. வழக்குரைஞர் அணி அதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தி வந்தது. அதன் முதல் கூட்டம் சென்னை – பெரியார் திடலில்தான் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களும் கலந்து கொண்டு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை எதிர்த்தும், கண்டித்தும் உரையாற்றினார்.
நமது ஆட்சி முறையில் மூன்று தூண்களாக விளங்கிடும் ஆட்சிமன்றம் (Executive), சட்டமன்றம் (Legislature) மற்றும் நீதிமன்றம் (Judiciary) ஆகிய மூன்றின் அதிகாரம் தனித்தனியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் கடந்த காலங்களில் நீதிமன்ற மாண்பு, சட்டமன்ற மாண்பு, ஆட்சிமன்ற மாண்புகளை மதித்தே வந்துள்ளது. அந்த நிலையில் உச்சநீதிமன்றமானது அரசமைப்புச் சட்ட விதிகள் 200 & 201 ஆகிய இரண்டிற்கும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரை இல்லாத காலவரையினை, ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் எடுத்துக் கூறி சட்டமன்ற மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்புக் கூறியுள்ளது ஒரு மாபெரும், வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற நிகழ்வாக – உத்தரவாக அமைந்து விட்டது. இத்தகைய வெற்றிக்கு முழு முதல் ஆளுமையாக இருந்த தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் தளபதி அவர்களுக்குப் பாராட்டைத் தெரிவித்து தி.மு.க. வழக்குரைஞர் அணி இந்த வெற்றிக்கு உழைத்திட வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி.
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் உரையாற்றும் பொழுது குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியார் நீதிக்கட்சித் தலைவராக மாநில உரிமை பற்றிப் பேசினார். அறிஞர் அண்ணா, “ஆட்டுக்குத் தாடி தேவையில்லை; ஆட்சிக்கு ஆளுநர் தேவையில்லை” என்றார். முத்தமிழறிஞர் கலைஞர் ஒன்றிய – மாநில உரிமைகள் பற்றிய ஆய்வுக்கு நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் குழுவை அமைத்து அறிக்கை பெற்றார். அந்த அறிக்கை ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது.
ஆளுநருக்கென்று தன்னிச்சையாக செயலாற்றும் அதிகாரங்கள் இல்லை. சட்ட அதிகாரம் வரம்பிற்கு உட்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களான – முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் உதவியின் – அறிவுரையின் படித்தான், செயல்பட முடியும்.
ஏன் வழக்கு?
தி.மு.க. ஆட்சியில் 2021க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட அரசு பல்கலைக் கழகங்கள் பற்றிய 10 மசோதாக்கள்மீது (அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் உட்பட) ஆளுநர் சட்டப்படி செய்திட வேண்டியதை செய்திடாமல் தானடித்த மூப்பாக நிறுத்தி வைத்திருந்தார். அதனை எதிர்த்துத்தான் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் எங்களது வேண்டுகோளை மனுவாக அளித்து வாதிட்டோம். ஆளுநர் சார்பாக வாதாட அட்டர்னி ஜெனரல் இருந்தார். நியாயமான முறையீடுகளை நிதானமாக நாங்கள் உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்தோம். எதிர் வழக்குரைஞர்கள் அப்படி வாதிடவில்லை. உண்மைக்கு மாறானவற்றை செய்திகளாகக் கூறி வாதிட்டனர். ஒரு கட்டத்தில் “ஆளுநர் மசோதாக்களை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பிடவில்லை. எனவே சட்டமன்றம் ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்திட வாய்ப்பில்லை; மசோதாக்கள் ஆளுநரிடம் தான் உள்ளன” என்பதாகக் கூறினர். “ஆம், உண்மையாகத்தான் திருப்பி அனுப்பினார். அதில் ஆளுநரின் எண்ணம் பதிவாகி உள்ளது” என நாங்கள் கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு காலவரையறைகளை நிர்ணயம் செய்தது.
தமிழ்நாடு ஆளுநர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் தலைமையில் வடிவம் பெற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தை முழுமையடையாதது (Indian Constitution is incomplete) என குறிப்பிட்டார். தி.மு.க. வழக்கு நடத்தி இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையானதுதான் (Indian Constitution is complete) என வாதிட்டு நியாயமான தீர்ப்பினைப் பெற்றுள்ளோம்.
கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு ஆளுநரின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் எதிர்த்து தீர்ப்புத் தந்த வழக்குளைச் சுட்டிக் காட்டியும், மாநில ஆளுநரின் அதிகாரம் எப்படிப்பட்டது என பிற மாநிலங்கள் தொடுத்த வழக்குகளிலும் அளிக்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டியும் நமது வழக்கில் உச்சநீதிமன்றம் தொகுத்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கில் 10 மசோதா குறித்து ஆளுநர் எப்படியெல்லாம் தடைக் கல்லாக இருந்தார் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டி, ஆளுநருக்கு அறிவுரை கூறுவதை விட, 10 மசோதாக்கள் மீது உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிடக் கோரினோம். அனைத்து வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பின்னர் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் (deemed to be assented) கூறி தீர்ப்பு வழங்கியது.
இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட ஒப்புதல் என்பது இதுவரை நடைபெற்றதில்லை. எனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. வழக்கு ஒரு வரலாறு. எங்களுக்கு வாதிட்டு வெற்றி கிடைத்திட வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘இந்து’ என்.ராம்
நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்து வெளியீட்டுக் குழுமத்தின் இயக்குநர் ‘இந்து’ என்.ராம் குறிப்பிட்டதாவது:
தமிழ்நாடு அரசு பெரிய சட்டப் போராட்டமே நடத்தியுள்ளது. புதுப் புது விசயங்களை சட்டத்தில் தேடிக் கண்டுபிடித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கினை மாநில அரசு நடத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணிவான, தெளிவான, கொள்கை சார்ந்த நிலைப்பாட்டை பறைசாற்று வதாக வழக்கினை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ எனும் பொருளில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எழுதிய கட்டுரையினை ஆங்கில நாளேடான ‘தி இந்து’ ஏட்டின் ஆசிரியராக இருந்த பொழுது நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.
கலைஞர் அவர்களின் கார்பன் நகல் அல்ல மு.க.ஸ்டாலின் அவர்கள். ஸ்டாலினின் ஸ்டைலே தனிதான். மென்மையாகப் பேசி கருத்து எதிர்நிலையானவற்றை உரிய தருணத்தில் அழுத்தமாக நேர்கொண்டு வெற்றி காண்பதுதான் (Speak softly with a strike). கடந்த காலங்களில் பல நேரங்களில் (காஷ்மீர் 370 – பிரிவு நீக்கம், குடிமக்கள் திருத்தச் சட்டம்) உச்சநீதிமன்றமானது ஆட்சிமன்ற நீதி அவையாக (Executive Court) செயல்பட்டதாக விமர்சித்து இருக்கிறோம்.
10 மதோதாக்களுக்கு, நீதிமன்றமே ‘ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்’ (deemed to have assented) என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள தற்போதைய நிலையில் அது executive court அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது. மாநில உரிமையைக் காப்பாற்றிய வகையில் செயல்படும் நீதி அவைதான்; நீதிமன்றம்தான்.
மூன்று வழிமுறைகள்
அரசமைப்புச் சட்டத்தில் மாநில ஆளுநர் சட்டமன்ற மசோதாக்கள் மீது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மூன்று வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் மூன்று வழிமுறைகளையும் ஒதுக்கிவிட்டு சட்டத்தில் இல்லாத நான்காவது வழிமுறையினைக் கடைப்பிடித்துள்ளார் என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
ஒரு மாநில ஆளுநர் உண்மையாக செயல்பட வேண்டும். நேர்மையினைக் கடைப்பிடிக்க வேண்டும். தவறான நிலைப்பாட்டை எடுத்திடல் கூடாது என அடுக்கடுக்காக ஆதாரங்களை தமிழ்நாடு அரசு சார்பாக நீதிமன்றத்தில் வைத்து, இப்படிப்பட்ட ஆளுநர் ஒப்புதல் அளிக்க முன் வருவாரா எனும் நம்பிக்கையின்மையை அரசு சார்பாக வெளிப்படுத்திய நிலையில், அபூர்வமாக, தக்க சமயத்தில் உச்சநீதிமன்றத்தின் பயன்பாட்டிற்கு உள்ள அரசமைப்புச் சட்டத்தின் விதி 142இன்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது மாபெரும் சாதனை. வழங்கப்பட்ட தீர்ப்பு சட்டச் செறிவு மிக்கதாக, நிறைந்ததாக உள்ளது.
சட்டமேதை அம்பேத்கர், கூற்றிற்கு இணங்க, நல்ல அரசமைப்புச் சட்டத்தினையும் ஒரு மோசமான ஆட்சிக் கும்பல் தவறாகக் கடைப்பிடிக்க நேரிடும் என்பது மெய்ப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் அறம் (Constitutional morality) காப்பாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெற்றுள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் – இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கு மட்டுமல்ல; பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கும் மாநில உரிமைகளைப் பெற்றுத் தரவல்லது. அனைவரும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
தொகுதிக் குறைப்பின் மூலம் தண்டிப்பது
நாடாளுமன்றத் தொகுதி வரையறை குறித்து சிறப்பாகச் செயல்படும் தென் மாநிலங்கள் பாதிப்படைந்திடும் நிலையில் அந்த மாநில முதலமைச்சர்கள் பலரையும், வட மாநிலத்தில் சிலரையும் வரவழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டம் நடத்தி உரிமைப் போரினை தொடங்கியுள்ளார். சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களை – மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியுள்ள மாநிலங்களை தொகுதிக் குறைப்பின் மூலம் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?
தி.மு.க. அரசு முன்னெடுத்து வரும் மாநிலங்களுக்கான உரிமைப் போரில் பெற்ற வெற்றிக்கும், பெறப்போகும் வெற்றிக்கும் எமது பாராட்டுகள்!
இவ்வாறு அவர் உரையாற்றினார்.