முந்தைய ‘வாழ்வியல் சிந்தனையில்’ முன்னுரை போல் ‘அந்தி மழை’ மாத ஏட்டில் வந்துள்ள சைபர் குற்றங்கள் பற்றிய கட்டுரை தொகுதியில் ஒன்றைக் குறிப்பிட்டுக் காட்டினேன்.
இந்த ‘வாழ்வியல் சிந்தனையில்…’ இதோ மற்றொரு முக்கியமான தகவல் களஞ்சியம் (‘அந்தி மழை’ ஏட்டில் வந்துள்ளது). மிகவும் அலட்சியப்படுத்த முடியாத நம் அன்றாட வாழ்விற்குப் பாதுகாப்புக்கானது!
‘தமிழ்நாட்டில் நடக்கும் டாப் (Top) 10 சைபர் கிரைம்கள்!’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அனைவரது கவனத் திற்குரிய அரிய, அறிய வேண்டிய செய்திகளான அவற்றை எச்சரிக்கைகளாகக் கொண்டு நமது வாழ்க்கையை செப்பனிப்பட்டுக் கொள்வது – அவசர அவசியமாகும்!
இதோ அக்கட்டுரை – படியுங்கள். பாடம் பெறுங்கள்.’
‘‘தமிழகத்தில் நடக்கும், ‘டாப் -10’ சைபர் கிரைம் குற்றங்களில், மிரட்டி பணம் பறித்தல், ஆள்மாறாட்டம் செய்து பேசுதல், ஸ்மார்ட் போன்களுக்கு குறுஞ்செய்தி, ‘இ – மெயில்’ அனுப்பி மோசடி செய்வது அதிகளவில் நடைபெறுகிறது. என்னென்ன விதமான மோசடிப் புகார்களை அதிகமாக எதிர்கொள்கிறீர்கள் என்று சைபர் கிரைம் ஆய்வாளர் எஸ்.வி.சுஜாதாவிடம் கேட்டோம். அவர் கொடுத்த பட்டியல்:
டிஜிட்டல் அரெஸ்ட்
சட்டச் செயலாக்க அமைப்புகளிருந்து பேசுவதாகச் சொல்லி நம்மைத் தொடர்பு கொள்வார்கள். சர்வதேச கொரியர் கம்பெனி ஒன்றின் மூலமாக குற்றச்செயலில் நாம் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுவார்கள். அடுத்து நம் வாட்ஸ்அப்பிற்கு முதல் தகவல் அறிக்கையின் நகலை அனுப்புவார்கள். இது அப்படியே காவல் துறை அனுப்புவது போன்றே இருக்கும். பிறகு, ஸ்கைப்பில் கால் பண்ண சொல்லுவார்கள். இது பெரும்பாலும் வங்கியில் அதிகம் பணம் வைத்திருக்கும் முதியவர்கள், நிரந்தர வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள், தொழில் செய்பவர்களை குறிவைத்துத்தான் நடக்கிறது.
“நாங்கள் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் பண்ணியிருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நேரத்தில் காவல் துறை உங்கள் வீட்டுக்கு வரும். அதுவரை எங்கள் காவல் துறையினர் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.” என காமிரா முன் இருக்கச் சொல்வார்கள். பலமணி நேரம் அப்படியே அவர்கள் அறைக்குள் காமிரா முன் இருக்கவேண்டும். பின்னர் நம்முடைய பேங்க் ஸ்டேண்மெண்டை கேட்பார்கள். அதில் எவ்வளவு தொகை உள்ளது என பார்த்துவிட்டு, அதை அனுப்ப சொல்வார்கள். இந்த தொகையை விசாரணையை முடித்துவிட்டு மீண்டும் அனுப்புகிறோம் என்பார்கள். எல்லாம் சட்டரீதியாக நடப்பதுபோலவே இருக்கும்.
பணம் அனுப்புவதற்கு அவர்கள் தரும் வங்கி கணக்கு சட்டச் செயலாக்க அமைப்புகளுடையதாக இருக்காது. சந்தேகப்பட்டு கேள்விகேட்டால், இது ஆர்.பி.அய்.க்குள் வராது என்பார்கள். எந்தளவுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு நம்ப வைப்பார்கள். அவர்களின் இந்த விசாரணைக்கு நாம் ஒத்துழைக்கவில்லை என்றால், குடும்பத்துடன் நாம் கைது செய்யப்படுவோம் என மிரட்டுவார்கள். ஏராளமான புகார்கள் இது தொடர்பாக உள்ளன. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களே இதில் ஏமாந்து சிக்கிக்கொள்கிறார்கள்.
கூரியர் அழைப்பு
மேலே சொன்னது போல்தான் இதுவும் நாங்கள் கூரியரிலிருந்து பேசுகிறோம். உங்கள் முகவரி யிலிருந்து அனுப்பிய பார்சல் பிடிபட்டிருக்கிறது. அதில் சட்டவிரோத பொருட்கள் உள்ளன. உங்களுடைய ஆதார் எண்ணை அனுப்புங்கள், சரி பார்க்கிறோம் என்பார்கள். பின்னர், நம்முடைய ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி மிரட்டி பணம் கேட்பார்கள். இதில் எல்லா வயதினரும் பாதிக்கப்படுகின்றனர்.
