பக்தி வந்தால் புத்தி போகும் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்!
டில்லியில் ஒரு கல்லூரி முதல்வர் சொல்வதை – செய்வதைப் பாருங்கள்! பாருங்கள்!!
மாட்டு மூத்திரத்தைக் குடியுங்கள் என்று டாக்டரேட் பட்டம் பெற்ற அய்.அய்.டி. இயக்குநர் கூறவில்லையா?
மூடத்தனத்தற்கு விஞ்ஞான முலாம் பூசும் இத்தகையவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் – மக்கள் விரோதிகள்! இன்னும் சொல்லப் போனால் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள்.
காலில் மிதித்தால் சாணி அதையே பிடித்து வைத்து அருகம் புல்லைச் சொருகினால் சாமி.
இந்த மட சாம்பிராணிகளை என்னென்று சொல்வதோ!
டில்லி பல்கலைகக் கழகத்தின் கீழ் இயங்கும் ராணி லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பிரத்யூஸ் வத்சலா, கோடை வெயிலில் இருந்து பாதுகாக்கவும், குளுமையான சூழல் நிலவவும். மாணவர்களின் அறிவுத்திறன் வளரவும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும், அனைத்து வகுப்பறையிலும் பசுவின் சாணியை சுவரில் பூச உத்தரவிட்டதோடு அவரே பூசியும் காண்பிக்கிறார்.
இதற்காக அரியானா மற்றும் டில்லி புறநகரில் இருந்து ரூ1.4 லட்சத்திற்கு 13 டிராக்டர் டிராலிகளில் சாணியை அள்ளிக்கொண்டு வந்து டில்லி பல்கலைக் கழக வளாகத்தில் கொட்டி உள்ளனர்.
பல்கலைக்கழக வளாகம் முழுவதும் ஈ மொய்த்தும் சாணி நாற்றமெடுத்தும் வருவதால் சில மாணவர்களுக்கு உடல் உபாதைகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சாணி என்பது மாட்டின் கழிவுப் பொருள். அதில் கிருமிகள் இருக்குமே தவிர, மக்களுக்கு நலன் தருவது வேறு எதுவாக இருக்க முடியும்?
மாட்டுச் சாணிபற்றி அறிவியல் ஆய்வு என்ன சொல்லுகிறது?
இதே ஆதாரம் பேசுகிறது.
பசு சாணியில் E. coli, Salmonella போன்ற நோய்க்கிருமிகள் உண்டு. தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்படலாம்.
பசு சாணியை திறந்தவெளியில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், மண்ணையும், நீரையும் மாசுபடுத்தும். இதில் உள்ள மீத்தேன் சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கும்
பசு சாணியின் வாசனை பலருக்குப் பிடிக்காது, இது சுற்றியுள்ளவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும்.
பசு சாணியை நேரடியாக பயிர்களுக்கு பயன்படுத்தினால், அதிக நைட்ரஜன் இருப்பதால் பயிர்கள் எரிந்து பாதிக்கப்படலாம்.
சாணியில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் இருக்கின்றன. அவை தண்ணீரின் மூலம் பரவி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
உணவுக்குழாய் பாதிப்பு: சாணியை கையாளும் போது, கைகள் அல்லது பிற பாகங்கள் மூலம் பாக்டீரியாக்கள் நம் உடலுக்குள் சென்று உணவுக்குழாயைப் பாதிக்கும். இதனால் மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பு, செரிமான உறுப்புகள் சரிவரபணிகளைச் செய்யாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
சுகாதாரம் இல்லாத சூழ்நிலை: திறந்த வெளியில் சாணியைக் கொட்டும் போது அது காற்று மற்றும் நீரின் மூலம் பரவி, சுற்றுப்புறத்தில் சுகாதாரம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.
நோய்த்தொற்று: சாணியில் இருக்கும் நுண்ணு யிர்கள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்களைப் பரவ வழிவகுக்கும்.
E.coli தொற்று: பசு சாணத்தில் E..coli பாக்டீரியா இருக்கும். இது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
சால்மோனெல்லா தொற்று: சால்மோனெல்லா பாக்டீரியா சாணத்தில் இருக்கலாம், இது காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.
லெப்டோஸ்பைரோசிஸ்: பசு சாணம் அல்லது சிறுநீர் மூலம் பரவும் இந்த பாக்டீரியா தொற்று, காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் கல்லீரல் அல்லது சிறுநீர் பாதிப்பை ஏற்படுத்தும்; தோல் நோய் தேமல் மற்றும் தொழு நோய் வரை தொற்றும் அபாயம் உள்ளது
கிரிப்டோஸ்போரிடியோசிஸ்: இது ஒரு புரோட்டோசோவான் ஒட்டுண்ணி மூலம் ஏற்படும் தொற்று, சாணம் மூலம் பரவி வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பை உண்டாக்கும்.
ஒவ்வாமை மற்றும் சுவாச பிரச்சினைகள்: சாணத்தில் உள்ள தூசு அல்லது பூஞ்சைகள் சிலருக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா அல்லது சுவாசக் கோளாறுகளைத் தூண்டலாம்.
போதுமா ஆதாரம்? படித்த முட்டாள்கள் திருந்துவார்களா?
ஒரு கல்லூரி முதல்வர் ரூ.1.4 லட்சத்துக்கு 13 டிராக்டர் டிராலிகளில் சாணியை அள்ளிக் கொண்டு வந்து கொட்டி, இந்த வேலையைச் செய்கிறார் என்றால், நம் நாட்டுப் படிப்பின் யோக்கியதை எந்தத் தரத்தில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பிஜேபி சாமியார் ஆட்சி புரியும் உத்தரப்பிரதேசத்தில் சாலைகளில் திரியும் மாடுகள் இரவு நேரத்தில் பள்ளிக்கூட வளாகத்தில் கட்டப்படுகின்றன.
காலையில் பள்ளி வரும் மாணவர்களின் நிலை என்ன? மாட்டுக்குக் கொடுக்கும் மரியாதைகூட மனிதனுக்குக் கிடையாது – பிஜேபி ஆட்சியில்! வெட்கக்கேடு!