‘கேரளத்தில் தேவஸ்வம் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சூா் கூடல்மாணிக்யம் கோயிலில் ஊழியர்களின் பணிநியமனத்தில் தலைமைப் பூசாரிகளின் (தாந்திரி) ஜாதிய ரீதியிலான கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று தேவஸ்வம் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கே.பி.மோகன்தாஸ் தெரிவித்தார்.
சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூக ரீதியிலான இடஒதுக்கீடு மட்டுமே பின்பற்றப்படும் என்றும் அவா் கூறினார்.
ராமனின் தம்பியான பரதனை வழிபடும் பழைமையான கூடல்மாணிக்யம் கோயில், திருச்சூா் மாவட்டத்தின் இரிஞ்ஞாலக்குடா நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரு கழகக்காரர் (கோயில் சடங்குகளைப் புரியும் ஊழியர்) பணியிடங்கள் உள்ளன. தந்திரிகளால் ஒரு பணியிடமும், சட்ட விதிகளின்படி தேவஸ்வம் வாரியத்தால் மற்றொரு பணியிடமும் நிரப்பப்படுகின்றன.
அந்தவகையில், தேவஸ்வம் வாரியத்தால் கழகக்காரராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஈழவர் சமூகத்தைச் சோ்ந்த பாலு கோயிலில் பணியில் சோ்ந்தார். ஆனால், ‘பாலு பணியைத் தொடர அனுமதித்தால், நாங்கள் எங்களின் பணிகளைச் செய்ய மாட்டோம்’ என்று கோயில் அதிகாரியிடம் தாந்திரிகளான பார்ப்பனர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பாலு அலுவல் பணிக்கு மாற்றப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பாலு தனது தேவஸ்வம் பணியைக் கடந்த வாரம் ராஜிநாமா செய்தார்.
பாலு இடத்துக்குப் புதிய ஊழியரை நியமிக்கும் நடவடிக்கையை தேவஸ்வம் பணியாளர் தோ்வாணையம் தொடங்கியுள்ளது. ஈழவா் சமூகத்தைச் சேர்ந்த ஊழியரே மீண்டும் நியமிக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தேவஸ்வம் பணியாளர் தோ்வாணையத் தலைவா் கே.பி.மோகன்தாஸ் கூறுகையில், ‘தற்போது ராஜிநாமா செய்த பாலு பொதுப் பிரிவில் நியமிக்கப்பட்டவா். அடுத்த நியமனத்துக்கான நடைமுறை சமூக ஒதுக்கீட்டிலேயே மேற்கொள்ளப்படும். தொடா்ந்து, தேவஸ்வம் வாரியம் எவ்வித தாமதமுமின்றி பணி நியமன ஆணையை வழங்கும்.
தேவஸ்வம் நிர்வாகக் கமிட்டிக்குத் தெரியப்படுத்தாமல் பாலுவை அலுவல் பணிக்கு கோயில் அதிகாரி மாற்றியுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க தேவஸ்வம் வாரியத் தலைவா் உத்தரவிட்டுள்ளார்’ என்றார்.
ஈழவர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்ற ஒரு காரணத்துக்காக கோயில் தாந்திரிகள் (பூசாரிகள்) பாலு என்பவரை கோயில் பணியில் அமர்த்தியதற்காக உயர்ஜாதி திமிருடன் தேவஸ்வம் வாரியம் அதிகாரிகளை மிரட்டுவதும், அதற்குப் பணிந்து தேவஸ்வம் அதிகாரிகள் ஈழவச் சமுதாயத்தைச் சேர்ந்த பாலு என்பவரை வேறு பணிக்கு அமர்த்துவதும் ஏற்கத்தக்கதுதானா?
ஏற்கெனவே அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தொடர்பான வழக்கில் கேரள மாநில அரசு வெற்றி பெற்று, நியமனங்களும் நடைபெற்றுள்ள நிலையில், ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை அவமதித்திருப்பது கடும் குற்றச் செயலாகும்.
மாநில அரசும் இந்தச் செயலைக் கண்டித்துள்ள நிலையில், ஜாதி கண்ணோட்டத்தோடு நடந்து கொண்ட கோயில் தாந்திரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழா தமிழ்நாடு – கேரள அரசுகள் இணைந்து கொண் டாடப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில் இதை முக்கியமாகக் கருதி, தாந்திரிகள்மீது கேரள அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.