பகுதிநேர வேலை
வேலை இல்லாத வர்கள், வேலை மாற நினைப்பவர்கள், கையில் உள்ள கொஞ்சம் பணத்தை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்கள்தான் இதற்கு பலிகடா ஆகிறார்கள். சமூக ஊடகங்களில் பகுதி நேர வேலை தொடர்பாக சின்ன விளம்பரங்கள் வரும். அதை க்ளிக் செய்தால் ஒரு வாட்ஸ்அப் லிங்க் அனுப்புவார்கள். இதில் இணைபவர்களை வகைப்படுத்தி டெலிகிராம் குரூப்பில் சேர்ப்பார்கள். இதில் சேர்ந்தபிறகு குறைந்தபட்சம் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை பணம் செலுத்தச் சொல்வார்கள். இந்த தொகை ஒவ்வொருவருக்கும் மாறும். பிறகு ஒரு டாஸ்க் கொடுப்பார்கள். அதில், கொஞ்சம் சம்பாதிப்பது மாதிரியான வாய்ப்பையும் தருவார்கள். நம்மை நம்ப வைத்து, இன்னும் அதிகமாக பணம் கட்டச் சொல்வார்கள். தொகை அதிகமாகிக் கொண்டே போனாலும், அதை ரிலீஸ் செய்ய மாட்டார்கள். இவ்வளவு உங்கள் கணக்கில் இருக்கிறது என காட்டுவார்களே தவிர பணம் தரமாட்டார்கள். இல்லையெனில், நாம் வேலையை தவறாக செய்துவிட்டோம் என்பார்கள்.
ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி
கையில் நல்ல முதலீடு வைத்திருப் பார்கள். அதை வைத்து இன்னும் மேலே வர வேண் டும் என நினைப் பார்கள்தான் இதில் ஏமாற்றப்படுகிறார்கள். இதை அய்பிஓ ஸ்கேம் (IPO scam) என்பார்கள். இந்த வகையான மோசடியாளர்கள், தனி இணையதளம் ஒன்றை வைத்திருப்பார்கள். நாம் பணம் கட்டி இணைந்தால் நமக்கென்று தனி பயனாளர் பெயர், கடவு எண்ணையும் தருவார்கள்.
ஒரு லட்சம் முதலீடு செய்தால், அதற்கு லாபம் கிடைத்த மாதிரி இணையதளத்தில் வரும். இதை நம்பி மக்கள் அடுத்தடுத்து முதலீடு செய்வார்கள். இதில் குறிப்பிட்ட தொகை மட்டும்தான் எடுக்க முடியுமே தவிர, முழுத்தொகையும் எடுக்க முடியாது. முழுத்தொகையும் எடுக்க வேண்டும் என்றால், பணம் கட்டச் சொல்வார்கள். மறுபடியும் பணம் கட்டினால், அந்த தொகை இன்னும் அதிகமாகிவிடும். இதை எடுக்க வேண்டும் என்பார்கள். இப்படி ஏதாவது சொல்லி ஏமாற்றிவிடுவார்கள். இதில், கடன் வாங்கி பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் நிறையப்பேர்.
ஓடிபி கொடுங்க
பாயிண்ட்ஸ் ரீடீம் பண்ண வேண்டும் அல்லது கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள் ளுங்கள் என்பதன் சுருக்கமே கேஒய்சி) அப்டேட் பண்ண வேண்டும் என ஏதோ ஒருவகையில் ஓடிபி கேட்டு கால் அல்லது மேசேஜ் பண்ணுவார்கள். ஓடிபி சொல்லவில்லை என்றால், வங்கிக் கணக்கு செயல்படாது என்பார்கள். இதனால் பயந்து கொண்டு ஓடிபி ஷேர் செய்வார்கள். அவர்கள் உடனே, வங்கி கணக்கிலிருந்து எல்லா பணத்தையும் எடுத்துவிடுவார்கள். இப்போதெல்லாம் முதலில் வருகின்ற ஓடிபி-யை ஷேர் செய்தாலே நம் முடைய வங்கிக் கணக்கை முழுமையாகக் கைப் பற்றிவிடுவார்கள்.
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழிதான். வருகின்ற ஓடிபியை படிப்பது. அந்த ஓடிபி எதற்கானது என்று இருக்கும்.
இப்படி ஓடிபி சொல்லி பணத்தை ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் சைபர் க்ரைமில் புகார் அளித் தால், வங்கியின் மூலமாக அந்த கணக்கை லாக் செய்து, மீண்டும் பணத்தைப் பெற வாய்ப்பு உள்ளது.
ஏமாற்றும் ஏபிகே ஃபைல்!
இது ஆண்ட்ராய்ட் ப்ரோகிராமிங் பைல். இந்த பைலை நேரடி யாகவோ அல்லது லிங்க் மூலமாகவோ அனுப்புவார்கள். அதை டவுன்லோடு செய்தால் எதுவும் ஓப்பன் ஆகாது. அடுத்த முறை க்ளிக் செய்தால்தான் இன்ஸ்டாலாகும். இது நமக்குத்தெரியாது. நமது போனை ஹேக் செய்துவிடும். பிறகு அது நம்ம வாட்ஸ்அப்பிலிருந்து நமக்குத் தெரிந்த அனைவருக்கும் இந்த ஏபிகே பைலை ஷேர் பண்ணும். நம் மொபைலுக்கு வர வேண்டிய அனைத்து ஓடிபிக்களும் மோசடியாளர்களுக்கு போகும். நம்முடைய மொபைல் போனையே அவர்கள்தான் இயக்குவார்கள். இந்த ஏபிகே மோசடி வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மோசடி மிகவும் ஆபத்தானது.
லோ லோ என அலையவைக்கும் லோன் ஆப் மோசடி!
இதுவும் பகுதி நேர வேலை ஏமாற்று போன்று தான். லோன் மேளா போட்டிருக் கிறோம் என மேசேஜ் அனுப்புவார்கள். லோனுக்கு நம் முடைய ஆவணங் களை வைத்து விண்ணப்பித்தோம் என்றால், விண்ணப்ப புகைப்படம், வாட்ஸ் அப் டிபி போன்றவற்றை எடுத்துக் கொள்வார்கள். சில ஆயிரங்கள் கடனும் கிடைக்கும். வட்டியோ மிக அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட நாள்களுக்குள் கடனைக் கட்டவில்லை என்றால், சமூக ஊடகப் பக்கங்களை முடக்கி விடுவோம், மார்பிங் போட்டோ அனுப்புவோம் என மிரட்டுவார்கள். நாம் பணம் கொடுத்தாலும், அதோடு விடமாட்டார்கள். கடைசி வரை கதறக் கதறப் பணம் பறித்துக் கொண்டே இருப்பார்கள்.
திருமண தகவல் மய்ய மோசடி & கிப்ட் மோசடி
இது இரண்டுமே ஏறக்குறைய ஒன்று தான். வெளிநாட்டில் உள்ள மாப்பிள்ளை/ பெண் மாதிரி சாட் பண்ணத் தொடங்குவார்கள். உங்களுக்கு கிப்ட் அனுப்பியிருக்கிறேன், அதை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்துவிட்டனர். விலை உயர்ந்த பரிசை அனுப்பியிருக்கிறேன். பணம் கட்டினால்தான் விடுவார்கள் என்பார்கள். பணம் கட்டினால் பணால்! இதில் ஆண் / பெண் இருவருமே ஏமாந்திருக்கிறார்கள்.
பிஸ்ஸிங் மோசடி (phishing Scam)
மின்னஞ்சல் முகவரிகளுக்கு பெரிய கம்பெனிகள் மூலமாக Redeem points களை பணமாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது வேறு விஷயம் சம்பந்தமாக என லிங்க் அனுப்புவார்கள். இதை ஓப்பன் பண்ணினால் ஏபிகே பைல் ஓப்பன் ஆகும். அது சத்தம்போடாமல் உங்கள் கணினியில் உட்கார்ந்துகொள்ளும். அனைத்து தகவல்களையும் திருடிவிடுவார்கள். கிட்டத்தட்ட முன்பு சொன்ன ஏபிகே பைல் மோசடி போன்றதே இதுவும்.
நான் அவனில்லை
சமூக ஊடகத்தில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருப்பவர் களைக் குறிவைத்து இந்த ஸ்கேம் நடக்கிறது. பிரபலமாக உள்ள அய்டிகளை போன்றே போலியான அய்டிக் களை உருவாக்குவார்கள். உண்மையான அய்டி யாரையெல்லாம் பின் தொடர்கிறதோ, அவர்களையும் பின் தொடர்வார்கள். பிறகு, நட்பு பட்டியலில் உள்ளவர்களிடம் அவசரம் என பணம் கேட்டு மேசேஜ் பண்ணுவார்கள். சமீபத்தில் நடிகர் செந்தில் இந்த மோசடியில்தான் ஏமாந்தார். இது எல்லா சமூக ஊடகத்திலும் நடக்கிறது.
சமூக ஊடக மோசடி
இது நிதி அல்லாத மோசடி. இதில் அதிகமாக பாதிக்கப்படக் கூடியவர்கள் பெண்கள்தான். ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்து போலியான சமூக ஊடக கணக்கைத் தொடங்குவார்கள். குறிப்பிட்ட இந்த பெண்ணின் எஸ்க்குளுசிவான வீடியோ, புகைப்படங்களைப் பார்க்க வேண்டுமானால், பணம் கட்டச்சொல்லுவார்கள். இப்படியான மோசடியை அந்த பெண்ணுக்குத் தெரிந்தவர்கள்தான் அதிகம் செய்கின்றனர். பழிவாங்க, மன உளைச்சல் ஏற்படுத்த இது செய்யப்படுகிறது.
‘‘இவை போன்று பலப்பல – எச்சரிக்கையுடன் ‘நவீனங்களை’ பயன்படுத்துக!’’
கி.வீரமணி